புதுடில்லி, ஜூலை 13– யு.ஜி.சி. – நெட் தேர்வுக் கான போலி வினாத்தாள் தயாரித்து பணம் பறிக்க முயன்ற பள்ளி மாணவன் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.அய். நட வடிக்கை எடுத்து வருகிறது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதி பெறவும், பிஎச்.டி. படிப்புக்குசேர்க்கைபெறவும் பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.) சார்பில் ‘நெட்’ தேர்வு நடத் தப்படுகிறது. கடந்த மாதம் 18ஆம் தேதி இத்தேர்வு நடத்தப்பட்டது.
11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்து விட்ட தாக ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் பிரிவு கூறியதால், மறுநாளே 12.6.2024 அன்று நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
பள்ளி மாணவன் தில்லுமுல்லு
இதுபற்றிய விசாரணை, சி.பி.அய்.யிடம் ஒப்படைக்கப் பட்டது. ‘டெலிகிராம்’ சமூக வலைத்தளத்தில்,கசிந்த வினாத் தாளின் ‘ஸ்கிரீன் ஷாட்’ வெளி யிடப்பட்டிருந்தது.
தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் அதை சி.பி.அய். ஆய்வு செய்தது. அதில், அது தில்லுமுல்லு செய்து தயாரிக்கப்பட்டது என்று கண் டறியப்பட்டது.
ஒரு பள்ளி மாணவன், ஒரு செயலியை பயன் படுத்தி, அந்த ஸ்கிரீன் ஷாட்டை தயாரித்துள்ளான். அதில், ஷாட்டின் தேதியை ஜூன் 17ஆம் தேதி என்று மாற்றி உள்ளான். அதன்மூலம், தன்னிடம் வினாத்தாள்கள் இருப்பது போல் காண்பித்து, பாடவாரியாக தன்னால் வினாத்தாள்களை ஏற்பாடு செய்ய முடியும் என்று, பணம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளான்.
குற்றப்பத்திரிகை
இந்த பின்னணியை கண்டு பிடித்த சி.பி.அய்., அதுபற்றி ஒன்றிய அரசிடம் முறைப்படி தெரிவித்துவிட்டது. அடுத்த கட்டமாக அந்த மாணவன் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்தி ரிகை தாக்கல் செய்ய திட்ட மிட்டுள்ளது.
பெரிய அளவில் சதித் திட்டம் ஏதும் இல்லாததால், குற்றப்பத்திரிகையில் மோசடி குற்றம் அல்லது மோசடி முயற்சி குற்றம் மட்டும் சுமத்தப்படும் என்று சி.பி.அய் . வட்டாரங்கள் தெரிவித்தன.