ஹிந்துத்துவவாதிகளின் பார்வைக்கு! இஸ்லாமியர்களின் தயாபரம்!

viduthalai
2 Min Read

 கருஞ்சட்டை 

பழனிக்குப் பாத யாத்திரை செல்லும் முருக பக்தர் களுக்கு மொபைல் போன் சார்ஜ் செய்யும் வசதி ஏற்படுத்தி, தாராபுரத்தைச் சேர்ந்த முஸ்லிம் வியாபாரி ஒருவர் சேவை அளித்து வருவதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் முருகன் கோவிலுக்கு தைப்பூசத் தேரோட்டத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பாதயாத்திரை யாக செல்வது வழக்கம். அவ்வகையில், பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு குடிநீர், பிஸ்கட், உணவு என பல்வேறு இடங்களிலும் பலரும் இலவசமாக வழங்குவர்.
இவ்வாறு பழனி பாத யாத்திரை பக்தர்களுக்கு திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த பாய் வியாபாரி அன்வர் அலி, (வயது 62) என்பவர், தன் கடை முன் மொபைல் போன் சார்ஜ் செய்து கொள்ளும் வகையில், 65 பிளக் பாயின்ட் பேனல் போர்டு அமைத்துள்ளார். ‘ஒரு தாய் மக்கள் நாம் என்போம்’ என்ற தலைப்பில் பழனி பாத யாத்திரை பக்தர்கள் தங்கள் மொபைல் போன்களை இலவசமாக சார்ஜ் செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு பலகையும் வைத்துள்ளார். காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த சேவையை அவர் வழங்கி வருகிறார். மதம் கடந்து மனிதநேயம் காட்டி வரும் அன்வர் அலியின் சேவையை, பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் பாராட்டுகின்றனர்.

(‘தினமலர், 20.01.2024)

காஷ்மீரில் இருந்து ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு புனித நீர் அனுப்பிய முஸ்லிம் நபர்: இங்கிலாந்து வழியாக அனுப்பினார்

அயோத்தி ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதி களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்படுகிறது.
அந்த வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த தன்வீர் அகமது என்பவர் புனித நீர் அனுப்ப விரும்பினார். இதற்காக அங்குள்ள சாரதா பீடத்தில் இருந்து புனித நீரை எடுத்தார். ஆனால், புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்தியாவுக்குத் தபால் சேவைகள் நிறுத்தப்பட்டு உள் ளதால், புனித நீரை அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

எனவே, அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசிக்கும் தனது மகள் மக்ரிபிக்கு புனித நீரை அனுப்பி வைத்தார். அதை பெற்றுக்கொண்ட மக்ரிபி, அங்கு வசித்துவரும் காஷ்மீர் பண்டிட்டான சோனல் ஷேரிடம் அதை ஒப்படைத்தார்.

ஆகஸ்டு மாதம் ஆமதாபாத் வந்த சோனல் ஷேர், டெல்லி சென்று காஷ்மீர் சாரதா பாதுகாப்பு கமிட்டி நிறுவனர் ரவிந்தர் பண்டிடாவிடம் புனித நீரை ஒப்படைத்து உள்ளார். இது ராமர் கோவில் கும்பாபி ஷேகத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம் நபர், பல்வேறு சிரமங்களைக் கடந்து, ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு புனித நீர் அனுப்பி வைத்திருப்பது ராமர் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(‘தினத்தந்தி’, 21.1.2024)

முஸ்லிம்களைப் பகைவர்களாகக் காட்டி, வெறுப்பு அரசியல் நடத்தும் பா.ஜ.க.வினர் இதனைப் பார்த் தாவது புத்தி கொள்முதல் பெறுவார்களா?
முஸ்லிம்கள் குடியுரிமையின்றியும் வாழத் தயாராக இருக்கவேண்டும் என்று எம்.எஸ்.கோல்வால்கர் கூறியதையும் இந்த இடத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும். (We or Our Nationhood Defined).

‘‘மதம் பிடிப்பது” யாருக்கும் நல்லதல்ல!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *