கலவரத்திற்குக் கத்தி தீட்டுவதா? தாஜ்மகால் சிவன் கோவிலாம் கல்லறையில் கங்கை நீரை ஊற்றியவர் கைது

viduthalai
4 Min Read

ஆக்ரா, ஆக. 5- தாஜ்மஹாலை ஹிந்துக் கோயில் என்று கூறி, அங்கு கங்கை நீரை ஊற்றியதாக இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மத உணர்வுகளை புண்படுத்திய குற்றச்சாட் டின்கீழ் அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. இருவரும் அகில பாரத ஹிந்து மகாசபை அமைப்பின் உறுப்பினர்கள் என்று அந்த அமைப்பு தெரிவித் துள்ளது.

இச்சம்பவம் தொடர் பாக, உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா நகர் காவல்துறை துணை ஆணையர் சூரஜ் குமார் ராய் கூறியதாவது: தாஜ்மஹாலுக்குள் 3.8.2024 அன்று சுற்று லாப் பயணிகள்போல நுழைந்த இரு இளைஞர்கள், தாங்கள் பாட்டிலில் வைத்திருந்த நீரை ஊற்றினர். இது குறித்து தாஹ்மஹாலில் பாதுகாப்புப் பணியில் இருந்த ஒன்றிய தொழிலக பாதுகாப்புப் படையினர் அளித்த எழுத்துபூர்வ புகாரின்கீழ் இருவரும் கைது செய்யப்பட்டனர். பாரதிய நியாய சன்ஹிதாவின் (பிஎன்எஸ்) 223 (அரசு ஊழியரின் உத்தரவுக்கு கீழ்படியாமை), 298 (மத வழிபாட்டுத் தலத்தை அவமதித்தல்), 299 (மத உணர்வை புண்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பான காட்சிப்பதிவு சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. வட மாநிலங்களில் சிராவண மாதத்தையொட்டி, கங்கை நதியில் இருந்து தீர்த்தம் எடுத்து, சிவன் கோயில்களில் ஊற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. ‘தாஜ்மஹால் சிவன் கோயில் என்பதால் கங்கை நீரை ஊற்றியதாக கைதான இருவரும் தெரிவித்துள்ளனர்.

வினேஷ் சவுதரி, சியாம் ஆகிய அந்த இருவரும் அகில பாரதிய ஹிந்து மகாசபை உறுப்பினர்கள்; அவர்களின் செயலால் பெருமை அடைவதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜாட் தெரிவித்தார். சில நாள்களுக்கு முன் தாஜ்மஹாலுக்கு தோளில் கங்கை நீர் கலசத்தை எடுத்து வந்த பெண் ஒருவர், அங்கு உள்ளே நுழைய முயன்றார். அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் பணக்காரர்கள் குடியுரிமையை துறப்பது
வரி வருவாயைப் படிப்படியாக சிதைக்கும்: காங்கிரஸ்

புதுடில்லி, ஆக. 5- உயர் திறன் கொண்டவர்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் இந்திய குடியுரிமையை துறப்பது வரி வருவாய் தளத்தை படிப்படியாக சிதைக்கும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் 3.8.2024 அன்று வெளியிட்ட பதிவில், ‘மாநிலங்களவையில் ஒன்றிய அரசு அளித்த தரவுகளின்படி, கடந்த 2023-ஆம் ஆண்டு 2.16 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். இது கடந்த 2011-ஆம் ஆண்டு இந்திய குடியுரிமையை துறந்த 1.23 லட்சம் பேருடன் ஒப்பிடுகையில் இரட்டிப்பாகும்.

இந்திய குடியுரிமையை துறந்த பலர், உயர் திறன் கொண்ட படித்த நபர்களாக உள்ளனர். உள்நாட்டில் திறன்வாய்ந்த தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை இருக்கும் வேளையில், உயர் திறன் கொண்டவர்கள் குடியுரிமையை துறப்பது நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த 3 ஆண்டு களில் 17,000-க்கும் மேற்பட்ட பெரும் பணக்காரர்கள் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தெளிவில்லாத வரிக் கொள்கைகள், நியாயமில்லாத வரி நிர்வாகம் ஆகியவை காரணமாக உயர் திறன் கொண்டவர்களும், பெரும் பணக்காரர்களும் இந்திய குடியுரிமையை துறந்திருக்கக் கூடும்.

வணிக நிறுவனங்களின் தலைவர்கள் சிங்கப்பூர், அய்க்கிய அரபு அமீரகம், பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு இடம்பெயர்வது அதிகரித்து வருகிறது. இது அடுத்த சில ஆண்டுகளில் நாட்டின் வரி வருவாய் தளத்தை படிப்படியாக சிதைக்கும் பொருளாதார ரீதியான கேலிக்கூத்தாகும்’ என்று கூறியுள்ளார்.

என்டிஏ குறித்த விவரங்கள்
வலைதளத்தில் இடம்பெறாதது ஏன்?
ஒன்றிய கல்வி அமைச்சருக்கு
திரிணமுல் காங்கிரஸ் கேள்வி

புதுடில்லி, ஆக. 5- நீட் தேர்வு உட்பட பல முக்கிய போட்டித்தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை நடத்தும் (என்டிஏ) குறித்த முழுமையான விவரங்கள் அதன் வலைதளத்தில் இடம்பெறாதது ஏன்’ என்று திரிணமுல் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட், உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதி மற்றும் ஒன்றிய அரசின் ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்கான நெட் தேர்வு முறைகேடுகள் பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் கடிதம் மூலம் இக் கேள்வியை திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சகாரிகா கோஸ் எழுப்பியுள்ளார். இந்தக் கடிதத்தை தனது எக்ஸ் பக்கத்தில் இணைத்து வெளியிட்ட பதிவில் சகாரிகா கோஸ் கூறியிருப்பதாவது: நீட் உள்பட தேசிய அளவிலான 17 போட்டித் தேர்வுகளை என்டிஏ நடத்தி வரும் நிலையில், அந்த அமைப்பு குறித்த போதிய விவரங்கள் அதன் வலைதளத்தில் இடம்பெறவில்லை. என்டிஏ-யில் இடம்பெற்றிருக்கும் அதிகாரிகள் யார்? யாரெல்லாம் என்டிஏ வாரிய உறுப்பினராகளாக உள்ளனர்? அதன் ஆண்டு

அறிக்கை எங்கே?

வரும் காலங்களில் நடத்தவிருக்கும் போட்டித் தேர்வுகள் மீது மக்களின் நம்பிக்கையைப் பெற, இந்தத் தகவல்களை தனது வலைதளத்தில் என்டிஏ வெளியிடுவது அவசியமாகும். இதுதொடர்பாக மாநிலங் களவையில் கேள்வி எழுப்பி, பதில் கிடைக்காததால் ஒன்றிய அமைச்சருக்கு தற்போது கடிதம் எழுதியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *