ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பு மாநிலம் தழுவிய அளவில் ஆகஸ்ட் 1 இல் இடதுசாரிகள் மறியல்

viduthalai
3 Min Read

சென்னை. ஜூலை 27– இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பால கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) லிபரேஷன் மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், தனது ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் கட்சிகளை மட்டும் திருப்திப்படுத்தி, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைவஞ்சித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய புயல், மழை வெள்ள நிவாரணம், மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களுக்கான எந்த நிதியையும் ஒதுக்காமல், தமிழ்நாடு என்ற பெயரைக் கூட இடம்பெறச் செய்யாமல் மக்களை ஒன்றிய அரசு ஏமாற்றியுள்ளது.

நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சிறு, குறு தொழில்களைப் பாதுகாக்க நிவாரணம் ஏதும் இல்லை. ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டையும், தமிழ்நாடு விரோதப்போக்கையும் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) லிபரேஷன் ஆகிய இடதுசாரி கட்சிகளின் சார்பில் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசு அலு வலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூன்று குற்றவியல் சட்டங்கள்
தமிழ்நாடு வழக்குரைஞர்கள் டில்லியில் ஆர்ப்பாட்டம்: எம்.பி.க்கள் ஆதரவு

புதுடில்லி, ஜூலை. 27- 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாடு வழக்குரைஞர்கள் டில்லியில் நேற்று (26.7.2024) ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கண்டன ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசு நிறைவேற்றிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டங்களை திரும்பப்பெறுமாறு பல கட்சிகள் மற்றும் அமைப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டமைப்பும், தமிழ்நாடு வழக்குரைஞர்கள் சங்கமும் இணைந்து அந்த சட்டங் களை திரும்பப்பெற வலியுறுத்தி டில்லி ஜந்தர் மந்தரில் நேற்று (26.7.2024) கண்டன ஆர்ப்பாட் டம் நடத்தின.
போராட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் முரளி பாபு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வழக்குரைஞர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

திருமாவளவன்

போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வில்சன், கிரிராஜன், என்.ஆர். இளங்கோ, கோபிநாத், காங்கிரஸ் உறுப்பினர் சசிகாந்த் செந்தில், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுஸ்மிதா தேவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.

திருமாவளவன் பேசும் போது, “உடன்கட்டை ஏறுதல், குழந்தைகள் திருமணம் போன்றவற்றை தடுத்தது எல்லாம் வெள்ளையர்களின் சட்டத்தால்தான். காலனி ஆதிக்கத்தை தகர்ப்போம் என்று பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். இது அவர்களது நோக்கம் அல்ல. ஸநாதனம் ஆக்குவதுதான் அவர்களது நோக்கம். கடந்த 100 ஆண்டுகளாக அவர்கள் ஸநாதனத்தை பலப்படுத்தியதன் காரணமாகவே 3 முறை தொடர்ந்து ஆட்சியில் இருக்கிறார்கள். இந்த சட்டங்களின் பெயர்களை மட்டுமல்ல தேசத்தின் பெயரையே இந்து ராஷ்டிரம் என மாற்றுவார்கள். தமிழ்நாடு ஒரு தீவு போல இருக்கிறது. 3 சட்டங்கள் மட்டுமல்ல, ஹிந்தி திணிப்பு, ஸநாதனம் ஆகியவற்றையும் தமிழ்நாடு மட்டுமே எதிர்க்கிறது. எனவே குற்றவியல் சட்டங்களை பாதுகாக்க வேண்டும் என்பதைவிட அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க நாம் குரல் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

இந்த 3 சட்டங்களுக்கும் எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது என்றும், தொடர்ந்து போராட்டங்கள் நடத்துவது என்றும் ஆர்ப்பாட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *