பொருள்வேண்டேன்! பொன்வேண்டேன்!! இளமை கேட்கும்
புதுவாழ்வுச் சுகம்வேண்டேன்!! பெரியார் அய்யா
அருந்தொண்டு வாழ்விற்குத் துணையிருத்தல்
அல்லாத வாழ்வொன்று வேண்டா மென்றே
திருவாழ்வு வாழ்ந்தவர்யார்? புகழும் வேண்டாத்
தியாகத்தாய் மணியம்மை அம்மா தானே!
அருள்பூத்த தாய்மனத்தால்.. அய்யா வாழ்வின்
ஆண்டுபல நீட்டிவைத்தார் அவரே தானே!!
பெருங்கிளர்ச்சி செய்திங்கே ஜாதி மாய்க்கப்
பெரியாரின் தொண்டரெல்லாம் சிறைக்குப் போனார்!
அருந்தொண்டர் இராமசாமி வெள்ளைச் சாமி
அங்கேயே மாண்டுவிட்டார் துடிது டித்தே!!
சிறுமனத்து ஆட்சியாளர் சிறைக்குள் ளேயே
சிதைமூட்டத் துணிந்தகதை கேட்ட அம்மை
ஒருமகளாய்ப் போராடி உடல்கள் பெற்றே
ஊர்வலமாய்ச் சென்றடக்கம் செய்தார் தாமே!!
நெருப்பேந்தி இராமபொம்மை எரிய விட்டார்!
நீடு புகழ் இராவணன்பேர் தெரிய வைத்தார்!
தெருவோரம் கடைவிரிப்பார் நூல்கள் விற்க!
தீரமுடன் களங்காண்பார் தலைமை யேற்றே!!
நெருக்கடிகள் வந்தபோதும் நிமிர்ந்து நின்றே
நெருப்பாகி எதிர்த்தவரும் அம்மா தானே!
வரும்பழியை ஏச்சினையே வரவாய்க் கொண்டு
வாசமணப் பெரியார்க்குச் செய்தார் தொண்டு!!
பெரியாரே போய்விட்டார் இனிமேல் இங்கே
பேராட்டம் போடலாமே என்றெ ழுந்த
நரிக்கூட்ட வாலறுத்தே இயக்கம் காத்து
நம்தலைவர் வீரமணி கையில் சேர்த்து
விரிவுலகம் உள்ளமட்டும் பெரியார் கொள்கை
விதந்துவக்கச் செய்தமணி யம்மை யாரின்
அறிவுரைகள் வழிநடப்போம்! அன்னை யாரை
அகத்தினிலே பதித்துவைப்போம் எந்த நாளும்!!
–
மாநிலச் செயலாளர்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு.