காங். ஆட்சியில் ரூ. 420க்கு விற்கப்பட்ட சமையல் எரிவாயு
பி.ஜே.பி. ஆட்சியில் ரூபாய் ஆயிரத்தை கடந்தது
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை குற்றச்சாட்டு
சென்னை,ஏப். 1- மக்களுக்கு கொடுத்த எந்த வாக் குறுதி யையும் பாஜக நிறை வேற்றவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட் டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை 30.3.2024 அன்று பிரச்சாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:
காங்கிரஸ் ஆட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தால் கிராமங்கள் செழிப்பாக உள்ளன. நகரங்களில் இப்போது பேருந்துகள் ஓடுகின்றன. இந்தபேருந்துகள் எப்போது, யாரால் கொண்டு வரப்பட்டது. அரசுடமையாக்கியது யார்? இதை எல்லாம் யோசித்து பார்க்க வேண்டும்.
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி எதையும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. பாஜக ஆட்சியில்வரலாறு காணாத வகையில், ரூ.7.50 லட்சம் கோடி ஊழல் நடைபெற்று உள்ளது என்று இந்தியதலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் கடன் பத்திரத்தில் பாஜக ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் செய்து உள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு 2 கோடிபேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று பாஜகவினர் வாக்குறுதி கொடுத்தனர். ஆனால், யாருக்கும் வேலை வழங்கவில்லை. இருக்கிற வேலையும் பறிபோகும் நிலை உள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் ரூ.420-க்கு விற்ற சமையல் எரிவாயு உருளை தற்போது ஆயிரம் ரூபாயை தாண்டியது. பிறகு, தேர்தலுக்காக இப்போது ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை பாதியாகக் குறைப்பதாக பாஜக தெரிவித்தது. ஆனால், நிறைவேற்றவில்லை. இப்படி மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் பாஜக நிறை வேற்றவில்லை. -இவ்வாறு அவர் பேசினார்.
பிரச்சாரத்தின்போது, அண்ணாநகர் சட்டப்பேரவை உறுப்பினர் மோகன் உட்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி, மதுரவாயலில் செல்வப் பெருந்தகை பிரச்சாரம் மேற்கொண்டார்.
கோடை விடுமுறையில் மாற்றமில்லை பள்ளி கல்வித்துறை தகவல்
சென்னை,ஏப். 1- பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு அட்டவணை திருத்தப்பட்டாலும் கோடை விடுமுறையில் மாற்றம் இருக்காது என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வியில் 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நிறைவு பெற்றுவிட்டது. தொடர்ந்து 10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26ஆம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே, தமிழ் நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம்தேதி நடைபெற உள்ளது. பெரும்பாலான பள்ளிகள் வாக்குச் சாவடிகள் மற்றும் தேர்தல் முகாம்களாக மாற்றப்பட உள்ளன. எனவே, தேர்தலுக்கு முன்பாக பள்ளி இறுதித் தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.
அதன்படி, 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு மற்றும் 3ஆம் பருவத் தேர்வுகள் ஏப்ரல் 2 முதல் 12ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும். தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஏப்ரல் 13ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது.
இந்நிலையில், ரம்ஜானை முன்னிட்டு தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பில், ரம்ஜானை முன்னிட்டு தேர்வு தேதியை மாற்றியமைக்க சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன.
அதையேற்று அனைத்து விதமான பள்ளிகளிலும் 4 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 10ஆம் தேதிநடைபெற இருந்த அறிவியல் தேர்வு ஏப்ரல் 22ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அதேபோல், ஏப்ரல் 12இல் நடத்தப்பட விருந்த சமூக அறிவியல் தேர்வு ஏப்ரல் 23ஆம் தேதிக்கு மாற்றப்படுகிறது. அதன்படி, தேர்வுகளை நடத்தி முடிக்க அனைத்து பள்ளி தலைமைஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப் படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
புதிய தேர்வு அட்டவணையில் கோடை விடுமுறை குறித்த தகவல்கள் இடம் பெறவில்லை. இதனால் மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர வேண்டுமா என கேள்விகள் எழுந்தன. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரி களிடம் கேட்டபோது, ‘‘பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறையில்எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை. மாணவர்கள் ஏப்.8ஆம் தேதிக்கு பின்னர் 2 தேர்வுகளை எழுத மட்டும் பள்ளிக்கு வரவேண்டும். அதாவது, ஏப்.22, 23ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள அறிவியல், சமூக அறிவியல் பாடத்தேர்வு களுக்கு வந்தால் மட்டும் போதும்.
எனினும், மாணவர் சேர்க்கை, தேர்வு மற்றும் தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஆசிரியர்கள் ஏப்ரல் 26ஆம் தேதி வரை தொடர்ந்து பள்ளிக்கு வரவேண்டும். கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்’’ என்றனர்.
காஷ்மீர் தேர்தலில்
காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்கள் 27 பேர்
சிறீநகர், ஏப்.1- ஜம்மு காஷ்மீரில் வரும் ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 ஆகிய தேதிகளில் 5 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதேநேரம் காஷ்மீர் சட்டப் பேரவைக்கான தேர்தல் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடைபெறும் என ஆணையம் ஏற்கெனவே தெரிவித் திருந்தது.
இந்நிலையில், காஷ்மீரில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை அக்கட்சி நேற்று (30.3.2024)வெளியிட்டது. இந்தப் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தேர்தல் ஆணை யத்தில் நேற்று சமர்ப்பித்தார்.
இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் மேனாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மூத்த நிர்வாகிகள் பிரியங்கா, கே.சி. வேணுகோபால், சச்சின் பைலட் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
இதுதவிர, அம்பிகா சோனி, பரத்சிங் சோலங்கி, ஜி.ஏ.மிர், தாரிக் ஹமீத் காரா, சுக்விந்தர் சிங் சுகு, ரேவந்த் ரெட்டி, ஹரிஷ் ராவத், பிரமோத் திவாரி, பவன் கேரா உள்ளிட்ட 27 மூத்த தலைவர்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.