ஆசிரியர் விடையளிக்கிறார்

3 Min Read

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 1: அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அயோத்தியில் இராமர் கோவில் திறக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் சொல்லியிருப்பது எதைக் காட்டுகிறது?

-ச.சீனிவாசன், ஆரணி

பதில் 1: 

1.அவர்களிடம் வேறு குறிப்பிடத்தக்க சாதனை ஏதும் இல்லை (வேலைவாய்ப்பு – வளர்ச்சி – கல்வி போன்று). 

2. மதச்சார்பின்மை என்ற அரசியல் சட்டத்தின் கூற்றை நாங்கள் மதிப்பவர்கள் அல்ல; மிதிப்பவர்கள். 

3. 2024 பொதுத் தேர்தலுக்கு வடமாநிலங்களில் இராமரையே நம்புகிறோம் – முதலீடாக. 

– இப்படிப் பலப்பல அர்த்தங்கள் உண்டு.

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 2: ஜோதிடர்கள் சொல்வது பொய் என்று தெரிந்திருந்தும், அவர்கள் சொல்வதை நம்புபவர்களைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?

– பா.முகிலன், சென்னை

பதில் 2 : மூளை இருந்தும் பயன்படுத்தத் தெரியாத பாமரத் தன்மையர்கள் என்று அவர்கள் மீது பரிதாபப்படுவதைத் தவிர வேறு ஒன்றுமில்லை!

கேள்வி 3: தமிழ்நாடு அரசிற்குத் தொடர்ந்து இடையூறுகளைக் கொடுத்துவரும் தமிழ்நாடு ஆளுநரின் செய்கை தன்னிச்சையானதா?

-ஏ.நடராஜ், மதுராந்தகம்

பதில் 3 : இல்லை; நிச்சயமாக இல்லை. அதற்கு மேலிடத்தின் தூண்டுதல், கண் ஜாடை உண்டு – பின்னணி பற்றிய தகவல்கள்  நிச்சயம் வரும் – அம்பலப்படுத்துவோம்!

கேள்வி 4: வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களிடம் உங்கள் ஏ.டி.எம். கார்டு எண்ணை சொல்லுங்கள்; நாங்கள் வங்கியில் இருந்துதான் பேசுகிறோம் என்று தொலைப்பேசியில் தொடர்புகொண்டு ஏமாற்றுகிறார்களே, இதைத் தடுப்பதற்கு வழியில்லையா?

– கி.இராமலிங்கம், செம்பியம்

பதில் 4 : தற்காத்து தற்கொண்ட கணக்கினைப் பாதுகாக்கத் தெரியாதவர்கள் நிலை பரிதாபத்திற்குரியது – உங்களுக்காக மற்றவர் உண்ண முடியுமா? எண்ண முடியுமா?

கேள்வி 5: தமிழ்நாட்டில் ஆட்சிதான் மாறியிருக்கிறது; ஆனால், அரசு அதிகாரிகள் பழைய ஆட்சியினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறார்கள் என்று சொல்கிறார்களே, இது ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தாதா?

-கே. பழனிச்சாமி, பழனி

பதில் 5 : நிச்சயமாக. முதல் அமைச்சர் இதற்கு நிச்சயம் முடிவு கட்டுவார் என்று நம்புவோம்.

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 6:  இன்றைய இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருவது எதிர்கால  சந்ததியினரை பாதிக்காதா?

– மு.சுந்தரமூர்த்தி,  சேலம்

பதில் 6 : உறுதியாக. எனவேதான் கவலையோடும் பொறுப்போடும் அனைவரும் இணைந்து தீர்வுகாண வேண்டும்.

கேள்வி 7 : ஜாதி வாரிக் கணக்கெடுப்பை பீகார் அரசு தொடங்கியுள்ளதே, தமிழ்நாட்டிலும் அது சாத்தியப்படுமா?

– மு.செல்வம், கன்னியாகுமரி

பதில் 7 : நாமும் முயன்றால் முடியாதது ஏதுமில்லை. நிச்சயம் தமிழ்நாடு இதில் ஈடுபடுவது அவசியம்!

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 8: கரோனா காலகட்டத்தில் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட ஒப்பந்த செவிலியர்களுக்குப் பணி நீட்டிப்புச் செய்ய தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன்?

– கி.விஜயகுமார், விழுப்புரம்

பதில் 8 : அரசு தயங்கவில்லை. அதில் நீதிச் சிக்கலும் சட்டச் சிக்கலும் இணைந்துள்ளன. நம் முதலமைச்சர் மனிதாபிமானி. நிச்சயம் விரைவில் முடிப்பார். யாரையும் பாதிக்கப்பட விடமாட்டார். தீர்வில்லாப் பிரச்சினைகள் என்று எதுவும் கிடையாது.

கேள்வி 9:  பி.ஜே.பி. அண்ணாமலையின் ஆட்டமும் – ஆளுநரின் ஆட்டமும் அளவு மீறிக்கொண்டிருக்கிறதே?

– ச.சரண்யா, சென்னை

பதில் 9 : ‘பீலிபெய் சாக்காடும் அச்சிறும்’ என்ற குறளை நினைவுப்படுத்தி அவர்களுக்கு சொல்லலாம். நுனிக்கொம்பருக்கு தவறான பொருள் கொண்டு விடக் கூடாது என்றே அக்குறளை நாம் கவனத்தில் கொள்ளவில்லை.

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 10: சென்னையில் நடைபெறும்  புத்தகக் காட்சியில் திருநங்கையர்களுக்கு ஓர் அரங்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறதே, இந்நிலை தமிழ்நாடு முழுவதும் தொடருமா?

– க.ராஜூ,  சேலம்

பதில் 10 : தொடருவார்கள் என்று நம்புவோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *