ஊசிமிளகாய்
உ.பி.யில் சாமியார் ‘‘ஆன்மிகக் கூட்டம்’’ ஒன்று நடத்தி (ஹத்ராஸ் என்ற இடத்தில்) சுமார் 121 பேருக்குமேல் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த கொடுமைகள் இன்று அங்கும் மற்றும் இந்தியாவில் மற்ற மாநிலங்களில் காற்றில் கரைந்த செய்தியாக ஆக்கப்பட்டுவிட்டது!
உ.பி.யில் நடப்பது காவி சாமியார் ஆட்சி அல்லவா? மற்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், விஷச் சாராயம் குடித்து இறந்து போனவர்களுக்குரிய கொடுமைக்கு கடும் நடவடிக்கை எடுக்கும் ஆட்சிகள் அதிவேகமாக செயல்பட்டாலும் குறை சொல்லும் ஊடகங்கள் ‘மவுன சாமியார்களாகி‘ விட்டன! (அல்லது அல்வா கொடுத்து அதை மெல்ல மென்று சுவைக்கின்ற நிலையில்) அந்த மேனாள் போலீஸ்காரர் சாமியார் ‘போலோ பாபா‘ சாமியார்மீது குற்றப் பத்திரிகையோ, வழக்கோ போடப்படாத நிலை – மற்ற ‘சப்பை‘கள்மீது வழக்குப் பதிவு!
முன்பு ஓடி ஒளிந்த இந்த போலோ பாபா – போலோ என்றால், ஹிந்தியில் ‘‘முழக்கமிடுங்கள் பாபா’’ என்ற திட்டமிட்ட புனை பெயருடன் மக்கள் அறியாமை – பக்தியை முதலீடாக்கியுள்ள அவர், இப்போதுதான் 121 பக்தர்கள் உயிர் பலியானதற்கு அருமையான காரணம் கண்டு சொல்லிவிட்டார்!
இதற்காகவே அவருக்கு தேசிய பட்டங்களில் ஒன்றை அளிக்கலாம்.
அவர் ஆக்ராவில் நேற்று (18.7.2024) அதற்கான காரணத்தைச் சொல்லியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் காஸ்கஞ்ச் என்ற இடத்தில் உள்ள அவரது ஆஸ்ரமத்தில் நிருபர்களிடம் கூறும்போது,
‘‘பிறக்கும் ஒவ்வொருவரும் இறுதியில் இறக்கத்தான் வேண்டும். மரணம் என்பது விதி‘‘ என்றார்.
‘‘தவிர்க்க முடியாத ஒன்று நடப்பதை யார்தான் தடுக்க முடியும்? எல்லாம் அவரவர் விதிப்படியே. எனவே, கூட்ட நெரிசலில் 121 சாவுகள் விதியின் பயன்!‘‘
– எப்படிப்பட்ட அறிவுக் கொழுந்தின் விளக்கம் இது! பார்த்தீர்களா?
இவரையே நாட்டின் சட்ட அமைச்சர், பிளஸ் மருத்துவ அமைச்சராக ஆக்கினால், காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றை மூடிவிட்டு, நோய் வருவதோ, விபத்து ஏற்படுவதோ, கொலைகள் நடந்து உயிர்ப் பறி போவதோ சர்வமும் விதிப் பயன்; யார்தான் தடுக்க முடியும் என்று சமாதானம் கூறுவார்.
இந்தத் துறைகள் – இதற்கான சட்டக் கல்லூரிகள் எல்லாவற்றையும் இழுத்து மூடிவிடலாம்!
இவரையும் இந்த உ.பி. சாமியார் அரசு போய், அடுத்துவரும் மாற்று அரசு தண்டிக்கும்போது மரண தண்டனையாகவும் கூட அது இருக்கக்கூடும், யார் அறிவார்? எல்லாம் விதிப் பயன்படியே நடந்தது என்று அவருக்காக வருந்தி, கண்ணீர் விடுபவர்கள் கூறி, எளிதில் எவரும் குற்ற வழக்கு சிக்கலிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளலாமே!
என்னே கேவலம்! இதுதான் காவிகளின் தத்துவார்த்தம் – மனிதநேயத்திற்கு எதிரான மமதையின் நிர்வாண டான்ஸ், புரிந்துகொள்ளுங்கள்!
அதற்காகவே பாவம் – புண்ணியம், போன ஜென்மம், நரகம் – சொர்க்கம், ஆத்மா கண்டுபிடிப்புகள்.
அதன் பெற்றெடுப்பே விதி!
என்னே, இமாலயப் புரட்டு!
கொடுமையோ, கொடுமை!
அரசமைப்புச் சட்டத்தின் 51–ஏ(எச்) அடிப்படைக் கடமைகள் என்ன குறட்டை விட்டுத் தூங்குகிறதா?