புதுடில்லி, பிப்.4- மாநிலங்களவையில் 02.02.2024 அன்று தி.மு.க. கழக உறுப்பினரும் தொ.மு.ச. பேரவைப் பொதுச்செயலாளருமான மு.சண்முகம் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்பொழுது அவர் பேசியதாவது:–
தற்பொழுது ஒரு தொழிலாளி ரூபாய் 21,000க்கு மேல் ஊதியம் பெற்றால் அவர்களுக்கு இ.எஸ்.அய்.சி – இல் மருத்துவ வசதிகள் கிடைக்காது. 21,000 ரூபாய் மாத ஊதியம் என்பது தற்பொழுது சாதாரணமாக உள்ளது. எனவே பெரும்பாலான தொழிலாளர்களும் இந்த இ.எஸ்.அய்.சி. திட்டத்தில் இருந்து வெளியே வந்து விடுகின்றனர். இத்திட்டம் தொடர்வதற்கு இ.பி.எப்..-இல் உள்ளது போல ரூபாய் 21,000 அனைவருக்கும் கட்டாயமாக்கி இ.எஸ்.அய்.சி. பலனை அனை வரும் பெறும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும். இதனால் உறுப்பினர் களின் எண்ணிக்கையும் பணப்பலனும் கூடுதலாக கிடைக்கும்.
அதேபோல இ.எஸ்.அய்.சி. 1950 விதி எண் 52-இ-ன் படி நாள் ஒன்றுக்கு சராசரியாக 172 ரூபாய்க்கு குறைவாக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு அவர்களுடைய பங்கினை செலுத்த வேண்டிய அவசியமில்லை. அதன்படி பார்த்தால் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் சராசரி யாக அந்த ரூபாய் 172–அய் விட குறைவாக கிடைப் பதால் அனைவரையும் இ.எஸ். அய்.சி.திட்டத்தின் கீழ் கொண்டுவந்து இ.எஸ்.அய்.சி. திட்டத்தின் பலனைஅனைத்து உழைக்கும் வர்க்கத்தினரும் பெறும் வகையில் ஏற்பாடு செய்வதற்கு அரசு முன்வர வேண்டும். இவ்வாறு கழக உறுப்பினர் மு.சண்முகம் வலியுறுத்திப் பேசினார்.