கண்ணூர், ஆக. 5- வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணிகள் 5-ஆவது நாளாக 3.8.2024 அன்றும் தொடா்ந்தன. மீட்புப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
வயநாட்டில் கடந்த 30.7.2024 அன்று பெய்த கனமழையால் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகளில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனா். மேலும், மண்ணில் புதையுண்டவா்களின் உடல்களை மோப்ப நாய்கள், மனிதா்களை மீட்கும் ரேடார், ஜிபிஎஸ் தொழில்நுட்பம், ஆளில்லா விமானங்கள், ஹெலிகாப்டா்கள் உதவியுடன் மீட்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியதாவது:
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல் மலையில் மட்டும் 866 காவல்துறை அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடு பட்டுள்ளனா். இதுதவிர ராணுவம், தீயணைப்புத்துறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வலா்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சோ்ந்த1,500-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வயநாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
தற்காலிமாக அமைக்கப்பட்ட இரும்புப் பாலத்தின் மூலம் 1,000 போ் மீட்கப்பட்டனா். 5-ஆவது நாளாக தொடரும் இந்த மீட்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது.
வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டதற்கான மூல காரணத்தை கண்டறிய தீவிர விசா ரணை நடத்தப்படவுள்ளது. அதேபோல், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து பேரிடா் முன்னெச்சரிக்கை நடைமுறைகளை மேம்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது. இதற்காக கோட்டயத்தில் அமைக்கப் பட்டுள்ள பருவநிலை மாற்றம் குறித்த ஆய்வு நிறுவனம் பேரிடா் தொடா்பான கொள்கைகளை வகுக்க அரசுக்கு ஆலோசனை வழங்கவுள்ளது என்றார்.
மீட்பில் பங்காற்றிய
‘ஹேம் ரேடியோ’
நிலச்சரிவில் சிக்கியவா்களை மீட்கும் பொருட்டு கல்பெட்டா நகரில் அமைந்துள்ள ஆட்சியா் அலவலகத்தின் தரை தளத்தில் ஹேம் ரேடியோ எனப்படும் வானொலி அமைப்பை தன்னார்வலா்கள் ஏற்படுத்தினா். இந்த வானொலியின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகவல்கள் அனுப்பப்பட்டு மீட்புப் பணிகள் விரைவாக மேற்கொள் ளப்பட்டன.
கைப்பேசி இணைப்புகள் மூலம் சில பகுதிகளை மட்டுமே தொடா்புகொள்ள முடிந்த நிலையில் ‘ரிசீவா்கள்’ அமைக்கப்பட்டு ‘டிரான்ஸ்மிட்டா்கள்’ மூலமாக பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்த தகவல்கள் மீட்புப் பணிக்குழுவினருக்கு அனுப்பப்பட்டது.
உடல்தகனத்துக்கான
விதிமுறைகள் வெளியீடு:
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில் உயிரிழந்தோரின் உடல்களை தகனம் செய்வதற்கான விதிமுறைகளை பேரிடா் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ளது.அதில், ‘உயிரிழந்த நபா் அல்லது அவரின் உடல்பாகங்களுக்கு தனி குறியீட்டு எண்களை ஒதுக்க அறிவுறுத்தப்படுகிறது. அந்த எண்களை உயிரிழந்தவரின் ஒளிப்படங்கள், காணொலிகள் மற்றும் அவரது உடைமைகளில் குறிப்பிட வேண்டும். உயிரிழந்தவா்களை அடையாளம் காண முடியவில்லை எனில் மாவட்ட நிர்வாகத்திடம் உடல்களை காவல்துறையினா் ஒப்படைக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.
ராணுவத்தின் தரைப்படையில் கவுரவ லெப்டினன்ட் கா்னல் பதவியில் உள்ள மலையாள நடிகா் மோகன் லால், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 3.8.2024 அன்று ராணுவ உடையில் பார்வையிட்டார்.
பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘வயநாட்டில் பேரழிவின் தாக்கம் எவ்வளவு பெரியது என்பதை நேரில் பார்த்த பின் அறிந்துகொண்டேன். நான் அங்கம் வகிக்கும் விஸ்வசாந்தி அறக்கட்டளையின் சார்பில் நிவாரணப் பணிகளுக்கு ரூ.3 கோடி வழங்கப்படும்’ என்றார்.
கருநாடக அரசு சார்பில்
100 வீடுகள்
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட் டோருக்காக கருநாடக அரசு சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும் என்று கருநாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவா், ‘வயநாட்டில் நிலச்சரி வால் பாதிக்கப்பட்டவா்களுக்கு 100 வீடுகள் கட்டித் தரப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் உறுதி அளித்திருக்கிறேன். நாம் அனைவரும் ஒன்றுபட்டு, மறு கட்டமைப்பில் ஈடுபட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இத் தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த ராகுல் காந்தி, ‘மறுவாழ்வைக் கட்டமைக்கும் பணியில் இது மிகப்பெரிய நடவடிக்கையாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.