சென்னை,ஆக.26 – மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்வதற்கான கால அவகாசம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் போது பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கும் வகையில், கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் செய்து வழங்கும் திட்டத்தை மின்வாரியம் செயல்படுத்தி வருகிறது.
இதற்காக, தமிழ்நாடு முழுவதும் உள்ள வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்பு தாரர்களுக்கென `சிறப்புப் பெயர் மாற்றம் முகாம்’, கடந்த மாதம் 24ஆம் தேதி தொடங்கி ஒரு மாத காலம் வரை மின்வாரியத்தின் அனைத்துப் பிரிவு அலுவலகங்க ளிலும் நடைபெற்று வந்தது.
இந்த முகாம் தொடங்கி வைக் கப்பட்ட நாள் முதல் இதுவரை மொத்தம் 2.68 லட்சம் வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்பு மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்து பயன் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தச் சிறப்பு பெயர் மாற்றம் முகாமுக்கான கால அவகாசம் மேலும் ஒரு மாத காலம் அதாவது வரும் செப். 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புக் கான பெயர் மாற்றம் தேவைப்படும் பொதுமக்கள் அனைவரும் இந்த கால நீட்டிப்பு அவகாசத்தைப் பயன்படுத்தி, இச்சிறப்பு பெயர் மாற்றம் முகாம் மூலம் தங்களது வீட்டு மின் இணைப்புகள் மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்து கொள்ளு மாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது.