கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் நெகிழ்வுரை
சென்னை, ஜூன் 24- ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்களைப் பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதில் கலந்து கொண்டு நெகிழ்ச்சியுடன் கழகத் துணைத் தலைவர் உரையாற்றினார்.
சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் குளுமை அரங்கில் 22.6.2024 அன்று மாலை 5:30 மணியளவில், பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை சார்பில் ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்களைப் பற்றிய, “Unveiling Trotsky Marudu: The Indian Picasso Who Shaped Contemporary Art For 70 Years” எனும் பெயருடைய ஆவணப்படம் திரையிடப்பட்டது. நிகழ்ச்சி இரவு 9:30 மணியளவில் நிறைவு பெற்றது.
இதில் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், திரைப்பட இயக்குநர் கவிதா பாரதி, ஊடகவியலாளர் கோவி. லெனின், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் ஓவியர் டிராட்ஸ்கி மருது, ஆவணப்படம் உருவான விதம் பற்றி விளக்கினார். 18 வயதிலிருந்து தனக்கும் பெரியார் திடலுக்கும் உள்ள தொடர்புகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து ஆவணப்படத்தை இயக்கிய அபிராமி தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். பேசிய அனைவரும் ஏறக் குறைய 2 மணி நேரம் ஓடக் கூடியதாக இந்த ஆவணப்படம் இருந்தாலும், இதை தொடக்கமாக வைத்துக் கொண்டு இன்னமும் டிராட்ஸ்கி மருதுவின் பல்வேறு பரிமாணங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைத்தனர்.
துணைத் தலைவர் ஆவணப்படத்தை பாராட்டிப் பேசும் போது, “தனது 18 வயதில் பெரியார் திடலில் ஜன்னல் வழியாக பெரியாரை உற்று உற்றுப் பார்த்தவர் இன்று உலகம் தழுவிய ஒரு ஓவியராக உருவெடுத்திருக்கிறார்” என்று மிகுந்த நெகிழ்ச்சியுடன் தொடங்கினார். மேலும் அவர், ”ஓவியக் கல்லூரியின் முதல்வர் தனபால் தந்தை பெரியாரை நேரில் சந்தித்து, பெரியாரையே மாடலாக வைத்து ஓவியம் வரைந்ததை.. நினைவு கூர்ந்து, அப்படிப்பட்டவரிடம் தான் டிராட்ஸ்கி மருது பயின்றார் என்பதைக் குறிப்பிட்டார். தொடர்ந்து டிராட்ஸ்கி என்ற பெயருக்குக் காரணத்தைக் குறிப்பிட்டார். ஆவணப்படம் ஏற்படுத்திய தாக்கத்தால், “டிராட்ஸ்கி மருது அவர்களை உள்ளபடியே சிறந்த கோட்டோவியர் என்கிற அளவில் தான் தெரியும். ஆவணப்படத்தைப் பார்த்த பிறகுதான் எவ்வளவு பெரிய சாதனைக்குச் சொந்தக்காரர் என்பதே புரிகிறது” என்று வியந்தார். ‘‘இவர் போன்ற சாதனையாளர்கள் இன்னமும் வெளியில் வரவேண்டும். அது இளைஞர்களுக்கு ஓர் உந்து சக்தியாக திகழ வேண்டும். அந்த சாதனைக்கு சொந்தக்காரருக்கு எனது உளம் நிறைந்த வாழ்த்துகள்” என்று நெகிழ்ந்து பேசி தனது உரையை நிறைவு செய்தார்.
இறுதியில் பார்வையாளர்கள் ஆவணப்படம் குறித்த தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். முன்னதாக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் டிராட்ஸ்கி மருது, ஆவணப்படத்தின் இயக்குநர் அபிராமி ஆகியோருக்கு பயனாடை அணிவித்து மரியாதை செய்தார்.
நிகழ்ச்சியை ஊடகவியலாளர் முரளிகிருஷ்ணன் சின்னதுரை தொகுத்து வழங்கினார். பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் ஆ. வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏறக்குறைய 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. ஆனால், திரைப்படக் கலைஞர்கள், டிராட்ஸ்கி மருதுவின் மாணவர்கள், பொதுமக்கள் என அரங்கு நிறைந்து உட்கார இடம் இல்லாத அளவுக்கு மக்கள் திரண்டிருந்து இறுதிவரை நிகழ்ச்சியை கண்டுகளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.