சென்னை, ஜூலை 21- இன்றைக்கு ஓடிடி பிளாட் ஃபார்மிற்கு ஒரு ரெகுலேசன்தான் இருக்கிறது. சென்சார் இங்கே வரமாட்டார்கள். அதனால், ஒரு புதிய சிந்தனைகளைச் சொல்வதற்கு இந்த ஓடிடி பிளாட்ஃபார்ம் மிகவும் வாய்ப்புள்ளதாக இருக்கிறது என்று இனமுரசு சத்யராஜ் அவர்கள் கூறினார்.
இன்று (21.7.2024) சென்னை பெரியார் திடல் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களால் தொடங்கப்பட்ட பெரியார் விஷன் ஓடிடி நிகழ்வில் பங்கேற்ற இனமுரசு சத்யராஜ் அவர்கள் வாழ்த்துரையாற்றினார். அவரது வாழ்த்துரை வருமாறு:
பெரியார் பெருந்தொண்டர்கள் நண்பர்கள் அனை வருக்கும் வணக்கம்!
பகுத்தறிவு– மனவளம் – உடற்பயிற்சி அனைத்திற்கும் ஆசிரியர்!
தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அய்யா அவர்கள் எங்களுக்குப் பகுத்தறிவு ஆசிரியர் மட்டுமல்ல, அவருடைய வாழ்வியல் சிந்தனையை படித்ததற்குப் பிறகு, எங்களுடைய மன வளத்திற்கும் அவர்தான் ஆசிரியர்.
நான், நாற்காலியில் இருந்து எழுந்திருக்கும்பொழுது கையை ஊன்றித்தான் எழுந்திருக்கின்றேன். ஆனால், ஆசிரியர் அவர்கள், அப்படியே எழுந்திருக்கின்றார். அதனால், உடற்பயிற்சிக்கும் அவர்தான் ஆசிரியர்.
இன்றைக்கு உலகம் முழுவதும் என்ன பிரச்சினை பேசப்படுகின்றது என்றால், ஒரே ஸ்ட்ரெஸ், டிப்ரசன், ேஹங் சைட்டுங்க என்று சொல்லி, இதைத்தான் கார்ப்பரேட் சாமியார்கள் எல்லாம் காசு பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன் – நீங்கள் எந்தக் கார்ப்பரேட் சாமியாரிடமும் போகவேண்டாம்; ஆசிரியரின் ”வாழ்வியல் சிந்தனை”யைப் படித்தீர்களேயானால், உங்களிடம் உள்ள டிப்ரெசன் எல்லாம் சரியாகிப் போய்விடும்.”
திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் கனிமொழி கருணாநிதி அவர்களைப்பற்றி சொல்லும்போது,
‘நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுவதும் நடை பெற்றது. குறிப்பாக சில தொகுதிகளைப்பற்றித்தான் நாம் விசாரிப்போம். எனக்கு ஆயிரம் விளக்குத் தொகுதியில்தான் ஓட்டு. அங்கே நடைபெற்ற சட்டமன்றத் தொகுதி தேர்தலில் தோழர் டாக்டர் எழிலன் வெற்றி பெற்றுவிடுவார் என்று தெரியும்.
நிச்சயமாக வெற்றி பெற்றுவிடுவார்
என்று நமக்குத் தெரியும்!
ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் என்னுடைய ஆர்வமெல்லாம் கோயம்புத்தூர் என்னாயிற்று? கோயம் புத்தூர் என்னாயிற்று? என்றுதான் கேட்பேன். தூத்துக்குடி தொகுதியைப்பற்றி கவலைப்படவில்லை. ஏனென்றால், நிச்சயமாக அங்கே தோழர் கனிமொழி கருணாநிதி வெற்றி பெற்றுவிடுவார் என்று நமக்குத் தெரியும்.
ஆனால், வடநாடு முழுவதும் என்ன கேட்டு இருப்பார்கள் என்றால், ”க்யா, தூத்துக்குடி கியாகே?” என்றுதான்.
ஏனென்றால், அவர்களுக்கெல்லாம் யாராவது வெற்றி பெற்றாலும் பரவாயில்லை; அவர் மட்டும் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குள் வரக்கூடாது என்று நினைத்தார்கள்.
