புதுடில்லி, ஜூலை 2- நீட்தேர்வு முறைகேடு விவகாரத்தில் மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் நேற்று (1.7.2024) வெளிநடப்பு செய்தன.
நீட் முறைகேடு பிரச்சினை
நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானத்துக்கான நோட்டீசும் இரு அவைகளிலும் வழங்கப்பட்டன. ஆனால், குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் விவாதத்துக்கு எடுக்கப்படும் எனவும், அதில் பேசும்போது எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறும் அரசு கூறி வருகிறது. இதனால் நாடாளுமன்ற இரு அவை களிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
ராகுல் காந்தி வேண்டுகோள்
இந்த விவகாரம் நேற்றும் நாடா ளுமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரக்கோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் கே.சி.வேணுகோபால், மாணிக்கம் தாகூர் ஆகியோர் மக்கள வைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் அறிவிக்கை அளித்து இருந்தனர். பின்னர் காலையில் மக்களவை கூடியதும் எழுந்து பேசிய எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி, நீட் முறைகேடு தொடர்பாக தனி விவாதம் நடத்த வேண்டும் எனக் கோரினார்.
அவர் கூறும்போது, ‘நீட் தொடர் பாக ஒரு நாள் விவாதம் நடத்த நாங்கள் விரும்புகிறோம். 2 கோடிக்கு அதிகமான மாணவர்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். 70 முறை வினாத்தாள் கசிவு நிகழ்வுகள் நடந்துள்ளன. நீட் பிரச்சினையில் நாம் தீவிரமாக இருக்கிறோம் என்ற உறுதியை மாணவர்களுக்கு நாடாளுமன்றம் மூலம் வழங்க வேண்டும். எனவே தனி விவாதத்துக்கு அனுமதிக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.
அப்போது எழுந்து பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘இந்த அவைக்கு என்று குறிப்பிட்ட விதிகளும், நடைமுறைகளும், மரபுகளும் உள்ளன. ஒரு நாடாளுமன்றவாதியாக எனது நீண்ட பயணத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு முன் வேறு எந்த பிரச்சினையும் விவாதத்துக்கு எடுத்து நான் பார்க்கவில்லை. இந்ததீர்மானம் நிறைவேறியபின் மற்ற பிரச்சினைகள் எடுத்துக்கொள்ளலாம்’ எனக்கூறினார்.
மக்களவைத் தலைவர் நிராகரிப்பு
குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்போது வேறு விவாதங்கள் நடத்துவது மரபு இல்லை எனக்கூறி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தார். மேலும் நீட் குறித்து விவாதிக்க தனி அறிவிக்கை வழங்குமாறும் அறிவுறுத்தினார்.
அத்துடன் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை தொடங்குமாறு பா.ஜனதா கட்சி உறுப்பினர் அனுராக் தாகூரை அவர் அழைத்தார். இதைத் தொடர்ந்து நீட் விவகாரம் குறித்து தனி விவாதம் நடத்தப்படும் என்று அரசு உறுதியளிக்குமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. பின்னர் அவர்கள் அவை யில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
எதிர்க்கட்சிகள் போராட்டம்
முன்னதாக சி.பி.அய்., அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்பு களை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அவையில் ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.