புதுடில்லி, ஜூலை 4- ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை நீக்கியதற்காக பாஜ கட்சி இப்போது 63 நாடாளுமன்ற உறுப்பினர்களை இழந்துள்ளது என திரிணாமுல் கட்சி நாடாளுமன்ற உறுப் பினர் மஹூவா மொய்த்ரா ஆவேசமாக பேசினார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய திரிணாமுல் நாடாளுமன்ற உறுப்பினர் மஹூவா மொய்த்ரா,”கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் என்னை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினீர்கள். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் குரலை ஒடுக்கியதற்காக பாஜக கட்சி மிக பெரிய விலையை கொடுத்துள்ளது. ஒரு எம்பிக்கு தற்போது 63 நாடாளுமன்ற உறுப்பினர்களை அந்த கட்சி இழந்துள்ளது. கடந்த தொடரில் நான் எழுந்து நின்றால் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் குரலை நசுக்கியதற்காக ஆளும் கட்சியை மக்கள் அமைதியாக உட்கார வைத்து விட்டனர்.
ஜனநாயகத்தின் மூலம் பாஜவின் ராஜதந்திரங்கள் இப்போது குறுகி விட்டது. இது நிலையான அரசு அல்ல. இதில், இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சிகள் யூ-டர்ன் அடிப்பதில் வரலாறு படைத்துள்ளனர். இப்போது மக்களவையில் எங்களுடைய 234 போர் வீரர்கள் உள்ளனர். கடந்த முறை போன்று எங்களை நீங்கள் எங்களை நடத்த முடியாது. குடியரசுத் தலைவர் உரையில் வட கிழக்கு மாநிலங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 4 மடங்கு அதிகரிப்பு எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால்,அதில் மணிப்பூர் பற்றி எந்த குறிப்பும் இல்லை. தேர்தல் பிரச்சாரத்தில் முஸ்லிம், மதரசா, மட்டன், மீன், முஜ்ரா போன்ற பிரச்னைகளை கிளப்பிய மோடி மணிப்பூர் பற்றி பேசவே இல்லை.” என்றார்.