உ.பி. பிஜேபி ஆட்சிக்கு சரியான கடிவாளம் உணவகங்களில் உரிமையாளர் பெயர்களை எழுத கட்டாயப்படுத்தக் கூடாது : உச்சநீதிமன்றம் உத்தரவு

Viduthalai
2 Min Read

புதுடில்லி, ஜூலை 23 வட மாநிலங்களில் சிவ பக்தர்கள் ஆண்டுதோறும் மேற்கொள்ளும் காவடியாத்திரை (கன்வர் யாத்ரா) நேற்று (22.7.2024) தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெற உள்ளது. கங்கை நதியை ஒட்டியுள்ள புனித தலங்களுக்கு சிவ பக்தர்கள் நடைப்பயணமாக சென்று அங்கு கலசங்களில் நீரை சேகரித்து வந்து தங்கள் ஊர்களில் உள்ள சிவவினை வழிபடுவது வழக்கம்.
இந்த யாத்திரையின்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை கருத் தில் கொண்டு யாத்திரை பாதையில் உள்ள உணவகங்களில் அவற் றின் உரிமையாளர் மற்றும் ஊழியர்களின் பெயர்களை எழுதி வைக்க யோகி தலைமையிலான உ.பி. அரசு உத்தர விட்டது.
இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பாஜகவின் கூட்டணிக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. முஸ்லிம் கடைகளை பக்தர்கள் தவிர்ப்பதை உறுதிப்படுத்தவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஏஅய்எம்அய்எம் கட்சியின் தலைவர் அசதுதீன் ஒவைசி குற்றம்சாட்டினார்.

உ.பி. அரசின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என். பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று (22.7.2024) விசாரணைக்கு வந்தன.
அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், “என்ன உணவு கிடைக்கிறது என்ற அடிப்படையில்தான் நாம்ஓட்டலுக்கு செல்கிறோம். யார்பரிமாறுகிறார்கள் என்ற அடிப்படையில் அல்ல. இந்துக்கள் நடத்தும் சைவ உணவகங்களில் முஸ்லிம் ஊழியர்கள் இருக்கலாம். அங்கு சாப்பிட மாட்டேன் என்று நான் கூறமுடியுமா? இதுபோன்ற உத்தரவுமுன்னெப்போதும் பிறப்பிக்கப்பட்டதில்லை. இந்த உத்தரவுக்கு சட்டப்பின்புலம் இல்லை. எந்த சட்டமும் காவல்துறைக்கு இத்தகைய அதிகாரம் கொடுக்கவில்லை” என்றார்.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், “பக்தர்களுக்கு அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப சைவ உணவு கிடைப்பதையும் அவற்றின் தரத்தையும் அதிகாரிகள் உறுதி செய்யலாம். ஆனால் அந்த நோக்கத்தை இந்த உத்தரவு மூலம் அடைய முடியாது. இந்த உத்தரவை அனுமதித்தால் அது இந்திய குடியரசின் மதச்சார்பின்மையை பாதிக்கும். இந்த வழக்கை வரும் 26.7.2024க்கு ஒத்திவைக்கிறோம். அதுவரை உ.பி. உத்தரவை நிறுத்தி வைக்கிறோம். உணவக உரிமையாளர் மற்றும் ஊழியர்களின் பெயரை எழுதி வைக்கும்படி யாரையும் கட்டா யப்படுத்தக் கூடாது” என்று தெரிவித்தனர். மேலும் இந்த மனு தொடர்பாகவிளக்கம் கேட்டு உ.பி., உத்தராகண்ட் மற்றும் மத்திய பிரதேச அரசுகளுக்கு தாக்கீது அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *