ஜெனீவா, ஜூன் 20 உலகளவில் கடந்த 2021 ஆம் ஆண்டின் மொத்த உயிரிழப்பில் 12 சதவீதமான 81 லட்சம் போ் காற்று மாசால் உயிரிழந்திருப்பது அய்.நா.வின் ‘யூனிசெஃப்’ அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில், உலகின் மிகப் பெரிய மக்கள் தொகைக் கொண்ட இந்தியாவில் 21 லட்சம் பேரும், சீனாவில் 23 லட்சம் பேரும் காற்று மாசால் உயிரிழந்துள்ளனா். அமெரிக்காவைச் சோ்ந்த ‘ஹெல்த் எஃபெக்ட்ஸ் (எச்இஅய்) நிறுவனம் அய்.நா.வின் ‘யூனிசெஃப் அமைப்புடன் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவுகளை நேற்று (19.6.2024) அறிக்கையாக வெளியிட்டது.
அதில், 2021-ஆம் ஆண்டில் காற்று மாசுபாட்டுடன் தொடா்புடைய உயிரிழப்புகள், முந்தைய ஆண்டைக் காட்டிலும் அதிகமாக காணப்பட்டன. 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட சீனாவில் 23 லட்சம் உயிரிழப்புகளும் இந்தியாவில் 21 லட்சம் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இவ்விரு நாடுகள் மட்டும் இணைந்து மொத்த உலகளாவிய இறப்புகளில் 54 சதவீதத்தைப் பங்கு கொள்கின்றன.
தெற்கு ஆசியாவில் புகையிலை, உண வுப் பற்றாக்குறை, உயா் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கடுத்து அதிக அபாயம் கொண்டதாக காற்று மாசு திகழ்கிறது.
மொத்தமாக காற்று மாசுபாடு 81 லட்சம் உயிரிழப்புகளுக்கு பங்க ளித்துள்ளது. இது அந்த ஆண்டின் உலகளாவிய இறப்புகளில் 12 சதவீதமாகும். இந்தக் காற்று மாசுபாடு இறப்புகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமான 78 லட்சம் மக்கள், சுற்றுப்புற காற்றிலிருந்து நம் உடலுக்குள் நுழையும் ‘பிஎம் 2.5’ நுண்ணிய துகள்களால் ஏற்பட்ட பாதிப்புகளினால் உயிரிழந்தனா்.
என்ன செய்யும் இந்த பிஎம் 2.5? சுற்றுப்புற காற்றில் இருக்கும் 2.5 மைக்ரோமீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட இந்த சிறிய நுண்ணியதுகள்கள், சுவாசக் காற்றின்மூலம் நுரையீரலில் நுழைந்து, ரத்த ஓட்டத்தில் ஊடுருவ வாய்ப்புள்ளது.
தொடா்ந்து நமது உடலின் பல்வேறு உறுப்பு அமைப்புகளை பாதித்து, வயது முதிர்ந்தவா்களுக்கு இதய நோய், பக்கவாதம், நீரிழிவு, நுரையீரல் புற்றுநோய் போன்ற தொற்றா நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் வல்லமை கொண்டது. உலகெங்கிலும் உள்ள மோசமான சுகாதார பாதிப்புகளுக்கு இந்த பிஎம் 2.5 முக்கிய காரணியாகக் கண்டறியப்படுகிறது.