பெங்களூரு, ஜூலை 25- நீட் நுழைவுத் தேர்வில் இருந்து கருநாடகாவுக்கு விலக்கு அளிக்கக்கோரும் தீர்மானத்தை அம்மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்வதற்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்குமாறு தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல கருநாடகாவிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது
எனவே முதலமைச்சர் சித்தராமையா 23.7.2024 அன்று பெங்களூருவில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அனைவரின் ஒப்புத லுடன், நீட் நுழைவுத் தேர்வில் இருந்து கருநாடகாவுக்கு விலக்கு மற்றும் தேசிய அளவில் அந்த தேர்வை ரத்து செய்யக்கோரும் தீர்மானத்தை சட்டப் பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
சித்தராமையா விளக்கம்: பின்னர் முதலமைச்சர் சித்தராமையா 23.7.2024 அன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் கருநாடகாவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்ற முடிவெடுத்துள்ளோம். மேலும் கருநாடக அரசே பொது நுழைவுத் தேர்வு நடத்தி, 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்த இருக்கிறோம். இவ்வாறு முதலமைச்சர் சித்தராமையா கூறினார்.