சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவரும், சமூக நலத் தொண்டிலும், தொண்டறத்திலும் இடையறாத ஆர்வம் காட்டிய பெருந்தகையாளருமான மாண்புமிகு ஜஸ்டீஸ் கே. சாமிதுரை (வயது 91) அவர்கள் இன்று (30.8.2023) மறைவுற்றார் என்று அறிந்து மிகவும் துயரம் அடைகிறோம்.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, சட்ட வல்லுநராகவும், இறுதிவரை சமூகநீதிக்காக உறுதியுடன் பாடுபட்ட வருமான ஜஸ்டீஸ் அய்யா அவர்கள் எவரிடத்திலும் அன்புடனும், பண்புடனும் பழகும் பான்மையாளராவார்.
மானமிகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் படத்திறப்பு நிகழ்வு பெரியார் திடலில் நடைபெற்ற போது அவரது உரை என்றும் மறக்க முடியாத ஆழமான சமூகநீதிக்கு விளக்கம் தந்த வீரவுரையாக அமைந்திருந்தது.
அவரை இழந்து வாடும் அவரது அன்புச் செல்வர் ஜஸ்டீஸ் கே.எஸ். மணிக்குமார் மற்றும் அவரது குடும்பத்தவருக்கும் நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
30.8.2023