கும்பகோணத்தில் கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் என்ற ஒன்றிய அரசின் ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்பது முக்கியமான தீர்மானம்.
மூன்று முறை வன்முறை நடவடிக்கைகளுக்காக தடை செய்யப்பட்ட அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.; அத்தகைய வன்முறை அமைப்பைச் சேர்ந்தவர்கள் அரசுப் பணியில் சேரலாம்; ஆர்.எஸ்.எஸின் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று ஒன்றிய அரசு ஆணை பிறப்பிப்பது – கசாப்புக் கடைக்காரன் கையில் ஆட்டை ஒப்படைப்பதற்குச் சமமே!
காந்தியார் படுகொலைக்குப் பிறகு 1948-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. இந்தியாவின் தேசியக் கொடிக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
ஆர்.எஸ்.எஸ். பயிற்சிகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக்கூடாது என்று 1956-ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு. அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியிலும், கடந்த பத்தாண்டு கால மோடி ஆட்சியிலும் அந்தத் தடை நீடித்தது. ஆனால் 58 ஆண்டுகளாக இருந்துவந்த தடையை மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு 22.07.2024 அன்று நீக்கியது. 30.07.2024 அன்று உள்துறை அமைச்சரகம் அதனை அரசு இணையதளத்தில் வெளியிட்டது.
1966-ஆம் ஆண்டு இந்தத் தடை விதிக்கப்பட்டதற்கான காரணங்களை எதிர்க்கட்சியினர் சுட்டிக் காண்பிக்கிறார்கள். அப்போது, பசுவதைத் தடைச் சட்டத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று காங்கிரசுக்குள் சிலர் அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவர் காமராஜரிடம் வலியுறுத்தியிருக்கிறார்கள். அதற்கு அவர் உடன்படவில்லை. இந்த நிலையில்தான், டில்லியில் காமராஜர் வீட்டுக்கு தீவைக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் காமராஜர் வீட்டுக்கு தீவைத்து, காமராஜரை ஒரு பட்டப் பகலில் கொலை செய்ய முயன்றனர் (1.11.1966) என்ற கொடுஞ்செயல் தேசிய அளவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக்கூடாது என்ற தடை அப்போது விதிக்கப்பட்டது.
குஜராத் மாநிலத்தில் மோடி முதலமைச்சராவதற்கு முன்பு முதல் அமைச்சராக இருந்த கேசுபாய் படேல் அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸில் சேரலாம் என்று ஆணை ஒன்றைப் பிறப்பித்தார் (2001) ஆர்.எஸ்.எஸ். ஒரு சமுதாய இயக்கம்தான் அதில் அரசு ஊழியர்கள் உறுப்பினராக சேரலாம் என்று அன்றைக்குப் பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பேயும் குஜராத் அரசின் ஆணையை வழிமொழிகின்ற வகையில் கருத்துத் தெரிவித்தார். அப்பொழுது அது ஒரு பிரச்சினைப் புயலை உருவாக்கியது. அதன் பின்னர் அந்த ஆணை பின் வாங்கிக் கொள்ளப்பட்டது.
உண்மையைச் சொல்லப் போனால், ஆளும் பிஜேபியின் தாய் அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ். ஒன்றிய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட திட்டங்கள், செயல்பாடுகள் ஆர்.எஸ்.எஸ். தலைவரிடம் குறிப்பிட்ட இடைவெளியில் விளக்கப்பட வேண்டும் என்கிற அளவுக்கு அதன் உச்சம் இருந்து வருகிறது.
பிஜேபி நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்திய இராணுவத் துறை அதிகாரிகளே நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த நிகழ்வுகூட நடந்ததுண்டு.
ஆர்.எஸ்.எஸில் பணியாற்றியவர்கள்தான் பிஜேபியின் தேசிய செயலாளராக வர முடியும் என்று விதிமுறை உண்டு.
இந்தியாவின் அரசமைப்புச் சட்டமாக மனு தர்மத்தைக் கொண்டு வர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். குருநாதர் எம்.எஸ். கோல்வால்கர் ‘ஞான கங்கை’ நூலில் (Bunch of Thoughts) குறிப்பிடுகிறார்.
மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். குருநாதரின் கருத்து.
நாடாளுமன்றத்தில் பிஜேபி வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் குழுவில் ஆர்.எஸ்.எசைச் சேர்ந்தவர் ஒருவர் இருக்க வேண்டும் என்பது விதிமுறையே!
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று பிஜேபி சொல்வதெல்லாம் ஆர்.எஸ்.எஸின் கொள்கைதாம்.
இந்த நிலையில் சட்ட ரீதியாகவே ஆர்.எஸ்.எசைச் சேர்ந்தவர்கள் அரசுப் பணியில் உள்ளவர்கள் ஆர்.எஸ்.எஸின் செயல்பாடுகளில் ஈடுபடலாம் என்பது எவ்வளவு பெரிய அபாயகரம்!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு வளாகங்களுக்குள் ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்கள் நடத்தப்படக் கூடாது என்று முதல் அமைச்சராக இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரும், எம்.ஜி.ஆரும் வெளிப்படையாக அறிவித்து விட்டனர்.
பிற்போக்குத்தனமான அபாயகரமான எந்த நடவடிக்கையையும் எதிர்த்து முதல் குரல் கொடுப்பது தந்தை பெரியாரின் திராவிட மண்ணான தமிழ்நாடே!
இந்தப் பிரச்சினையிலும் அதிகாரப் பூர்வமாக திராவிடர் கழகம் தன் பொதுக் குழுவில், ஒன்றிய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி வழிகாட்டியுள்ளது. எல்லோரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் இந்தக் குரல் அகில இந்திய அளவில் எதிரொலிக்கும் என்பதில் அய்யமில்லை.