ஏனென்றால், அவர் ஒருவர் வந்தாலே, நாடாளுமன்றத்தையே ஆட்டி வைத்துவிடுகிறார்.
ஜூட் போல்தாகே நகி, சச்சு போல்தாகே!
தூத்துக்குடி தொகுதியில் அவர்தான் முன்னணியில் இருக்கிறார்; இவரை எதிர்த்துப் போட்டியிட்டவர்களுக்கு டெபாசிட் போய்விடும் போலிருக்கிறது என்றவுடன்,
”க்யா போல்தாகே, ஜூட் போல்தாகே!” என்றனர்.
ஜூட் போல்தாகே நகி, சச்சு போல்தாகே!
சச்சு போல்தாகே என்றால், உண்மை இதுதான் என்று அர்த்தம்.
அந்தக் காலத்தில் ராஜேஷ்கண்ணா நடித்த ஹிந்தித் திரைப்படத்தைப் பார்த்தோம். சச்சா ஜூட்டா என்று அந்தத் திரைப்படத்தின் தலைப்பு.
சச்சா என்றால் உண்மை; ஜூட்டா என்றால், பொய்.
கனிமொழி அவர்கள் வெற்றி பெற்றது பொய்யான செய்தியாக இருக்கக்கூடாதா? என்று நினைத்தார்கள்.
இரும்புப் பெண்மணி என்பதற்கு
முழுத் தகுதியானவர்!
நம்முடைய பெருமைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் – இரும்புப் பெண்மணி என்று அவரை சொன்னார்கள். அதற்கு முழுத் தகுதியானவர் அவர்.
”ஓடிடி பிளாட் பார்ம்” என்பது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான விசயமாகும்.
சினிமாவில், தணிக்கைக்கு (சென்சார் போர்டு) என்பது, நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் காலத்திலிருந்து பெரிய பிரச்சினையாக இருக்கிறது. பராசக்தியில் ஆரம்பித்து, ‘தோழர் சேகுவரா’ என்று ஒரு திரைப்படம் நடித்திருக்கிறேன். அதுவரைக்கும் பெரிய பிரச்சினைதான்.
‘பராசக்தி’ திரைப்படத்தில் வெட்டப்பட்ட வசனங்கள் அளவில்லாத வசனங்கள்.
அதேபோன்று, மக்கள் திலகம் ‘அன்பே வா’ திரைப்படத்தில், ஒரு பாடலில் ”உதய சூரியனின் பார்வையிலே, உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே” என்ற வரி இருக்கும். ஆனால், தணிக்கைக் குழுவில், ”உதயசூரியன்” என்ற வார்த்தையை சொல்லக்கூடாது என்று சொல்லி, ”புதிய சூரியனின் பார்வையிலே” என்று வரும்.
அதேபோன்று, ‘பெற்றால்தான் பிள்ளை’ திரைப்படத்தில், ”மேடையில் முழங்கு அறிஞர் அண்ணாபோல்” என்று வரும். அதை சென்சாரில் கட் பண்ணி, ”மேடையில் முழங்கு திரு.வி.க.போல்” என்று வரும்.
இதிலேயே தி.மு.க. நன்றாக வளர்ந்தது. ஏனென்றால், உதட்டசைவு நன்றாகத் தெரியும். அறிஞர் அண்ணாபோல் பாடுவார்; திரு.வி.க.போல் என்றால் தெரியாதா?
இந்தக் கோபத்திலேயே தி.மு.க. வளர்ந்தது.
பாட்டில் அப்படியே இருக்கும். திரைப்படத்தில் கட் செய்துவிட்டால், கோபம் அதிகமாகத்தானே வரும்.
அதனால், உதயசூரியனுக்குப் பத்து ஓட்டுப் போடுகி றவர்கள், எண்ணிக்கையில் அதிகமாகி நூறு ஓட்டு குத்துவார்கள். ஏனென்றால், இவையெல்லாம் என்னுடைய மாணவப் பருவத்தில் நடைபெற்றது. எங்களுக்கெல்லாம்கூட அந்தக் கோபம் வந்தது.
ஒரு புதிய சிந்தனைகளைச் சொல்வதற்கு ஓடிடி பிளாட் பார்ம் மிகவும் வாய்ப்புள்ளதாகும்!
இன்றைக்கு ஓடிடி பிளாட்பார்மிற்கு ஒரு ரெகுலேசன்தான் இருக்கிறது. சென்சார் இங்கே வரமாட்டார்கள். அதனால், ஒரு புதிய சிந்தனைகளைச் சொல்வதற்கு இந்த ஓடிடி பிளாட் பார்ம் மிகவும் வாய்ப்புள்ளதாக இருக்கிறது.
இங்கே வந்தபொழுது அய்யா ஆசிரியர் அவர்கள் சொன்னார், பெரியார் திரைப்படத்தை டிஜிட்டலைஸ் செய்திருக்கிறார்கள் என்று. இப்பொழுது மீண்டும் ரிலீஸ் செய்தால், மிகவும் பரபரப்பாக இருக்கும்.
‘பெரியார்’ திரைப்படம் டிஜிட்டலைஸ்!
‘பெரியார்’ திரைப்படம் ரிலீஸ் ஆகும்போது, திரையரங்குகள் முன்பு கலாட்டா செய்வார்கள் என்று நினைத்திருந்தோம். கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்ததால், பயந்து போய்விட்டார்கள். இன்றைக்கும் அந்த பயம் இருக்கிறது. நம்முடைய தளபதி அவர்கள்தான் முதலமைச்சராக இருக்கிறார்.
‘பெரியார்’ திரைப்படத்தை டிஜிட்டலைஸ் செய்து மீண்டும் வெளியிடும்பொழுது, தயவு செய்து யாராவது திரையரங்கு முன்பு பிரச்சினை செய்யுங்கள்; ஏனென்றால், நாங்கள் எதிர்ப்பில்தான் வளருவோம். எங்களுக்கு எதிர்ப்பு இருந்தால்தான் நன்றாக இருக்கும்.
தலைவர் கலைஞர் அவர்களைப்போல, இப்பொழுதுள்ள நம்முடைய முதலமைச்சர் தளபதி அவர்கள் இன்னும் வேகமானவர்.
இருந்தாலும் பரவாயில்லை, திரைப்படம் வரும்பொழுது பிரச்சினை செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பெரியார் அவர்களை விஞ்ஞான மயப்படுத்துவது என்பது இன்றைக்கு மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால், இன்றைய இளைஞர்களிடம் இது போய் சேரவேண்டும்.
நிறைய இளைஞர்கள் யூடியூப் பிளாட்பார்ம், தோழர் மதிமாறன் போன்றவர்கள், தோழர் அருள்மொழி அவர்கள் எல்லாம் பல ஆண்டுகளாகப் பின்னி எடுக்கிறார்கள்.
இன்றைக்குத் தோழர் மதிவதனி போன்றவர்கள் திடலில் இருப்பவர்கள்தான். இன்னும் ஒரு சின்ன பெண் எல்லோரையும் வறுத்தெடுக்கிறார் – அந்தப் பெண்ணின் பெயர் நர்மதா, மிகவும் அருமையாகப் பேசுகிறார்.
இயக்குநர் ஞானராஜசேகரன் அவர்களுக்கு நன்றி!
நம்முடைய இயக்குநர் ஞானராஜசேகரன் அவர்களுக்கு மறுபடியும் நான் ஒருமுறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் – பெரியாராக நடிக்கின்ற வாய்ப்பைக் கொடுத்ததற்கு. அவ்வளவு சிறப்பாக அந்தத் திரைப்படத்தை எடுத்திருந்தார். அவர் ஒரு அய்.ஏ.எஸ். அதிகாரி.
இன்றைக்கு ஓடிடி பிளாட்ஃபார்ம் என்பது மிகவும் அவசியமானதாகும். பெரியார் திடலில் நடைபெறுகின்ற எந்த முக்கியமான நிகழ்ச்சியாக இருந்தாலும், பெரியார் திடல் என்ற தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கல்லூரியில் ஒரு மாணவனாக இருக்கும் என்னை தவறாமல் அழைத்ததற்கு என்னுடைய நன்றியை கூறி விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு இனமுரசு சத்யராஜ் அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.