லக்னோ, ஏப்.28 “முதல் இரண்டு கட்ட தேர்தலில் பாஜக எதிர்பார்த்த வாக்குகள் அக்கட்சிக்கு கிடைக்கவில்லை. அடுத்த கட்ட தேர்தல்களில் இந்நிலை இன்னும் மோசமாகும்” என சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்தரப் பிரதேச மேனாள் முதலமைச்சருமான அகிலேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக கடந்த 19-ஆம் தேதி தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களை சேர்ந்த 102 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 2-ஆம் கட்டமாக 88 மக்களவை தொகுதிகளுக்கு 26.4.2024 அன்று தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், அகிலேஷ் பாஜக குறித்து தனது எக்ஸ் தளத்தில் ஒரு காட்சிப் பதிவை பகிர்ந்து, “கடந்த 10 ஆண்டுகாலமாக பாஜக தலைவர்கள் தொடர்ந்து பொய் கூறி வந்ததன் விளைவாக, பாஜகவின் வாக்குச் சாவடி முகவர் ஒருவர், அவர்களின் மோசமான நிலையைப் பற்றி பேசத் துணிந்துள்ளார்.
மக்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்காததற்கு, பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் தான் காரணம் என்று அவர் கூறுகிறார். முதல் இரண்டு கட்ட தேர்தலில் பாஜக எதிர்பார்த்த வாக்குகள் அக்கட்சிக்கு கிடைக்கவில்லை. அடுத்த கட்ட தேர்தல்களில் இந்நிலை இன்னும் மோசமாகும்” எனப் பதிவிட்டுள்ளார்.