ஜூன் 5 ஆம் தேதிக்குப் பிறகு, மக்கள் கூட்டணியாக இருக்கக் கூடிய இந்தியா கூட்டணி ஆட்சிதான்!
ஜனநாயகக் கடமையை ஆற்றிய பின் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர்
சென்னை, ஏப்.19 இதுவரை கண்டிராத எழுச்சியும், மாற்றத்திற்கான மகிழ்ச்சிகரமான தோற்றமும் இத்தேர்தலில் தெளிவாகத் தெரிகிறது! ஜூன் 5 ஆம் தேதிக்குப் பிறகு, மக்கள் கூட்டணியாக இருக்கக் கூடிய இந்தியா கூட்டணி ஆட்சிதான் என்று செய்தியாளர்களிடம் கூறினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தமிழ்நாட்டில் இன்று (19.4.2024) நடைபெறும் 18 ஆவது மக்கள வைத் தேர்தலில் வாக்களிக்க, காலை 8.30 மணிக்கு, சென்னை அடையாறு காமராஜர் அவென்யூவில் (மண்டலம் 13) அமைந்துள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மக்களவைத் தேர்தலுக்கான வாக்குச் சாவடியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குடும்பத்தினருடன் வந்து தமது வாக்கினைப் பதிவு செய்தார். பிறகு செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
ஜனநாயகமா? சர்வாதிகாரமா?
ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்கிற மிகப்பெரிய பிரச்சினையை மய்யப்படுத்தி, சமதர்மமா? குலதர்மமா? அனைவருக்கும் அனைத்துமா? அல்லது ஒரு சிலருக்கு உயர்ஜாதி, உயர்வர்க்கம் இவர்களுக்கான ஆட்சியா? என்கிற மிகப்பெரிய மய்யத்தை வைத்து நடத்தப்படுகின்ற இந்த ஜனநாயக அறப்போரில், இந்தத் தேர்தலில் இதுவரை கண்டிராத எழுச்சியும், மாற்றத்திற்கான மகிழ்ச்சிகரமான தோற்றமும் தெளிவாக இருக்கிறது.
வெல்லப்போவது இந்தியா கூட்டணிதான்!
39 தொகுதிகள் உள்ள தமிழ்நாட்டில், 24 தொகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து வந்த பிறகும், வடபுலங்களில் இருந்தும், வடகிழக்கு, மேற்கு மற்ற பகுதிகளிலிருந்தும் வருகின்ற செய்திகளைப் பார்க்கும்பொழுது, நிச்சயமாக வெல்லப்போவது இந்தியா கூட்டணிதான்!
ஜூன் 5 ஆம் தேதிக்குப் பிறகு, மக்கள் கூட்டணியாக இருக்கக் கூடிய இந்தியா கூட்டணிதான் ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கும்.
மக்களை, வருங்கால சந்ததியை, ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான்!
இது ஏதோ கட்சி வேட்பாளர்களுக்காக அல்ல; மக்களை, வருங்கால சந்ததியை, ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான்.
நிச்சயம் நல்ல முடிவுகள், ஜூன் 5 ஆம் தேதிக்குப் பிறகு ஏற்படும்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.