பல்வேறு முழக்கங்களுடன் தமிழ்நாடு, புதுச்சேரி மக்களவை உறுப்பினர்கள் 40 பேர் பதவி ஏற்பு

Viduthalai
3 Min Read

புதுடில்லி, ஜூன் 26- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 40 மக்களவை உறுப்பினர்களும் நேற்று (25.6.2024) பதவியேற்றுக் கொண்டனர். இதில் கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினரைத் தவிர மற்ற 39 பேரும் தமிழில் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
நாடாளுமன்ற பொதுத்தேர்த லில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் 24.6.2024 அன்றுமுதல் பதவியேற்று வருகிறார்கள். பதவியேற்பு, மாநிலங்களின் அகர வரிசைப்படி நடைபெற்றது. இதன்படி தமிழ்நாட்டு மக்களவை உறுப்பினர்கள் நேற்று (25.6.2024) மதியம் வரிசைமுறை வந்தது. இதனைத்தொடர்ந்து அவைத்தலைவரின் இருக்கையில் அமர்ந்திருந்த மூத்த உறுப்பினர் ராதா மோகன்சிங் முன்னிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 40 உறுப்பினர்களும் பதவியேற்றனர்.
தமிழ்நாட்டு உறுப்பினர்களின் பதவியேற்பு தொகுதி வரிசைப்படி நடைபெற்றது. இதன்படி முதலில் திருவள்ளூர் தொகுதி உறுப்பினர் சசிகாந்த் செந்தில் பதவியேற்றார். அவர் உறுதிமொழிகூறி முடித்த தும் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்.

இதனைத்தொடர்ந்து மற்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர். பதவியேற்ற அனைத்து உறுப்பினர்களும் தமிழையும், தமிழ்நாட்டையும் வாழ்த்தினர். தி.மு.க. உறுப்பினர்களில் பலர் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை வாழ்த்தியதுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழையும் பாடினர்.
தேனி தொகுதி மக்களவை உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் உறுதி மொழி வாசித்து முடித்ததும் தனது சட்டைப்பையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை எடுத்து காண்பித்தார்.
திருவண்ணாமலை தொகுதி உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, ஆரணி தொகுதி உறுப்பினர் தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி உறுப்பினர் மலையரசன் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் ஆகியோரை வாழ்த்தியதுடன் அமைச்சர் எ.வ.வேலுவையும் குறிப்பிட்டனர்.

இதைப்போல தென்காசி தொகுதி உறுப்பினர் டாக்டர் ராணி சிறீகுமார், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பெய ரையும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பெயரையும் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உறுப்பினர்களில் ஒருவரைத்தவிர மற்ற அனைவரும் தமிழ்மொழியில் உறுதிமொழி ஏற்றது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கோபிநாத் மட்டும் தெலுங்கு மொழியில் உறுதிமொழி ஏற்றார்.
இதைப்போல குறிப்பிட்ட சில உறுப்பினர்களைத் தவிர மற்ற அனைவரும் ‘உளமாற’ உறுதி ஏற்பதாக தெரிவித்தனர். கடலூர் காங்கிரஸ் உறுப்பினர் விஷ்ணு பிரசாத், புதுச்சேரி காங்கிரஸ் உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகி யோர் ‘கடவுளை’ முன்னிறுத்தி பிரமாணம் செய்தனர். இதைப் போல மயிலாடுதுறை காங்கிரஸ் உறுப்பினர் சுதா, ‘தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் மீது உளமாற’ உறுதி கூறுகிறேன் என்றார். அத்து டன் ராகுல்காந்திக்கு வாழ்த்து தெரிவித்து ‘ஜோடோ ஜோடோ பாரத் ஜோடோ’ என்றார்.

சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம், கன்னியாகுமரி காங்கிரஸ் உறுப்பினர் விஜய்வசந்த் ஆகியோர் ‘கடவுளறிய’ பிரமாணம் செய்கிறேன் என்றனர். விஜய் வசந்த் உறுப்பினர் உறுதிமொழி ஏற்பைத் தொடங்கும்போது அரிகிருஷ்ணபெருமாள் நாடார் வசந்தகுமாரின் மகனாகிய நான்.. என தொடங்கினார். மேலும் பெருந்தலைவர் காமராஜர் மற்றும் ராஜீவ்காந்தி புகழ் பாடினார்.
நெல்லை காங்கிரஸ் உறுப்பி னர் ராபர்ட் புரூஸ், ‘கடவுள் மீது ஆணையிட்டு’ உறுதிகூறுவதாக தெரிவித்தார். ராமநாதபுரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் நவாஸ்கனி, இறைவன்மீது உறுதி கூறுவதாக தெரிவித்தார். கரூர் உறுப்பினர் ஜோதிமணி பதவியேற்க சென்ற போது, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை அரவணைப்பு செய்து சென்றார்.

உறுப்பினர்கள் ஜோதிமணி, விஷ்ணுபிரசாத், விஜய்வசந்த், சுதா, சசிகாந்த் செந்தில், தமிழச்சி தங்கபாண்டியன், கே.சுப்பராயன், ராணி சிறீகுமார் உள்ளிட்டோர் அரசமைப்புச்சட்டப் புத்தக நகலை கையில் ஏந்தி உறுதிமொழி ஏற்றனர்.
கோவை உறுப்பினர் கணபதி ராஜ்குமார் அவருடைய பெற்றோ ருக்கும், தனக்காக உழைத்த தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்தார். பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் அருண்நேரு. பதவி ஏற்பை தொடங்கும்போது தன் தந்தை மற்றும் தாயாரின் பெயரை குறிப்பிட்டார்.
இதைப்போல வேலூர் உறுப்பினர் கதிர் ஆனந்தும் தாய், தந்தைக்கு வணக்கம் தெரிவித்தார்.

கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் மார்க்சியத்தை வாழ்த்தினர். துரை வைகோ உறுப்பினர் சமத்துவம், சமூகநீதி மற்றும் மனிதநேயத்தை உயர்த்தினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஜனநாயகத்துக்கும். அரச மைப்புச்சட்டத்துக்கும் ‘ஜெய்’ என கூறினார்.
மூத்த உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.இராசா உள்ளிட்டோர் பதவியேற்பு உறுதிமொழியோடு நிறுத்திக்கொண்டனர். மத்திய சென்னை உறுப்பினர் தயாநிதி மாறன், ‘‘வேண்டாம் நீட், நீட் தேர்வை தடை செய்க” என்று முழக்கமிட்டார். இவ்வாறாக தமிழ்நாட்டு உறுப்பினர்களின் பதவி யேற்பில் பல சுவாரசியங்கள் நிகழ்ந்தன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *