குளிர்சாதன வசதியுடன் வகுப்பறைகள். ஸ்மார்ட் போர்ட் வசதியுடன் கணினி மூலம் கற்றல். இந்த அரசுப் பள்ளியின் முன்புறம் பார்க்கிங் டைல்ஸ். பசுமையான தோட்டம். மரங்களும் எழுத்துக்களை தாங்கி கற்பிக்கும் அழகு. வண்ணமயமான வகுப் பறை. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி. சுகாதாரமான கழிப்பறை வசதி. அமெரிக்க தமிழ் சங்கம் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் எழுது பலகையுடன் கூடிய தனித்தனி இருக்கை வசதி. இவை எல்லாம் எந்த தனியார் பள்ளியில்…? என்று நீங்கள் கேட்பது காதில் விழுகின்றது. இவை அனைத்தும் இருப்பது தனியார் பள்ளியில் அல்ல. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் கீழப்பெருமழை கிராம தொடக்கப் பள்ளியில் என்றால் ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா?
அதன் தலைமை ஆசிரியை செந்தமிழ் செல்வியை சந்தித்தோம்.
நீங்கள் இந்தப் பள்ளிக்கு எப்போது தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றீர்கள்? அப்போது இந்தப் பள்ளிக்கூடம் எப்படி இருந்தது?
நான் கடந்த 2008இல் இந்தப் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றேன். அது வரை குறுகிய இட வசதியுடன் பழமையான கட்டடங்களுடன், மிகவும் சராசரியான அரசுப் பள்ளியாகவே இதுவும் திகழ்ந்தது. கழிப்பறை வசதி, விளையாட்டு மைதானம், தோட்டம், குடிநீர் வசதி என அனைத்திலும் பின்தங்கிய பள்ளியாகவே இது இருந்தது.
இந்தப் பள்ளியை எப்படி நீங்கள் நல்ல நிலைக்கு கொண்டு வந்தீர்கள்?
2008இல் ஒரே ஒரு புரவலருடன் ஆயிரம் ரூபாய் இருந்த இந்த பள்ளியின் புரவலர் எண்ணிக்கையை படிப்படியாக உயர்த்தி இந்த ஆண்டு வரை 2,21,000 ரூபாய் ஆக உயர்த்தி இருக்கின்றோம்.
புதிய கட்டடங்களை எப்படி கட்டினீர்கள்?
இந்தப் பள்ளியில் படித்த மேனாள் மாணவர்கள் உதவியுடன், பெற்றோர் ஆசிரியர் கழகமும் இணைந்து பள்ளியின் அருகில் இருந்த இடத்தை விலைக்கு வாங்கி அந்த இடத்தில் புதிய பள்ளிக் கட்டடத்தை கட்டினோம். பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர்கள், கிராம மக்கள், மேனாள் மாணவர்கள் மற்றும் வெளிநாடு வாழ் மேனாள் மாணவர்கள் ஒன்றுகூடி பள்ளியின் முன்னேற்றத்திற்கு அச்சாணியாக செயல்படுகின்றனர்.
கரோனா காலகட்டத்தில் எப்படி செயல்பட்டீர்கள்?
கரோனா காலத்தில் பள்ளிகள் மூடிக்கிடந்த நிலையில் இன்றைய இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு முன்னோடியாக மாணவர்களின் இல்லங் களுக்கு சென்று கற்பித்து கற்றல் இடைவெளியை குறைத்தோம். இது மாணவர்களை தொடர்ந்து தொய்வின்றி படிக்கத்தூண்டியது.
மாணவர்களுக்கு இந்தப் பள்ளி மேலும் என்னென்ன செய்கின்றது?
2009 முதல் ஆண்டுதோறும் ஆண்டு விழா, கல்விச்சீர் விழா விளையாட்டுப்போட்டிகள் என்று நடத்தி மாணவர்கள் மனதிற்கும் உடம்பிற்கும் உவகை அளிக்கும் விழாக்களை நடத்தி வருகின்றோம்.
இந்தப் பள்ளி பெற்றுள்ள விருதுகள் குறித்து சொல்ல முடியுமா?
மாநில அளவில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப் பட்டு பி டி ஏ புத்தகத்தில் வெளியீடு. கடந்த 15.8.2019 அன்று திருவாரூர் மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக தேர்வு பெற்று சுழற் கேடயம் விருது. போன்றவை பள்ளி பெற்றுள்ள சிறப்பம்சங்கள் ஆகும். தலைமை ஆசிரியர் திருமதி செந்தமிழ்ச்செல்வியின் சீரியப் பணியை பாராட்டி அரிமா சங்கம் “நெறிமிகு ஆசிரியர்” விருது வழங்கி சிறப்பித்துள்ளது.கீழப் பெருமழை கிராம மக்கள் ஒன்று கூடி விருது வழங்கி சிறப்பித்தனர். அதேபோல் உதவி ஆசிரியர் விஜயகுமார் அவர்களுக்கும் கீழப்பெருமுறை கிராமத்தின் சார்பாக கல்விச்செம்மல் என்னும் விருது வழங்கி சிறப்பித்துள்ளனர்.