பாடநூல்களில் ஜாதி ஒழிப்பு குறித்த பாடம் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்!

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, மே 29- ஜாதி ஒழிப்பு குறித்த பாடம் அந்தந்த வயதிற்கு ஏற்றவகையில் பாடத்திட்டத்தில் இடம் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் தலைவர்கள் வலியுறுத்தினர்.
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை சார்பில் “பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தில் ஜாதி ஒழிப்பு” என்ற தலைப்பில் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றுமுன்தினம் (27.5.2024) கருத்தரங்கம் நடைபெற்றது.
மருத்துவர் சீ.ச.ரெக்ஸ் சற்குணம் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி, திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, பேராசிரியர் அரங்க. மல்லிகா, பத்திரிகையாளர் கடற்கரை, மத்தவிலாச அங்கதம், எழுத்தாளர் வாசுகி பாஸ்கர் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.‌
அமைப்பின் பொதுச்செயலாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு உரையாற்றுகையில் மாணவர்களால் உருவாக்கப்பட்ட பரிந்துரைகளை உள்ளடக்கிய தீர்மானங்களின் நோக்கங்களை விளக்கிப் பேசினார்.

“கல்வி ஒரு சமயச் சார்பற்ற செயல்பாடு. ஒரு மனிதரை சிறந்த மனிதர் ஆக்குவதே கல்வியின் நோக்கம். சமத்துவம் மற்றும் ஒற்றுமையை இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. இதற்கு நேர் எதிராக சமூகத்தில் பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடும் பிரிவினையும் நிலவுகிறது. சமூகத்தில் நம்பப்படும் மரபு ரீதியான விழுமியங்களுக்கும் இந்திய அரசமைப்புச் சட்டம் முன்வைக்கும் விழுமியங்களுக்கும் மிகப்பெரிய முரண்பாடு நிலவுகிறது. இந்த முரண்பாட்டை, இந்திய அரசமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடிப்போம் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்ட மாணவர்கள் உணரவேண்டும். மாணவர்கள் தாங்கள் பெற்ற அறிவின்மூலம் சமூக மாற்றத்திற்கான வழிமுறைகளை ஆராய்ந்து இந்த முரண்பாட்டை களைவதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்திய அரசமைப்புச் சட்டம் முன்வைக்கும் விழுமியங்களை தங்களின் வாழ்க்கை விழுமியங்களாக ஏற்றுக் கொண்டு, சமூக மாற்றத்திற்கான பங்களிப்பைச் செய்ய தேவையான நம்பிக்கையை மாணவர்கள் பெற்றார்களா என்று அறிந்திட உகந்த மதிப்பீட்டு முறை யைக் கல்வி அமைப்புகள் உருவாக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்

தீர்மானங்கள்
“சமூகத்தில் நிலவும் பாகுபாடுகள் களையப்படுவதன் மூலமே பண்பாட்டு ரீதியாக ஒரு சமூகம் முன்னேற்றம் அடைய முடியும் என்பதை இந்தியர்களாகிய நாம் உணர வேண்டும். மேலிருந்து கீழ்நோக்கி ஓர் அடுக்கு முறையைக் கொண்ட ஜாதியக் கட்டமைப்பு பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை பாகுபடுத்துகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சமத்துவக் கோட்பாட்டிற்கு இது முரணானது. ஜாதி என்பது பாகுபாடு கொண்ட சமூக நட வடிக்கை, ஜாதியப் பாகுபாட்டை கடைப்பிடிப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 17இன்படி தண்டிக்கத்தக்க குற்றமாகும். 11.1.2024 அன்று மாணவர்கள் அளித்த மனுவையும், 5.2.2024 தேதியிட்ட பொதுப் பள்ளிக்கான மாநில மேடை மனுவையும் பரிசீலித்து ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் ஜாதி ஒழிப்பிற்கான செயல்திட்டத்தை பள்ளி மற்றும் உயர் கல்வி பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்ய தேவையான சட்டப்படியான மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில் உள்ள கல்விசார் அமைப்புகள் பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தில் ஜாதி ஒழிப்பிற்கான செயல்திட்டத்தை இடம் பெறச் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தொடக்கப் பள்ளி தொடங்கி உயர் கல்வி வரை ஜாதி ஒழிப்பு குறித்த பாடம் அந்தந்த வயதிற்கு ஏற்ற வகையில் பாடத்திட்டத்தில் இடம் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும். மாணவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டம் முன்வைக்கும் விழுமியங்களை கற்றுக் கொண்டார்களா, சகோதரத்துவத்தை தங்களின் வாழ்க்கையில் கடைப்பிடிக்கவும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்கள்படி தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள போதிய அறிவைப் பெற்றுள்ளனரா என்று அறிந்திடும் வகையில் பள்ளி தொடங்கி பல்கலைக் கழகம் வரை அனைத்து நிலைகளிலும் மதிப்பீடுகள் அமைந்திட கல்வி வாரியங்கள் உரிய மதிப்பீட்டு நடைமுறைகளை உருவாக்க வேண்டும்” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக புலவர் சு. பழனிசாமி வரவேற்றார். எழுத்தாளர் வே. மணி நன்றி கூறினார்.
வழக்குரைஞர் பா.ஏமாவதி ஒருங்கி ணைப்பில் மழலையர் மனவெளி குழந்தை கள் கலைக்குழுவின் “ஜாதி ஒழிப்பு” கும்மி நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *