போபால், ஜூலை27– மத்திய பிரதேசத்தில் தனியார் பள்ளியில் ஆங் கிலத்தில் Poem படிப்பதற்கு பதில் சமஸ்கிருதத்தில் பகவத்கீதை வரிகளை கூறிய மாணவரிடம் இருந்து ஒலிவாங்கியை பிடுங்கிய பள்ளி முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு மோகன் யாதவ் என்பவர் முதலமைச்சராக உள்ளார். மத்தியப் பிர தேச மாநிலம் குணா பகுதியில் கிருத்துவ மிஷனரிக்கு சொந்தமான தனியார் ஆங்கில வழி பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் பெயர் வந்தனா கான்வென்ட்.
இந்த பள்ளியின் முதல் வராக கேத்ரின் என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் பள்ளியில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்றனர்.
அப்போது பள்ளி மாணவர் ஒரு வர் ஆங்கிலத்தில் Poem சொல்வதற்கு பதில் சமஸ்கிருத மொழி யில் பகவத் கீதையை கூறியுள்ளார். இதனை யாரும் எதிர் பார்க்கவில்லை. இதை யடுத்து அங்கிருந்த பள்ளி முதல்வர் கேத்ரின் உடனடியாக மாணவரிடம் இருந்து ஒலிவாங்கியை பிடுங்கி உள்ளார். இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. மேலும் இந்த விவகாரம் சர்ச்சையானது. இதனால் பள்ளிக்கு எதிராக போராட்டம் வெடித்தன.
ஏபிவிபி எனும் அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் பள்ளி முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பஜனை பாடல்கள் பாடியதோடு, பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக முழக்கமிட்டனர். அதுமட்டுமின்றி பள்ளி முதல்வர் கேத்ரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் இந்து மத உணர்வை புண்படுத்திவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுத்தால் தான் போராட்டத்தை கைவிடு வோம் என்று கூறினர்.
இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். காவல் துறையினர் ஏபிவிபியை சேர்ந்தவர்களை சமாதானம் செய்து கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கலைந்து செல்வதாக பிடிவாதமாக கூறியதோடு, பள்ளி முதல்வர் கேத்ரினுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.
இதையடுத்து கோத்வாலி நகர காவல்துறையினர் பள்ளி முதல்வர் கேத்ரின் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதன்பிறகு போராட்டம் என்பது முடிவுக்கு வந்தது.
இதுபற்றி குணா பகுதியின் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மன்சிங் தாகூர் கூறுகையில், ”மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பள்ளி முதல்வருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.