பெங்களூரு, ஏப்.24- முதல்கட்ட தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளதால் பிரதமர் மோடி நடுக்கத்தில் மத வெறுப்பு கருத்துகளை பேசுவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூருவில் நேற்று (23.4.2024) செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முதல்கட்ட நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் பா.ஜனதாவுக்கு எதிராக ஒரு தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனால் பிரதமர் மோடி நடுக்கத்தில் உள்ளார். இதன் காரணமாக இந்து-முஸ்லிம் குறித்து வெறுப்பு கருத்துகளை கூறியுள்ளார். மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசிய கருத்தில் தனக்கு தேவையான வார்த்தைகளை மட்டும் எடுத்து மோடி பேசியது சரியல்ல.
தேர்தல் நடத்தை விதிமுறைகளில், ஜாதி-மத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதை கண்டு கொள்ளாமல் பிரதமர் பேசியது விதிமீறல் இல்லையா? இதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய தேர்தல் ஆணையத்திற்கு காது, கண், மூக்கு இருப்பதுபோல் தெரியவில்லை. 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று மோடி கூறுகிறார்.
அப்படி என்றால் எதற்காக இந்து-முஸ்லிம் குறித்து மத வெறுப்பு கருத்துகளை பேசுகிறார். அவருக்கு நம்பிக்கை இல்லை என்பதை இது காட்டுகிறது. மோடியின் இந்த வெறுப்பு கருத்து ஒட்டு மொத்த உலகிற்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் மாற்றத்திற்கான காற்று வீசுகிறது. சூரத்தில் காங்கிரஸ் வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டு பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர். இது என்ன நியாயம்?
10 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ள பிரதமர் மோடி தனது சாதனைகளை சொல்லி வாக்குசேகரிக்க வேண் டியது தானே. அதை விடுத்து மத வெறுப்பு கருத்துகளை கூறுவது ஏன்?. 2015 ஆம் ஆண்டு 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவதாக கூறினார்கள். அதில் 10 ஸ்மார்ட் நகரங்களையாவது உருவாக்கினார்களா? ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக் குவதாக மோடி கூறினார். வேலை வாய்ப்புகளை உருவாக்கினாரா?
-இவ்வாறு அவர் கூறினார்.