பெரியார்க்குப் பின்னிந்த இயக்கந் தன்னைப்
பேரெழுச்சி கொள்ளவைத்துக் காத்த அம்மா!
பெரியார்தம் வாழ்நாளை நீளச் செய்த
பெருந்தொண்டால் சிறந்திட்ட பெருமை அம்மா!
பெரியார்தம் தொண்டர்க்கும் தொண்டர் ஆகிப்
பேரன்பு செலுத்திட்ட பாச அம்மா!
பெரியார்தம் இலட்சியப்போர்க் களத்தில் நின்று
பகைக்கூட்டம் நடுநடுங்க வைத்த அம்மா!
ஆற்றலொடு நிருவாகம் செய்து காட்டி
ஆளுமைக்கோர் இலக்கணமாய் அமைந்த அம்மா!
தூற்றியோர்தம் வார்த்தையெலாம் துச்ச மென்றே
துடைத்தெறிந்து தொண்டறத்தைத் தொடர்ந்த அம்மா!
காற்றிலுதிர் சருகுகளின் சலச லப்பைக்
கண்டஞ்சா கருஞ்சிறுத்தை வீறே அம்மா!
ஏற்றமிகு திராவிடமிங் கிருக்கு மட்டும்
ஏத்தியுன்றன் ஈகத்தைப் போற்றும் அம்மா!
அண்டமிதில் யாங்கணுமே உம்மைப் போல
ஆருமினிப் பிறப்பதுவே இல்லை அம்மா!
கண்டபல போர்க்களத்தே நின்றோர் தம்முள்
கண்டதில்லை உமைப்போலே ஒருத்தர் அம்மா!
கண்டவர்கள் விண்டிட்டார் உன்றன் தொண்டை
விண்டார்கள் கண்டிட்டார் வாழும் போதே!
எண்ணிடுவோம் இயங்கிடுவோம் என்றும் நின்றன்
இணையற்ற ஈகநெறி பற்றி அம்மா!
வியத்தக்க நாத்திகப்பே ரியக்கந் தன்னை
வழிநடத்தி வென்ற முதல் தலைமை அம்மா!
இயக்கத்தைச் சீர்குலைக்க நினைத்த வஞ்ச
இடக்கர்தம் சூழ்ச்சிகளைத் தகர்த்த அம்மா!
இயற்கையிலே எவர்க்குமிலாத் தனித்த பண்பால்
இருந்திட்டாய் பெரியார்க்கே தாயாய் அம்மா!
செயற்கரிய செய்துபெரும் பேறு பெற்ற
சீர்திருத்தத் தந்தையின் சேர்மம் அம்மா!
– கவிஞர் பெரு.இளங்கோ