‘நீட்’ முறைகேடு பற்றி விசாரணை தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

Viduthalai
2 Min Read

புதுடில்லி, ஜூன் 10– நீட் நுழைவுத் தேர்வு முறைகேடு புகார்தொடர்பாக விசாரிக்க 4 உறுப்பினர் கொண்ட விசாரணைக்குழுவை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

2024-2025 கல்வியாண்டுக் கான இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. தேர்வு எழுதிய வர்களில் 1500 பேருக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கப் பட்டுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு 67 பேர், 720 என்ற முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

குறிப்பாக ஒரே மய்யத்தில் இருந்து அதிகம் பேர் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளதும் சர்ச்சையாகி உள்ளது. கடந்த மாதம் நடந்த நீட் தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மகாராட்டிரா அரசு வலியுறுத்தியுள்ளது. தேர்வு முடிவுகள் மாநில மாணவர்களுக்கு அநீதியாக அமைந்துள்ளதாக மகாராட்டிரா அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதி ராக கண்டனக்குரலை எழுப்பி யிருந்தார். இதேபோல கேரளாவில் இருந்தும் எதிர்ப்புக்குரல்கள் வலுத்துள்ளன. இந்நிலையில், குஜராத், சத்தீஷ்கர், அரியானா, மேகாலயா மாநிலங்களில் உள்ள ஆறு மய்யங்களில் தேர்வு எழுதிய1500 பேருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க 4 பேர் கொண்ட குழுவை அமைத் துள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இந்நிலையில், முறைகேடு செய்த முகமையே விசாரணை நடத்துவது நியாயமல்ல என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஅய் விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்க இளநிலை மருத்துவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். உச்சநீதிமன்றம் கண்காணிக்கும் வகையில் சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியும் வலியுறுத்தியுள்ளது.

இளம் தலைமுறையின் எதிர்காலத்தோடு பாரதிய ஜனதா விளையாடுவதாக காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தனை கண்டனங்களுக்கும், 4 பேர் கொண்ட விசாரணைக்குழு உரிய பதில் தருமா என்று பார்க்கலாம்.
இச்சூழலில், நீட் தேர்வு முடிவு அறிவிப்பில் பெரும் குளறுபடி இருப்பதாகவும், இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் இந்திய இளநிலை மருத்துவர்கள் அமைப்பு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

இந்திய இளநிலை மருத்துவர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை யில், ”நீட் தேர்வில், 720 மதிப்பெண்ணுக்கு, 718, 719 என்ற மதிப்பெண்கள் நடைமுறை சாத்தியமற்றது. முன்னறிவிப்பின்றி கருணை மதிப்பெண் வழங்கப் பட்டி ருக்கிறதா?.2024ஆம் ஆண்டு நீட் தேர்வு வினாத்தாள் பல்வேறு இடங்களில் வெளியானதில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?. கருணை மதிப் பெண் வழங்குவது காலவிரயம்.

அதுகுறித்து முன்னரே அறிவிக்காமல், தேர்வுக்கு பின் அந்த முடிவை எடுத்திருப்பது ஏன்?.
சில மாணவர்களின் மதிப்பெண் பட்டியலும், விடைத்தாள் மதிப்பெண்ணும் பொருந்தவில்லை. 67 மாண வர்கள் 720க்கு 720 மதிப்பெண் வாங்கியதில், பெரும் அய்யம் எழுந்துள்ளது. இயற்கையாக இப்படி நடப்பதற்கு வாய்ப்பி ல்லை.” என்று தெரிவித்து அரியானாவில் உள்ள ஒரே தேர்வு மய்யத்தைச் சேர்ந்த 6 பேர் ஒரே மதிப்பெண் வாங்கியிருப்பதையும் சுட்டிக்காட்டி உள்ளது குறிப்பி டத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *