பழங்குடியினத்தவரான குடியரசுத் தலைவருக்குக் கொடுக்கும் பொருளைத் தொட்டதால் ஏற்பட்ட தீட்டை உடனடியாகத் தீட்டுக்கழிக்கத்தான் இந்த ஜலகண்டி!
கடந்த மாதம் இளைய சங்கராச்சாரியார் டில்லி சென்று குடியரசுத் தலைவரைச் சந்தித்தார். அப்போது அவருக்கு வெள்ளை ஆடைகளை வழங்கி ஆசீர் வாதம் செய்தாராம். அவர் குடியரசுத் தலைவருக்கு நேரடியாக ஆடைகளைக் கொடுக்கவில்லை. அவரது உதவியாளர் ஒருவர் குடியரசுத் தலைவருக்கு ஆடை களைக் கொடுக்க, அதை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி தொட்டு மட்டும் கொடுத்தார். அப்படி அவர் தொடும் போது கையில் நீர் உள்ள சொம்பு (தீட்டுக் கழிக்கப் பயன்படும் ஜலகண்டி) வைத்திருந்தார்.
தீட்டு பட்டால் அதை கழிக்க கவுதமமுனிவர் கூறியதாக வேதங்களில் சில மந்திரங்கள் உண்டு.
அதாவது,
கூட்டத்தில் சென்று வீட்டிற்கு வந்த பிறகு உடல் முழுமைக்குமான மந்திரம் –
ஓம் ஹாம் ஹ்ருதயாய நம:
யாருடைய கையேனும் தலையில் பட்டுவிட்டால்-
தலைக்கான மந்திரம் ஓம் ஹீம் ஸிரஸே நம:
குடுமி யார் மீதாவது பட்டுவிட்டால் –
ஓம் ஹூம் ஸிகாயை நம:
தவறுதலாக தான் யாரையாவது தொட்டுவிட்டால்-
சரீரத்திற்கான(தோல்) மந்திரம் ஓம் ஹைம் கவசாய நம:
சூத்திரர்களைப் பார்த்துவிட்டால் –
பார்வைக்கான மந்திரம் ஓம் ஹௌம் நேத்ரேப்யோ நம:
பலர் நடந்த தெருக்களில் நடந்துவிட்டால் –
பாதங்களுக்கான மந்திரம் ஓம் ஹ: அஸ்த்ராய நம:
இந்த அய்ந்து மந்திரங்களைச் சொல்லி தண்ணீர் தெளித்து தீட்டுக்கழிப்பார்கள்
புரிகிறதா! காஞ்சி சங்கராச்சாரியார் கையில் ஜலகண்டி இருப்பதற்கான காரணம்?
குடியரசுத் தலைவருக்கு ஏன் வெள்ளை ஆடையைக் கொடுத்தார் – புரிந்துகொள்ளுங்கள்!
புதிய நாடாளுமன்ற கட்டட அடிக்கல் நாட்டு விழாவுக்கோ, திறப்பு விழாவுக்கோ ஏன் குடியரசுத் தலைவருக்கு அழைப்பிதழ் கொடுக்கவில்லை – இதே காரணம்தான்!
சென்னையில் தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் (3.4.1983) நடைபெற்ற இந்திய சமய கலை விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு, அவ்விழாவை ஏற்பாடு செய்த காஞ்சி சங்கராச்சாரியார், தனது சீடர் ஒருவர்மூலம்தான் எம்.ஜி.ஆருக்குப் பட்டாடை கொடுத்தார் என்பதையும் நினைவூட்டுகிறோம்.
ஹிந்து ராம ராஜ்ஜியம் – மின்சாரம் –

Leave a Comment