கருநாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் மண்டிப் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் பாபு. இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பாகத் தான் குழந்தை பிறந்திருந்தது. சம்பவத்தன்று, நள்ளிரவில் குழந்தைக்குப் பால் கொடுத்து விட்டு சுமதி தூங்க வைத்திருந்தார். இந்த நிலையில், மறுநாள் அதிகாலையில் அந்த குழந்தை வாயில் ரத்தம் வந்தும், வயிறு பெரிதாகியும் உயிர் இழந்திருந்தது. இதனால் சுரேஷ் பாபு, அவரது மனைவி அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், பச்சிளம் குழந்தை சாவுக்கு மண்டிப்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்திக்காக அதிக ஒலியுடன் பாட்டு வைத்திருந்ததே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மண்டிப்பேட்டையில் பிள்ளையார் சிலை கரைப்புக்காக விடிய, விடிய அதிக ஒலியுடன் பாடல்களும், மேளங்களும் முழங்கியதுடன், வாலிபர்களும் சத்தம் போட்டபடியே இருந்துள்ளனர். அந்த ஒலி காரணமாக பச்சிளம் குழந்தைக்கு நெஞ்சுவலி உண்டாகி வாயில் ரத்தம் வந்து இறந்திருக்கலாம் என்று மருத்துவ ஆய்வில் கருதப்படுகிறது. அதிக ஒலியே தங்கள் குழந்தையின் சாவுக்கு காரணம் என்று சுரேஷ் பாபு, சுமதி குற்றச்சாட்டு கூறியுள்ளனர். இந்த சம்பவம் மண்டிப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
‘நாய்ஸ் பொல்யூசன்’ என்பது இதுதான். கோயில்களில் ஒலிபெருக்கி வைப்பது குறித்த தீர்ப்புகள் எல்லாம் வந்திருந்தும் யார் கடைப்பிடிக்கிறார்கள்?
***
மும்பைக்கு அருகில் உள்ள கல்யாண் என்ற பகுதியில் பிள்ளையார் சிலை ஊர்வலம் நடந்துகொண்டு இருந்தது. ஊர்வலத்தில் பலர் மதுபோதையில் ஆடிக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களின்மீது ஏறி ஊர்வலத்தில் சென்ற நபர்கள் ஆடத் துவங்கினர். இதனை கார்களின் உரிமையாளர்கள் தட்டிக் கேட்டுள்ளனர். இதனை அடுத்து ஊர்வலத்தில் வந்த நபர்கள் கார் உரிமையாளரை தாக்கியுள்ளனர். இதில் கார் உரிமையாளரும் அவரது உறவினர் ஒருவரும் படுகாயமடைந்தனர். காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தாக்குதல் நடத்திய குணால் இங்ளே என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். பிள்ளையார் ஊர்வலத்தின் போது மதுபோதையில் இருந்ததால் தவறு நடந்துவிட்டதாக கூறிய நிலையில் அவரிடம் எழுதி வாங்கிவிட்டு காவல்துறையினர் விடுதலை செய்து விட்டனர்.
இதுவரை பிள்ளையார் ஊர்வலம் சென்றவர்கள் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலங்களையும் இஸ்லா மியர்களையுமே குறி வைத்து தாக்கிவந்தனர். தற்போது ஹிந்துக்களையும் தாக்க ஆரம்பித்துவிட்டனர்.
பக்தி வளர்க்கும் ஒழுக்கம் இதுதான் போலும்!
***
புனே நகரில் உள்ள பிப்புரி என்ற பகுதியில் பிள்ளையார் ஊர்வலம் சென்றுகொண்டு இருந்தது. அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபத்தில் மரண மடைந்த மகனின் உடலை அப்போதுதான் வீட்டிற்குக் கொண்டு வந்தனர். வீட்டில் உள்ள அனைவரும் அழுதுகொண்டு இருந்தனர். அப்போது அவர்களின் வீட்டின் முன்பு பிள்ளையார் ஊர்வலத்தில் சென்ற நபர்கள் ஒலி பெருக்கியில் பாடல்களை இசைத்துக் கொண்டும் ஆடிக் கொண்டும் இருந்தனர். இதனை அடுத்து இறந்த மகனின் தந்தையான சுனில் ஷிண்டே என்பவர் ஆடிக்கொண்டு இருந்த நபர்களிடம் “எங் களின் நிலைமையைப் புரிந்து கொள்ளுங்கள். எங்களின் மகனின் உடல் வீட்டில் இருக்கிறது. கடந்த ஆண்டு உங்களோடு இதே ஊர்வலத்தில் ஆடிப்பாடிய உங்கள் நண்பன் பிணமாக இருக்கிறான். வீட்டில் அனைவரும் மிகவும் துக்கத்தில் உள்ளனர்; தயவு செய்து அமை தியாகச் செல்லுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவரது பேச்சைக் கேட்காமல் அவர்கள் ஆடிக்கொண்டு இருந்தனர். இதனை அவரது உறவினர் ஒருவர் அடுத்தவர்களின் வேதனையை புரிந்து கொள்ளாமல் இப்படிச்செய்கிறீர்களே என்று கேட்டுள்ளார்.
உடனே ஊர்வலத்தில் சென்ற நபர்கள் சுனில் ஷிண்டேவின் உறவினரை இரும்புக் கம்பிகள் கொண்டு தாக்கத் துவங்கினர். இதனைத் தடுக்க வந்த இறந்துபோன இளைஞனின் தந்தை சுனில் ஷிண்டே உள்பட அவரது உறவினர்களை ஊர்வலத்தில் சென்ற வர்கள் கடுமையாகத் தாக்கினர். ஊர்வலத்திற்கு பாது காப்பாக வந்த காவலர்களும் இதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர். இறந்துபோன இளைஞனின் தந்தை உட்பட 7 பேர் பிள்ளையார் ஊர்வலத்தில் வந்த வன்முறையாளர்கள் நடத்திய தாக்குதலின் காரணமாக கடுமையான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வன்முறை தொடர்பாக 21 பேர் மீது புனே காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.
பக்தியின் கோரத் தாண்டவத்தில் மனிதநேயம் ஓர் இழை அளவுக்குக்கூட இல்லையே!
மத வெறியை அரசியல் முதலீடாகக் கொண்ட வர்களின் ஆட்சியில் என்னதான் நடக்காது?