தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தகவல்
சென்னை, ஏப்.26- இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு காங்கிரசு கமிட்டித் தலைவர் கு.செல்வபெருந்தகை தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட 10 நாடாளுமன்றவேட்பாளர்கள் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட தாரகை ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று (25.4.2024) சென்னை அண்ணா அறிவாலயத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, வேட்பாளர்கள் விஜய்வசந்த் (கன்னியா குமரி), கோபிநாத் (கிருஷ்ணகிரி). ஜோதிமணி (கரூர்), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), விஷ்ணுபிரசாத் (கடலூர்), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), சசிகாந்த் செந்தில் (திருவள்ளூர்). சுதா (மயிலாடுதுறை), ராபர்ட் புரூஸ் (நெல்லை), வைத்திலிங்கம் (புதுச்சேரி) ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டணி கட்சியினர்
இதேபோல் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், நாமக்கல் வேட்பாளர் மாதேஸ்வரன். இந்திய யூனியன் முஸ் லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், பொதுச்செயலாளர் அபு பக்கர், ராமநாதபுரம் தொகுதி வேட் பாளர் நவாஸ்கனி ஆகியோர் முதல மைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர்.
முக்குலத்தோர் புலிப்படை தலை வர் நடிகர் கருணாஸ், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சிமுருகன், பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு தலைவர் துறைமுகம் காஜா, துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர்.
பின்னர் கு.செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது-
வடமாநிலங்களில்
மு.க. ஸ்டாலின் பிரச்சாரம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட் பாளர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இந்த சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அடுத்த சந்திப்பில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று விட்டு வெற்றிக் கனியுடன் முதலமைச்சரை சந்திப்போம். டில்லி உள்ளிட்ட வடமா நிலங்களில் நடைபெறும் நாடாளு மன்றத் தேர் தலில் இந்தியா கூட்டணியில் உள்ள வேட்பாளர்களை ஆதரித்து முதல மைச்சர் மு.கஸ்டாலின் பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளது.
-இவ்வாறு அவர் கூறினார்.
பதவியேற்பு
முன்னதாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் புதிய தலைவராக ஹசீனா சையத் செல்வப்பெருந்தகை முன்னிலையில் பதவியேற்றுக் கொண் டார். அப்போது பொருளாளர் ரூபி மனோகரன், துணை தலைவர் கோபண்ணா உள்பட பலர் பங்கேற்றார்கள்.
போராட்டம்
பின்னர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது,
பிரதமர் நரேந்திர மோடியின் தேர் தல் பிரச்சாரத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும். தாலி குறித்தும், மேனாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்தும் பிரதமர் மோடி பேசியது கண்டிக்கத்தக்கது.
பிரதமர் மோடி தன்னுடைய பிரிவினைவாத பேச்சை கைவிட வேண்டும். இல்லையேல், நாள்தோறும் மோடியை எதிர்த்து சென்னையில் போராட்டம் நடத்தப்படும். -இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரசில் சேரும் மன்சூர் அலிகான்
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செல்வப்பெருந்தகையை, நடிகர் மன்சூர்அலிகான் நேற்று சந்தித்தார்.
அப்போது, காங்கிரசில் தன்னை மீண்டும் இணைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்து கடிதம் ஒன்றை அவரிடம் வழங்கினார்.