தொழிலாளிகளை பங்காளியாக்குவதே நமது இலக்கு!
தமிழர் தலைவர் அறிவிப்பும் – கருத்துரையும் -திராவிடர் கழக தொழிலாளரணி மாநிலக் கலந்துரையாடலில்
16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
சென்னை, ஜன.31- திராவிடர் கழக தொழிலாளரணி மாநிலக் கலந்துரையாடல் கூட்டம் நேற்று (30.1.2023) பிற்பகல் சென்னைப் பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார். 16 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தீர்மானம் 1 :
அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டல திராவிடர் தொழிலாளர் சங்க மத்திய சங்க தலைவர் இராமசாமி அவர்கள் 17.12.2022ஆம் தேதி இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இந்தக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 2 :
போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அரசு ஊழியர் போல் மருத்துவ காப்பீடு மூலம் மருத்துவ சிகிச்சை உறுதி செய்யப்பட வேண்டும். (14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்ச வார்த்தையின் போது இது ஏற்றுக் கொள்ளப்பட்டது).
தீர்மானம் 3 :
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களை தனது உழைப்பால் உயர்த்திய ஓய்வு பெற்றவர்களக்கு கடந்த 7 (ஏழு ஆண்டு) ஆண்டுகளாக ஓய்வு பெற்றவர்களின் ஊதியத் துடன் காலமுறையான ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உயரும் அகவிலைப்படியினை உயர்த்தி வழங்காமல் நிலுவையில் உள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு நவம்பர் 2022 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என உத்ரவிட்ட பின்னரும் அதை நிறைவேற்றாமல் அரசும், ஓய்வூதிய பொறுப்பாட்சியரும், அதை எதிர்த்து தடை உத்தரவு பெற்றுள்ளனர். இந்த நடவடிக்கைகளை உணர்ந்த மாண்புமிகு தமிழ்நாடு முதல மைச்சர் அவர்கள் தலையிட்டு 208% புள்ளிகள் உயர்ந்த போதும் 119% மட்டும் பெற்றுக் கொண்டுள்ள சுமார் 86 ஆயிரம் ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வு மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 4 :
கடந்த 10 ஆண்டுகளாக புதிதாக தொழிலாளர்கள் வேலைக்கு (ஓட்டுநர், நடத்துநர் தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள்) அமர்த்தப்படவில்லை. எனவே, பணியில் இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு முன் னுரிமை அளித்து உடனடியாக புதிய தொழிலாளர்களை பணியமர்த்தப்பட வேண்டும். தி.மு.க. அரசு பொறுபேற்றதற்குப் பின் சுமார் 135 பேருக்கு மட்டும் வாரிசு வேலை வழங்கப்பட்டிருப்பதை இக்கூட்டம் பாராட்டுகிறது.
தீர்மானம் 5 :
14ஆவது ஊதிய ஒப்பந்தம் சிறப்பாக முடிந்தாலும் பல போக்குவரத்து கழகங்களில் முழுமையாக நிறைவேற்றப் படவில்லை. உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். அதே போல் கழக ஓய்வூதியர்களுக்கு அரசு ஊழியர், ஆசிரியர், மின் வாரியம் போல் அனைத்து ஓய்வு கால பணப் பலன்கள் அனைத்தும் ஓய்வு பெறும நாள் அன்றே வழங் கப்பட வேண் டும் என தமிழ்நாடு அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 6 :
கடந்த 1.4.2022 முதல் ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் பணியில் இறந்த தொழிலாளர்களுக்கு அவர் களின் ஓய்வு கால பணப் பலன்கள் வழங்கப்படவில்லை. அவை உடனே வழங்கப்படவேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 7 :
14ஆவது ஊதிய ஒப்பந்தம் (12/3) பெரும்பான்மை சங்கங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சிறப்பாக ஊதிய உயர்வு வழங்கிய திராவிட மாடல் தி.மு.க. அரசுக்கு நமது நன்றி. ஆனால், ஊதிய ஒப்பந்த சம்பள உயர்வு 1.9.2019 முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால், ஒப்பந்தம் 24.8.2022 அன்று காலதாமதமாக நிறைவேற்றப்பட்டதால் 1.9.2019 முதல் 31.8.2022 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதுடன் பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி போன்றவை மாற்றியமைக்கப்படவேண்டும்.
தீர்மானம் 8 :
வருகின்ற 30.1.2023ஆம் தேதி அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் சென்னை பெரியார் திடலில் நடைபெறும் மாநில தொழிலாளர் அணி கலந் துரையாடல் கூட்டத்திற்கு அதிக அளவில் தொழிலாளர்கள் கலந்து கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்வதென இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 9 :
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பழனி பாலாறு- பொருந்தலாறு கூட்டுக் குடிநீர் திட்டம் (CWSS-175) பழனி-2010ஆம் ஆண்டு முதல் இன்று வரை தொடர்ந்து 480 நாள்கள் பணி முடித்த ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.
நிரந்தத்தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்ததாரரை நியமனம் செய்யக் கூடாது. பணியின்போது விபத்தினால் உயிரிழந்த, ஊனமுற்ற தொழிலாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். பணியில் இருக்கும் தொழிலாளர்களுக்கு சீருடை மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.
பணியாளர் பற்றாக்குறையால் பணிச் சுமை பல மடங்கு கூடுவதால் போதுமான பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணி நேரம் வரைமுறைப் படுத்தப்படுவதோடு உரிய பாதுகாப்புச் சாதனங்கள் வழங்கி பணியாளர்கள் அனைவருக்கும் E.S.I., PF பிடித்தம் போன்ற வசதிகள் ஏற்படுத்தித்ததர வேண்டும் என தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 10 :
சேலம் காரிப்பட்டியில் செயல்படும் ஹட்சன் அக்ரோ புராடக்ட்ஸ் நிறுவனம் சுற்றுப் புறத்திலுள்ள தொழிலார்களைப் பணியமர்த்தி அவர்களுக்கு சட்டப்படியாக வழங்க வேண்டிய சம்பளம் ESI, PF போன்ற அடிப்படை வசதிகளை செய்து தராமல் தொழிலாளர்களை கொத்தடிமைகள் போல நடத்துவதை கண்டிப்பதுடன் மாசுக் கட்டுப்பாடு வாரியமும், தொழிலாளர் நல அதிகாரிகளும் ஆய்வு செய்து தொழிலாளர் களுக்கு விரோதமாக செயல்படும் ஹட்சன் அக்ரோ புராடக்ட்ஸ் நிருவாகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்கிறோம்.
தீர்மானம் 11 :
ஒப்பந்ததாரரிடம் முதன்மை வேலை அளிப்பவர்கள் ஒப்பந்த தொழிலாளர் பணி வழங்குகிறார்கள். ஒப்பந்ததாரர் ஒப்பந்த உரிமம் பெற்று ஆண்டுக்கு ஆண்டு புதுப்பித்து வேலை செய்கிறார்கள். ஆனால், அரசு ஒப்பந்தத் தொழிலாளர் முறைப்படுத்துதல் மற்றும் நீக்குதல் சட்டம் 1970 (CLR&A act 1970) சட்டத்தை அவர்கள் முறைப்படுத்துவதில்லை.
மேலும் ஒப்பந்தம் அளிக்கும முதன்மை வேலையளிப்பவர் தொடர்ச்சியாக வேலைகளையும் ஒப்பந்த அடிப்படையில் வேலை வாங்குகிறார்கள். இந்த முறையை மாற்றி அமைக்க வேண்டும்.
ஒப்பந்ததாரருக்கு வழங்கும் வேறு தொடர்ச்சியில்லாத வேலைகளை மட்டும் வழங்க வேண்டும். அப்போதுதான் அரசு இயற்றியுள்ள சட்டம் தொழிலாளர்களுக்கு பயன் அளிக்கும் சட்டமாகும். ஒன்றிய – மாநில அரசுகள் இந்தச் சட்டத்தை ஒப்பந்தத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் மாற்றி அமைக்க ஆவன செய்ய வேண்டும்.
ஒப்பந்தம் வழங்கும் முதன்மை வேலையளிப்பவர் ஒப்பந்ததாரர்களை மாற்றி ஒப்பந்தம் வழங்கும்போது ஏற்கெனவே அந்தப் பணிகளை செய்துவந்த தொழிலாளர்களுக்கு தொடர் பணிகள் வழங்குவதில்லை. எனவே, ஒப்பந்ததாரர் மாறினாலும் ஏற்கெனவே பணியாற்றிய தொழிலாளர்கள் பாதிக்காத வண்ணம் அந்தப் பணியாளர்களுக்கே வேலை வழங்கும் வகையில் ஒப்பந்தங்களை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
தீர்மானம் 12 :
100 நாள் வேலையை 150 நாள்களாக உயர்த்தித் தரவேண்டும்.
100 நாள் வேலை ஊதியம் ரூ.250 ஆக உயர்த்தித் தரவேண்டும்.
ஒவ்வொரு அட்டைதாரருக்கும் கட்டாயம் 150 நாள்கள் வேலை தரவேண்டும்.
விவசாயத் தொழிலாளர்கள் விவசாயம் செய்யக்கூடிய நேரத்தில விபத்து ஏற்படும்போது அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
ஆண் – பெண் ஊதியம் சமமாக வழங்கப்பட வேண்டும்.
60 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.
தீர்மானம் 13 :
ESI கார்ப்பரேசன் மூலமாக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மருத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. தற்சமயம் ESI கார்ப்பரேசன் தொழிலாளர்களின் மாதச் சம்பளம் ரூ.20,000/-க்கு அதிகமாக உள்ளவர்களுக்கு மருத்துவ வசதி இல்லை எனக் கூறியுள்ளது. ஆகவே, ESI கவரேஜ் இல்லாத தொழிலாளர்களுக்கு அந்தந்த தொழிற்சாலைகளே மருத்துவ செலவை சரி செய்ய வழிவகை செய்ய வேண்டும்.
தீர்மானம் 14 அ:
தமிழ்நாடு பெரியார் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்கம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் கிராமங்களில உள்ள அனைத்து அமைப்பு சாரா கட்டுமானத் துறை சார்ந்த தொழிலாளர்களை சந்தித்து தமிழ்நாடு அரசின் நலவாரிய சமூக நலத் திட்டங்களை எடுத்து கூறி அவர்களை நமது சங்கத்தில் உறுப்பினராக சேர்த்து நல வாரிய நலத்திட்ட உதவிகளை பெற்றுத் தர நமது சங்க மாவட்டப் பொறுப்பாளர்கள் சங்கப் பணிகளை மேற்கொள்ள இக்கூட்டத்தில் வழியுறுத்தப்படுகிறது.
தீர்மானம் 14ஆ :
நமது சங்கப் பணிகளை எளிமைப்படுத்தி நமது சங்கத்தை விரிவுபடுத்தும் வகையில் மாவட்டங்களில் உள்ள கிராமப் பகுதியில் புதியதாக சேர்க்கும் உறுப்பினர்களை ஒன்று இணைக்கும் வகையில் அப்பகுதியில் 25 உறுப்பினர்களுக்கு மேல் சேர்ந்தால் அங்கு கிளை சங்கம் துவங்கி பொறுப்பாளர்களை நியமித்து அப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் நலனில் கலந்து கொள்வதோடு அவர்களின் தொழில் சார்ந்த பிரச்சினைகளையும், வாழ்வாதார பிரச்சினைகளையும் தீர்த்து வைத்து பாதுகாப்பு வழங்கிடவும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 14இ :
தமிழ்நாடு கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் புதிய பதிவு, புதுப்பித்தல், கல்வி உதவித் தொகைகள், உதவித் தொகைகள் மற்றும் பென்சன் உதவி தொகைகளைப் பதிவு செய்தால் மாத கணக்கில் நலவாரிய பணிகள் நீண்ட கால தாமதம் ஆகிறது. விண்ணப்பம் செய்தால் கிராம நிருவாக அலுவலர் காலதாமதம் செய்கிறார். தமிழ்நாடு நல வாரியத்தில் பதிவு பெற்ற விண்ணப்பங்களை / தாமதப்படுத்தாமல் விரைந்து முடிக்க அரசு துறைகளை வழியுறுத்துவது என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 14ஈ :
தமிழ்நாடு கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் ஓய்வு பெறும வயதில் ஓய்வு ஊதியமாக ரூ.1000 என்பதை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் ரூ.5000ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துவது என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 14 உ :
தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில பதிவு செய்து அட்டை பெறும் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுக்கும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் போல் வாரியத்திற்கும் எளிமையான காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்தி பதிவு அட்டையை பயன்படுத்தி மருத்துவ உதவியாக ரூ.500000 (ரூபாய் அய்ந்து லட்சம் மட்டும்) வரை காப்பீடு பெற தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 15அ :
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் அரசு மின் பணியாளர்களே மின் இணைப்புப் பணிகளுக்கு அரசு விதிகளுக்கு புறம்பாக அவர்களே ஆள் வைத்து செய்து கொள்கிறார்கள். உரிய உரிமம் பெற்று அப்பணி புரியும் தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா மின் பணி செய்யும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை அழித்து வருவதைத் தடுத்து இப்பணியினை வேலை இல்லா திண்டாட்டத்தில் இருக்கும் தொழிலாளர்களிடமே வழங்கிட உதவி செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிட வேண்டுமாய் தமிழ்நாடு அரசையும் மின் பகிர்மான கழகத்தையும் வலியுறுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 15ஆ :
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வருவாய் வருவதைத் தடுத்திடும் நோக்கில் வணிக கட்டடங்களுக்கு மின் இணைப்பு தருவது. இதனால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கினை விரைந்து முடித்து, இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் அரசுக்கும் மின் வாரியத்திற்கும் நடவடிக்கை மேற்கொள்ள உரிய வருவாய் ஈட்டிட ஆவன செய்யுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும் திராவிட மாடல் அரசையும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 16அ :
ஒன்றிய மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப் பட வேண்டும். சமூகநீதியை ஒழித்துக்கட்டுவதற்காக பொதுத்துறை பங்குகள் விற்பதை வன்மையாக கண்டிக்கிறோம். அதை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். அரசுத் துறை நிறுவனங்கள் பொதுத் துறைகளாக மாற்றப்படுவதை கைவிட்டு சமூகநீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
தீர்மானம் 16ஆ :
ஒன்றிய அரசின் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தி தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என வலியறுத்துகிறோம்.
தீர்மானம் 16இ :
ஒன்றிய அரசின் நிறுவனங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை அந்தந்த மாநிலத்தைச் சார்ந்தவர்கள் 80% பணியமர்த்ப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
– தீர்மானங்களை திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வி.மோகன் முன்மொழிந்தார்.