புதுடில்லி, ஜூன் 24 ஒன்றியத்தில் ஆட்சி அமைத்துள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிர்க்கட்சியான “இந்தியா” கூட்டணி முதல் நெருக்கடியை கொடுத்துள்ளது. 18-ஆவது மக்களவை கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில் தற்காலிக அவைத் துணைத் தலைவர் பொறுப்பை “இந்தியா” கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர். பிரதமர் மோடிக்கு அடுத்ததாக பதவியேற்க அழைத்ததை காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷ், திமுகவின் டிஆர் பாலு நிராகரித்தனர்.
18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று (24.6.2024) முற்பகல் 11 மணிக்கு தொடங்கியது. முன்னதாக குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒடிசாவை சேர்ந்தவரும், 7 முறை நாடாளுமன்ற உறுப்பினருமான பர்த்ருஹரி மகதாப்புக்கு (பாஜக) தற்காலிக அவைத்தலைவராக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து 18-ஆவது மக்க ளவை கூட்டத் தொடரை தற்காலிக அவைத்தலைவர் பர்த்ருஹரி மகதாப் நடத்தினார். இன்றும் நாளையும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பர். ஜூன் 26-ந் தேதிதான் புதிய அவைத்தலைவர் தேர்தல் நடைபெறும்.
அரசமைப்புச் சட்டப் புத்தகத்துடன் “இந்தியா” கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம்!
இன்றும் நாளையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வுக்காக தற்காலிக அவைத் தலைவருக்கு உதவ- தற்காலிக அவைத் துணைத் தலைவர்களாக கொடிக்குன்னில் சுரேஷ்(காங்கிரஸ்), டிஆர். பாலு(திமுக), ராதா மோகன் சிங்(பாஜக),பகன்சிங் குலஸ்தே(பாஜக) சுதிப் பந்தோபாத்யாய் (திரிணாமுல் காங்கிரஸ்) ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
ஆனால் தற்காலிக அவைத்தலைவர் பர்த்ருஹரி மகதாப் நியமனத்துக்கு “இந்தியா” கூட்டணி கட்சிகள் ஏற்கெனவே கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. 8 முறை நாடாளுமன்ற உறுப்பினரான கொடிக்குன்னில் சுரேஷ்தான் நாடாளுமன்ற மரபுப்படி தற்காலிக அவைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்; இந்த மரபை ஒன்றிய பாஜக கூட்டணி அரசு மீறிவிட்டது. கொடிக்குன்னில் சுரேஷ் தலித் என்பதாலேயே அவரை புறக்கணித்துவிட்டது என்பது “இந்தியா” கூட்டணிக் கட்சிகளின் குற்றச்சாட்டு ஆகும்.
மேலும் பாஜகவிலேயே 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ரமேஷ் சந்தப்பா ஜிகஜினகியின் பெயரையும் கூட தலித் என்பதாலேயே தற்காலிக அவைத்தலைவர் பதவிக்கு பரிசீலனை செய்யவில்லை என மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியிருக்கிறார்.
தலித் என்பதால் புறக்கணிப்பா?
ஆனால் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் இந்த குற்றச்சாட்டுக்கு முக்கியத்துவமும், விளக்கமும் தராமல் கடந்து செல்கின்றன.
இதனால் இன்று மக்களவையில் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் தற்காலிக அவைத் துணைத் தலைவர் பொறுப்பை “இந்தியா” கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், திமுக புறக்கணித்தன. மக்களவையில் பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர் மரபுப் படி மூத்த உறுப்பினர்களான, கொடிக்குன்னில் சுரேஷ், டிஆர் பாலு ஆகியோரை தற்காலிக அவை துணைத் தலைவர் பதவியேற்க அழைத்தார். ஆனால் இந்த அழைப்பை இருவரும் ஏற்க மறுத்து பதவியேற்கவில்லை.
அண்ணல் அம்பேத்கர், காந்தியார் சிலைகள் அகற்றியதற்கு எதிராகப் போராட்டம்
முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் ‘இந்தியா’ கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்ணல் அம்பேத்கர், காந்தியார் சிலைகள் இடம் மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிராக அரசமைப்புச் சட்டப் புத்தகத்துடன் போராட்டம் நடத்தினர். மக்களவையில் பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற போதும் அரசமைப்புச் சட்டப் புத்தகத்தை உயர்த்திக் காட்டி முழக்கமிட்டனர்.