30 நிறுவனங்களில் ரெய்டு நடத்தி ரூ.335 கோடி தேர்தல் நிதி வசூலித்த பா.ஜ.க.: பரபரப்பு தகவல்கள்

viduthalai
4 Min Read

புதுடில்லி,பிப்.24- அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.அய் மூலம் ரெய்டு நடத்தி 30 தொழில் நிறுவனங் களை மிரட்டி பாஜவுக்கு ரூ.335 கோடி நிதி பெற்றது அம்பலமாகி உள்ளது.
கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறிய ஒன்றிய பாஜ அரசு கடந்த 2018ஆம் ஆண்டு கொண்டு வந்த தேர்தல் பத்தி ரங்கள் திட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது. அரசியல் கட்சிகளுக்கு தொழில் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்துவிட்டு அதற்கு கைமாறாக பிரதிபலன் எதிர்ப்பார்க்க வாய்ப்பு உள்ளது என்றும், யார் நிதி அளித்தது என்ற விவரம் வெளிப்படையாக தெரிவிக்கப்படாமல் இருப்பதையும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியது. நிதி தந்தவர்கள், அதை பெற்றுக் கொண்ட கட்சிகள் பற்றிய விவரங்களை மார்ச் 13ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்ற தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் திட்டம் மூலம் அதிகபட்ச நிதியை பெற்றது பா.ஜ. அந்த கட்சிக்கு மட்டும் கடந்த 2017-2018 முதல் 2022-2023ஆம் ஆண்டு வரை மொத்தம் ரூ.6570 கோடி நிதி தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்திருந்தது. அந்த கால கட்டத்தில் விற்பனையான தேர்தல் பத்திரங்களில் 60 சதவீதம் பாஜவுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தொழில் நிறுவனங்கள் மீது அமலாக்கத் துறை (ஈடி), வருமான வரித்துறை (அய்டி), சி.பி.அய்யை ஏவி அந்த நிறுவனங் களிடம் இருந்து பாஜவுக்கு தேர்தல் நிதி பெறப்பட்டதாக பிரபல ஆங்கில செய்தி இணையதளங்கள் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளன. 2018-2019 முதல் 2022-2023 நிதியாண்டு வரையிலான தேர்தல் ஆணைய ஆவ ணங்கள், வழக்கு விவரங்கள், நிதி அறிக் கைளை ஆய்வு செய்து இந்த தரவுகளை திரட்டிய அந்த இணையதளங்கள் அதனை அம்பலப்படுத்தி உள்ளன.
அதன் விவரம்:
* கடந்த 2018-2019 முதல் 2022-2023 நிதியாண்டு வரை பாஜவுக்கு நிதியளித்த நிறுவனங்கள் பட்டியலை பரிசீலித்ததில் அதில் 30 நிறுவனங்கள் மீது அதே காலகட்டத்தில் ஒன்றிய அரசின் ஈடி, அய்டி, சிபிஅய் ரெய்டு நடத்தியுள்ளது.
* இந்த 30 நிறுவனங்களும் மொத்தம் ரூ.335 கோடியை பாஜவுக்கு தேர்தல் நிதியாக தந்துள்ளன.
* இதில் 23 நிறுவனங்கள் ரெய்டு நடத்தப்படும் வரை பாஜவுக்கு ஒரு பைசா கூட தேர்தல் நிதி தந்தது இல்லை.
* ரெய்டு நடத்தப்பட்டதும் அந்த 23 நிறுவனங்களும் பாஜவுக்கு நிதி தர ஆரம்பித்துள்ளன. மொத்தம் ரு.187.58 கோடி நிதியை அந்த நிறுவனங்கள் பாஜவுக்கு வாரி வழங்கி உள்ளன.
* 4 கம்பெனிகள் ரெய்டு நடத்தப்பட்ட 4 மாதத்துக்குள் பாஜவுக்கு நிதி தந்துள்ளன.
* பாஜவுக்கு ஏற்கெனவே குறைவாக நிதி தந்த 6 நிறுவனங்கள் மீது ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களிலேயே அந்த நிறுவனங்கள் பல மடங்கு அதிக நிதியை பாஜவுக்கு கொடுத்துள்ளன.
* தொடர்ந்து பல ஆண்டுகளாக பாஜவுக்கு நிதி தந்த நிறுவனங்கள் திடீரென நிதி தருவதை நிறுத்திவிட்டால் கூட ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.
* இப்படி 6 நிறுவனங்களை ஈடி, அய்டி, சிபிஅய் அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.
* பாஜவுக்கு நிதி தந்த 32 நிறுவனங் களில் 3 மட்டுமே காங்கிரசுக்கும் நிதி தந்துள்ளன.
* ரெய்டு நடந்து கொண்டிருக்கும் போதே சில நிறுவனங்கள் பாஜவுக்கு நிதி தந்ததும் தெரியவந்துள்ளது.
* நன்கொடை தந்த 3 நிறுவனங் களுக்கு ஒன்றிய அரசிடம் இருந்து ணீலைசென்ஸ் உள்ளிட்ட சலுகைகள் கிடைத்துள்ளது. இந்த விவகாரத்தில் நிதி தந்த நிறுவனங்கள் பற்றி மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
ஈடி, அய்.டி, சி.பிஅய்யை பயன்படுத்தி தொழில் நிறுவனங்களில் ரெய்டு நடத்தி மிரட்டி பாஜவுக்கு தேர்தல் நிதி குவித்த விவகாரம் அம்பலமானது அரசியல் வட்டாரங்களில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசுக்கு இது பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரச பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜனநாயகத்தின் இருண்ட காலம் : காங். கடும் சாடல்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே: சர்வாதிகார மோடி அரசு மிரட்டல், நிதி தீவிரவாதம் மூலம் ஜனநாயகத்தை கைப்பற்ற முயற்சித்தது தற்போது நிரூபணமாகி உள்ளது. சி.பி.அய், ஈடி, அய்.டி துறைகளை தவறாக பயன்படுத்தி நிதி பெற்றது அம்பலமாகிவிட்டது. ரெய்டில் சிக்கிய நிறுவனங்கள் சில மாதங்களிலேயே பாஜவுக்கு நிதியை கொட்டிக் கொடுத்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் பணத்தை கொள்ளையடித்த பிரதமர் மோடி மறுபுறம் தொழில் நிறுவனங்களை அச்சுறுத்தி பாஜ கஜானாவை நிரப்பியுள் ளார். இது இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலம். நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் இதை எதிர்த்து போராடுவோம்.

மேலும் ஆதாரம் வெளியாகும்
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்: விசாரணை- கட்சி நிதி. இதுதான் தொழில் நிறுவனங்களை மிரட்ட மோடி, அமித் ஷா கண்டுபிடித்த மாடல். தேர்தல் பத்திரங்கள் திரட்ட விவ ரங்களை ஏன் ரகசியமாக வைத்தார்கள் என்பது இப்போது தெரிந்துவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் பத்திரங்களை வழங்கியோர் விவரங்கள் வெளியாகும்போது இன்னும் பல ஆதாரங்கள் வெளிவரும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *