பெரும்பாலான இந்தியர்கள் ஏன் ஏழையாகவே இருக்கிறார்கள் தெரியுமா?

viduthalai
2 Min Read

புதுடில்லி, ஜூலை 5 உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா வறுமை மற்றும் பிரச்சினைகளிலும் முன்னிலையில் உள்ளது. 2021 மதிப்பீடுகளின்படி இந்தியாவில் சுமார் 22 கோடி மக்கள் வறுமை கோட்டிற்குக் கீழ் வாழ்கிறார்கள். இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 17 சதவீதம் ஆகும்.
பரவலாக பகிர்ந்து அளிக்கப்படுவதில்லை

இந்தப் பதிவில் இந்தியாவில் வறுமை பரவலாக இருப்பதற்கான காரணங்கள் மற்றும் அதன் தீர்வுகள் பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.

பெரும்பாலான இந்தியர்கள் வறுமையில் இருப்பதற்கான காரணங்கள்: இந்தியாவில் வருமானம் மற்றும் வளங்கள் பரவலாக அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுவதில்லை. பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையே உள்ள இடைவெளி அதிகரித்து வருகிறது. இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு பெரும்பாலான மக்கள் வறுமையாக இருப்பதற்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. இந்தியாவில் வேலையின்மை ஒரு மிகப்பெரிய பிரச்சினை ஆகும்.

புதிய வேலைவாய்ப்புகள் இல்லாததால் பலர் வறுமையில் வாழ்கின்றனர். கல்வியறிவின்மை மக்கள் வறுமை சுழற்சியில் சிக்கித் தவிப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. அதேசமயம் நன்கு படித்தவர்களுக்கும் நல்ல வேலை கிடைப்பதில் சிரமம் இருப்பதால், அவர்கள் குறைந்த வருமானத்திலேயே வாழ்க்கையை நடத்துகின்றனர்.
மேலும், இந்தியாவில் போதுமான சுகாதார வசதிகள் இல்லாததால் பலர் நோய் வாய்ப்பட்டு வேலை செய்ய முடியாமல் போகிறது. இதனால், அவர்களின் குடும்பங்கள் வறுமையில் உள்ளன.

இந்தியாவின் அதிக மக்கள் தொகை, வறுமைக்கான மற்றொரு முக்கிய காரணமாகும். மேலும் மக்கள் தொகை வேகமாக வளர்ந்து வருவதால், கிடைக்கும் வளங்கள் மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கு இடையே போட்டி அதிகரித்து வறுமையை ஏற்படுத்துகிறது. ஜாதி, மதம், பாலினம் போன்ற அடிப்படையில் பாகுபாடு பலருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போகச் செய்கிறது. இதனால் அவர்கள் வறுமையில் சிக்கித் தவிக்கின்றனர்.

தீர்வுகள்: இப்படி பல காரணங்களை இந்திய மக்கள் வறுமையில் இருப்பதற்கு சொல்லிக் கொண்டே போகலாம்.

எனவே வறுமையைக் குறைக்க நிலையான பொருளாதார வளர்ச்சி அவசியம். இதில் உட்கட்டமைப்பு, கல்வி மற்றும் சுகாதாரத்தில் அரசாங்கம் முதலீடு செய்வது மிகவும் முக்கியம். இளைஞர்களுக்கு உண்டான வேலை வாய்ப்புகளை அதிகரித்து, அதில் நடக்கும் ஊழல்களை ஒழுங்குபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனைவருக்கும் தரமான கல்வி மற்றும் திறன் பயிற்சி இருப்பதை உறுதி செய்து, அவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். வறுமையில் வாழும் மக்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்க, அரசாங்கம் அதற்கான சமூக பாதுகாப்பு கட்டமைப்பை ஏற்படுத்துவது நல்லது. மேலும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்கும்படி, சுகாதாரத் துறையையும் மேம்படுத்துவதால், பல குடும்பங்கள் வறுமையில் இருந்து மீண்டு வரலாம்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *