பிபிசி ஆவணப்படம் உங்கள் முன்!
மின்சாரம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)
இலண்டன் பி.பி.சி. நிறுவனம் கோத்ரா ரயில் எரிப்பில் 59 பேர் உயிர் இழந்த நிலையில் அதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் – இஸ்லாமியர்களுக்கு எதிரான மனிதப் படுகொலை (GENOCIDE) பற்றி ஓர் ஆவணப் படத்தை வெளியிட்டது (27.1.2023).
அது இந்தியாவை மட்டுமல்ல. உலக நாடுகளி டையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் அதனை ஒளிபரப்பக் கூடாது என்று ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும், அந்த ஆவணப் படம் பல இடங்களிலும் திரையிடப்பட்டு வருகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆங்கிலத்தில் உள்ள அந்த ஆவணப் படத்தைத் தமிழாக்கி கடந்த 5.2.2023 மாலை திரையிட்டு அருஞ்செயலை செய்தது. மிகப் பெரிய முயற்சி! நாட்டு மக்களுக்கு உண்மைத் தரவுகள் சென்றடைய வேண்டும் என்ற நன்னோக்கத் தோடு இந்தக் கடமையை எழுச்சித் தமிழர் மானமிகு தொல்.திருமாவளவன் செய்துள்ளார். அய்ந்து நாட்களில் இந்த மிகப் பெரிய பணியை 15 தோழர்கள் இராப்பகலாகப் பாடுபட்டு சாதித்து முடித்துள்ளது சாதாரணமானதல்ல.
அய்ரோப்பிய ஒன்றியத்தைச் சார்ந்த 15 நாடுகள் கையொப்பமிட்டு அப்பொழுதே குஜராத் கலவரத் தைக் கண்டித்ததுண்டு.
பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பேயி கூட, ‘இனி எந்த முகத்தோடு வெளிநாட்டுக்குச் செல்வேன்?’ என்று கருத்துக் கூறவில்லையா?
டெஹல்கா ஊடகமும் நேரடியாக குஜராத் சென்று பல தரப்பட்டவர்களையும் சந்தித்து (சட்ட மன்ற உறுப்பினர்கள் வி.எச்.பி. பிரமுகர்கள்) நடந்தவற்றை நாட்டுக்கு அம்பலப்படுத்தியதுண்டே!
கோத்ராவில் நடந்த நிகழ்வு கொடூரமானதுதான். அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் (இஸ்லாமியர்கள்) கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு நிகழ்வுக்குக் காரணம் என்று மாநில அரசே முடிவுக்கு வரலாமா? வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட ‘ஆசீர்வாதம்‘ செய்யலாமா?
சட்டம் ஒழுங்குப் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டியது முதல் அமைச்சரின் கடமையும் பொறுப் பும் அல்லவா?
என்ன செய்தார் முதல் அமைச்சர்? கோத்ரா ரயில் பெட்டி எரிக்கப்பட்டு மரணம் அடைந்த 59 பேர் உடல்களையும் தலைநகரமான அகமதாபாத்துக்கு கொண்டு வரச் செய்து ஊர்வலமாக எடுத்துச் சென்ற தன் பின்னணி என்ன? நோக்கம் என்ன?
அந்த நோக்கம்தான் குஜராத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை கொலைகார வெறியாட்டம்!
கோத்ரா நிகழ்வு நடந்த நிலையில் காவல்துறை மேல்மட்ட அதிகாரிகளை அழைக்கிறார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவா? அதுதான் இல்லை.
அந்தக் கூட்டத்தில் என்னதான் நடந்தது?
இதோ போலீஸ் அதிகாரி சஞ்சய் பட் பேசுகிறார்.
“கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்ச்சிக்குப் பதிலடியாக முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துக்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளை நடத்துவதற்கு மூன்று நாட்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களைக் காவல்துறை தடுக்கக் கூடாது?” என்றும் காவல்துறை இயக்குநர் மற்றும் இதர காவல்துறை உயர் அதிகாரி களுக்கு முதலமைச்சசர் நரேந்திர மோடி உத்தர விட்டார் என்று அந்தக் கூட்டத்தில் ஆணையராகக் கலந்து கொண்ட சஞ்சய் பட் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
முதல் அமைச்சரே பச்சைக் கொடி காட்டிய பிறகு முசுலிம்களின் சிவப்பு ரத்தம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடாதா?
அதுதான் குஜராத்தில் நடந்தது. 790 இஸ்லாமி யர்கள், 254 ஹிந்துக்கள் கொல்லப்பட்டதாகவும் 223 பேர் காணாமல் போனதாகவும் 2500 பேர் படுகாயம் அடைந்ததாகவும், 2005ஆம் ஆண்டு நாடாளுமன் றத்தில் கூறப்பட்டதும், இந்தப் பி.பி.சி.யின் ஆவணப் படத்தில் கூறப்பட்டுள்ளது. (அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுதான் இந்தக் கணக்கு! உண்மையில் கொல்லப்பட்டவர்களுக்குக் கணக்கே இல்லை).
2001 – 2006 வரை இங்கிலாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஜாக் ஸ்ட்ரா அப்பொழுது நடைபெற்ற குஜராத் கலவரம் குறித்துப் பேசியதையும் அப்படியே ஒளிபரப்புகிறது பிபிசி ஆவணப் படம்.
பிபிசி இப்பொழுது வெளியிட்டாலும் டெஹல்கா ஊடகம் குஜராத் கலவரம் நடந்து முடிந்த சில நாட்களிலேயே குஜராத்துக்கு நேரடியாகச் சென்று முக்கிய பிரமுகர்களை எல்லாம் பேட்டி எடுத்து காட்சிப் பதிவை வெளியிட்டது. இதில் முக்கிய விசுவ ஹிந்து பரிஷத்தினரிடம் எடுக்கப்பட்ட பேட்டியும் அடங்கும்.
ராஜேந்திர வியாஸ் என்ற வி.எச்.பி. தலைவர் ‘நரேந்திர மோடி காவல் துறையை எங்களுக்காகப் பணிபுரிய செய்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
‘நீங்கள் ஜெய் ராம்! என்று சொன்னால் காவல் துறையினர் புரிந்து கொள்வார்கள்’ என்று சங் பரிவார்க்கு கூறப்பட்டதாக தவாங் ஜெயந்தி பட்டேல் (வி.எச்.பி.) கூறியதும் டெஹல்காவின் வீடியோவில் பதிவாகியிருக்கிறது.
காவல்துறையினர் மட்டுமே 70-80 பேர்களைக் கொன்றிருப்பார்கள் என்கிறார் சுரேஷ் ரிச்சர்ட்.
இன்னொரு தகவல் முக்கியமானது. திரு.எல்.கே.அத்வானி தனது வரலாற்று நூலான “என் நாடும், என் வாழ்க்கையும்‘‘ என்னும் நூலில் என்ன குறிப் பிட்டு உள்ளார்? நடந்த நிகழ்வுகளுக்குப் பொறுப்பேற்று முதல் அமைச்சர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று பிரதமர் வாஜ்பேயி கூறியதாகவும், அதற்கு மோடியும் கோவாவில் நடக்கவிருக்கும் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் பதவி யிலிருந்து விலகுவதாகவும் கூறினார் என்று கூறப் பட்டுள்ளதே! இதற்கு என்ன பதில்?
பிபிசி ஆவணத்தின் படப்பிடிப்பு
1. 40 வயதாகும் இத்ரிஷ் வோரா, ஆனந்த் மாவட்டத்தின் ஓட் கிராமத்தில் தனது பரம்பரைச் சொத்தை விட்டுச் சென்று விட்டார்.
2002ஆம் ஆண்டு கலவரத்தின் போது அவர் சிறுமியாக இருந்தார், கலவரக்காரர்கள் அவர்கள் பகுதிக்கு வந்த போது இவர் சிறுமியாக இருந்தார், இவரை அங்கிருந்த உரம் போட்டு வைக்கும் கூடை யில் மறைத்து வைத்தார் அவரது அப்பா. இந்த நிலையில் கலவரக்காரர்கள் அவரது தந்தை, தாய், பாட்டி, தொட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்த அவரது தம்பி மற்றும் அவரது தந்தையின் சகோதரன் குடும்பத் தையும் கத்தியால் குத்தியும் கோடாரி கொண்டு வெட்டியும் கொலை செய்தனர். அந்த கொலைகாரக் கூட்டத்தில் அவரது பள்ளி நண்பர்கள், அவர் நாள் தோறும் சந்திக்கும் நபர்கள் மற்றும் பக்கத்தில் உள்ள வீட்டுக்காரர்களும் இருந்தனர். சிலர் வீட்டிற்குள் புகுந்து கொள்ளை அடித்துக்கொண்டு சென்றனர். அந்த ஊரில் மட்டும் 60 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்கள் படுகொலை செய்யப்பட்டதாக தனியார் சேவை அமைப்பு கூறுகிறது.
குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களில் இத்ரிஷ் வோராவும் ஒருவர். தனக்கு நீதி கிடைக்க வில்லை என்று அவர் கருதுகிறார். தனது தாய், தந்தை, உறவினர்கள் மற்றும் தம்பி தனது கண் எதிரே படுகொலை செய்யப்பட்டனர். அந்தப் படுகொலை களைச் செய்தவர்கள் இன்றும் வெளியே திரிகின்றனர் என்கிறார் அவர்.
2. பெண்கள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சராக இருந்தவர் மாயா கோட்டாணி என்ற பெண் அமைச்சர்
குஜராத் கலவர வழக்கில் விசாரணை நீதிமன்றம், நரோடா பாட்டியா கொலையில் (2 ஆயுள் தண்டனை) முக்கிய சதிகாரர் கோட்டாணி – இவரே யார் யார் எங்கே இருக்கிறார்கள். என்று எல்லாம் பட்டியலிட்டு கலவரக்கும்பலுக்கு கூறியிருக்கிறார். காவல்துறையின ரிடமும் கலவரம் செய்யும் போது தடுக்க முற்பட வேண்டாம் என்று வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார். இது விசாரணை நீதிமன்றத்தில் உறுதிசெய்யப்பட்டது. ஆனால், கோட்டாணி உடல் நிலை சரியில்லை என்று கூறி நீண்ட ஆண்டுகளாக பிணையில் இருந்தார். பின்னர் விடுவிக்கப்பட்டு தனது வீட்டில் சுகபோகமாக வாழ்கிறார். ஒரு முதன்மைக்குற்றவாளியே அரசால் விடுவிக்கப்பட்டுள்ளார். நரோடா பாட்டியா கொலை குறித்து பிபிசியிடம் நேரடி சாட்சி கூறியதை, மனித குலத்திற்கே கொடுமையான படுகொலை என்று பிபிசி அப்படியே கூறியுள்ளது.
3. வடக்கு குஜராத்தின் பாடன் மாவட்டத்தில் சர்தார்புரா என்ற சிறிய கிராமம் உள்ளது. பாடன் மாவட்டத்தின் சர்தார்புரா கிராமத்தில் மூன்று தனித்தனி முஸ்லிம் குடியிருப்புகள் இருந்தன. இந்த மூன்று குடியிருப்புகளும் 2002 மார்ச் 1 ஆம் தேதி இரவு ஒரு கும்பலால் தாக்கப்பட்டன.
கூட்டத்திற்கு பயந்து 33 பேர் ஒரு வீட்டில் தஞ்சம் அடைந்தனர். இந்த வீட்டைக் கண்டுபிடித்த கும்பல், கதவை உடைக்க எவ்வளவோ முயன்றனர். முடியாத காரணத்தால் நீண்ட கம்பியில் மின்சாரத்தை பாய வைத்து அதை ஜன்னல் வழியாக நுழைத்து அனைவர் மீதும் மின்சாரம் பாயவைத்து கொலை செய்தனர். மீதம் இருந்தவர்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்தனர். இதல் அனைவரும் நிகழ்விடத்திலேயே இறந்தனர். முஸ்லிம் சமுதாய மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வாய்ப்பில்லாதபடி அந்த கும்பல், கிராமத்தின் எல்லா சாலைகளையும் அடைத்தது.
இந்த கொலையில் தொடர்புடைய குற்றம் சாட்டப்பட்ட 76 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இருவர் வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் இறந்தனர். விடுதலைக்கு எதிரான அவர்களின் மேல் முறையீட்டு வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது
4. ஆனந்த் மாவட்டத்தின் பிராவலி பாகோல் பகுதியில் உள்ள முஸ்லிம்களை ஒன்றாக தள்ளி அனைவர் மீதும் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக் கொன்றனர். இறந்தவர்களை அடையாளம் கூட காண முடியாத அளவிற்கு உடல்கள் எரிந்திருந்தன. ஆகையால் காணாமல் போனவர்கள் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட 51 பேரில் 3 பேர் விசாரணையின் போது இறந்துவிட்டனர். குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
5. நரோடா பாட்டியா அருகே உள்ள நரோடா கிராமத்தில் 11 முஸ்லிம்கள் பஜ்ரங் தள் அமைப்பினரால் சூலாயுதம் கொண்டு குத்தியும் கோடாரி கடப்பாரைகள் கொண்டும் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
எஸ்அய்டி விசாரணையை மேற்கொண்ட பிறகு, அவர்கள் அனைவருக்கும் பிணை கிடைத்தது. எஸ்அய்டி அளித்த ஆறு குற்றப்பத்திரிகைகள் உள்பட மொத்தம் ஒன்பது குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 20 ஆண்டுகள் ஆகியும் இந்த வழக்கின் விசாரணை தொடங்கவில்லை.
6. 2002 பிப்ரவரி 28 அன்று, மூன்று பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற இஸ்லாமியர்களும், அவர்களது வண்டி ஓட்டுநரும் ஒரு கும்பலால் கொல்லப்பட்டனர். இம்ரான் தாவூத் என்ற நபர் பிரிட்டனில் இருந்து வந்திருந்த தனது மூன்று உறவினர்களுடன் காரில் சென்று கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக் கின்றன.
வாகனத்தை நிறுத்திய கும்பல், அதே இடத்தில் 2 பேரை தீ வைத்து எரித்தது. இரண்டு பேர் தப்பி ஓடினர். ஆனால் துரத்திச்சென்ற கும்பல் அவர் களையும் கொன்றது. அந்த கொலை நிகழ்வில் இருந்து இம்ரான் தாவூத் புதர் ஒன்றில் மறைந்துகொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொண்டார். இந்த வழக்கில் பலரை காவல்துறையினர் கைது செய்திருந்த நிலை யில், அனைவரும் கீழ் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட் டனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மீதான குற் றத்தை நிரூபிக்க முடியாததால் அவர்களை விடுவிப் பதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்று 2015 இல் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
பிபிசியைப் பாராட்டிய மோடி
இப்பொழுது வெளியிடப்பட்ட பிபிசி ஆவணப் படத்தைத் தடை செய்யும் பிரதமர் மோடி – பி.பி.சி. யைப் பற்றி அன்று என்ன கூறினார்?
MODI PRAISED BBC IN HIS 2013 SPEECH, SAYING IT IS MORE CREDIBLE THAN DOORDARSHAN NEWS
New Delhi : A quote from the past comes haunting or is at least fueling debate on Prime Minister’s denouncement of BBC for its documentary on him. Doing the rounds on social media is a 2013 speech in which, the then Gujarat Chief Minister Narendra Modi is heard praising BBC, saying it is more credible than Doordarshan and Akashvani news here.
Modi’s praise of BBC and disdain for the government’s official mouthpieces – the Doordarshan and Akashvani – is now now biting back , as BJP accuses BBC of having “colonial agenda” through its documentary “India – The Modi Question”.
https://www.deshabhimani.com/english/news/national/modi-praised-bbc-in-his-2013-speech-saying-it-is-more-credible-than-doordarshan-news/7772
அன்று பிபிசியை முழுமையாக நம்புவேன் என்று கூறியவர். இன்று பிபிசி ஆவணப் படத்தை உலகம் முழுக்க தடை செய்ய வலியுறுத்துகிறார்.
நரேந்திர மோடி 2013ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த ஒரு விழாவில் பேசியது.
நான் பிபிசி நிகழ்ச்சியைப் பார்த்த பிறகுதான் நம்பிக்கை கொள்வேன்.
தூர்தர்சனைப் பார்த்து நம்பி விடாதீர்கள், ஆகாசவாணி (ரேடியோ) கேட்டு நம்பி விடாதீர்கள். நமது ஊரில் உள்ள பத்திரிகைகள் என்ன செய்தி தருகிறதோ அதை நம்பி விடாதீர்கள் – எதையும் ஆய்வு செய்து நம்புங்கள்.
பிபிசி செய்தி நிறுவனம் சரியான செய்தியை தரும் – அது முழுமையான நம்பிக்கையான உறுதியான செய்தியைத் தரும் என்று கூறியிருந்தார்.
ஆம்! நரேந்திர மோடி அவர்களே! பிபிசி நிறுவனத்துக்கு நீங்கள் கொடுத்த ‘சர்டிபிகேட்’ படி – இதையும் நம்பத்தானே வேண்டும்!