அன்னிய ஊடுருவலும், அழியும் மண்ணின் பெருமையும்! ஆப்பிரிக்கக் கெளுத்தி முதல் மனிதப் போர்கள் வரை

- Advertisement -

புதூரான்

மனித இனம் அறிவாற்றலால் பிற உயிரினங்களில் இருந்து தனித்துப் பார்க்கப்படுகிறது. ஆனால், உயிரியல் கோட்பாட்டின்படி மனிதனும் ஓர் உயிரினமே! பாலூட்டி வகையைச் சார்ந்த உயிரினங்கள் தங்கள் வளர்விடம், காலச்சூழல் உள்ளிட்ட பல வரைமுறைகளோடு ஒன்றி வளரும் போது அவைகளுக்கான அனைத்து உரிமைகளும் பெற்று வாழ்கின்றன.

உயிரினங்களில் இனப்பெருக்கம், இடம் பெயர்வு போன்றவை எப்போதும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

கட்டுரை, ஞாயிறு மலர்

போராட்டம் ஏன்?

அப்படி இடம்பெயரும்போது ஏற்கெனவே வாழும் உயிரினங்களின் உரிமைகளை மதித்து, அவைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இடம் பெயர்ந்த உயிரனங்கள் இருக்குமானால் சிக்கல் ஏதுவுமில்லை. ஆனால், இடம் பெயர்ந்த வந்தேறிகள் மண்ணின் மைந்தர்களின் உரிமைகளைப் பறித்து அவர்களை ஆதிக்கம் செலுத்த முயலும் போது ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள் உலகில் பெரும் போராட்டங்களை ஏற்படுத்தி விடுகின்றனர்.

மனித குல வரலாற்றை எடுத்துக்கொண்டால் வரலாற்றுப் பதிவுகளின் படி முதல் போர் என்று வரலாற்றாசிரியர்கள் கூறும் மெசபடோமிய மன்னருக்கும், இன்றையத் துருக்கி இனக்குழுக்களிடையே ஆனப் போர் ஆதிக்கவெறியினால் உருவானது.

இஸ்ரேலின் காசாவின் மீதான தொடர் தாக்குதலும், அமெரிக்க – ஈரான் போரும் எதைக் குறிக்கின்றது? மண்ணின் மைந்தர்களின் வாழ்வாதரத்தைச் சிதைத்து தன்னை அங்கே நிலைநிறுத்திக் கொள்வதையே!

உயிரினங்களின் இந்தச் சூழலை எதிர்த்துப் போராடும் ஓர் உண்மை வரலாறு – ஆப்பிரிக்கக் கெளுத்தி மீன் இனம் சொல்லும் ஒரு பாடமே!

இயற்கை தனக்கென ஒரு சமநிலையைக் கொண்டுள்ளது. அதில் ஒவ்வொரு உயிரினமும் ஒரு குறிப்பிட்ட பங்கு வகிக்கின்றன. ஆனால், மனிதனின் அறியாமையும் பேராசையும் அந்தச் சமநிலையைத் தடம் புரளச் செய்யும்போது, விளைவுகள் அழிவை மட்டுமே தந்துகொண்டிருக்கின்றன.

குட்டன் ஏரி பாழானது எப்படி?

1980-களில் பீகாரின் பெரிய நன்னீர் ஏரிகளில் ஒன்றான குட்டன் ஏரி (Kuttan Lake) இதற்குச் சிறந்ததொரு சாட்சியாகும். பல நூற்றாண்டுகளாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்குப் பாசன ஆதாரமாகவும், நூற்றுக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கிய அந்த ஏரி, ஒரு வெளிநாட்டு மீன் இனத்தால் எப்படிப் பாழானது என்பதன் வரலாறு இன்றைய சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகும்.

குட்டன் ஏரியின் சோகக் கதை:
ஒரு வெளிநாட்டு மீனின் படையெடுப்பு

1980-களில் ஆப்பிரிக்காவில் கார் உதிரிப்பாகம் விற்பனைத் தொழில் செய்துவந்த உள்ளூர் பிரமுகர் ஒருவர், அங்கிருந்து திரும்பும்போது ஆப்பிரிக்கக் கெளுத்தி மீன்களின் (African Catfish / Clarias gariepinus) குஞ்சுகளை இந்தியாவுக்குக் கொண்டுவந்தார். வேகமாக வளரும் தன்மை கொண்ட இந்த மீன்களைத் தனது சொந்த நிலத்தில் மீன்பண்ணை வைத்து வளர்க்க அவர் திட்டமிட்டிருந்தார்.

தொடக்கத்தில் இந்த மீன்கள் மிக விரைவாகப் பெருகின. பண்ணையில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால், அவற்றை அருகில் இருந்த குட்டன் நன்னீர் ஏரியிலும் விடத் தொடங்கினர். ஆனால், அடுத்த 3 ஆண்டுகளுக்குள் நிலைமை முற்றிலுமாகக் கைமீறிப் போனது.

சுற்றுச்சூழல் பேரழிவு: ஏரி முழுவதும் ஆப்பிரிக்கக் கெளுத்தி மீன்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. ஏரியில் பாரம்பரியமாக வாழ்ந்த சிறு மீன் இனங்கள், நத்தைகள், தவளைகள், நன்னீர் ஆமைகள் மற்றும் பாசிகளைத் தின்று நீரைச் சுத்தப்படுத்தும் உயிரினங்கள் என ஒன்றுமில்லாமல் முற்றிலும் அழிந்துபோயின.

மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: கெளுத்தி மீன்களின் அதீதப் பெருக்கத்தால் மீனவர்களின் வலைகள் சேதமடைந்ததோடு, மற்ற மீன்கள் கிடைக்காததால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. ஏரியின் மதகுகளும் மீன்களின் கூட்ட நெரிசலால் அடைபட்டுப்போயின.

மாவட்ட நிர்வாகமும்,
அதிரடி ஆய்வுக் குழுவின் அறிக்கையும்

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த தர்பங்கா மாவட்ட நிர்வாகம் ஒரு சிறப்பு ஆய்வுக் குழுவை அமைத்து ஆய்வு செய்தது. அந்த ஆய்வில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன:

ஆக்ஸிஜன் பற்றாக்குறை: ஏரியில் ஆக்ஸிஜன் அளவு கிட்டத்தட்ட இல்லாத நிலைக்குச் சென்றுவிட்டது. ஆனால், ஆப்பிரிக்கக் கெளுத்தி மீன்கள் காற்றிலும் சுவாசிக்கும் (Air-breathing) தன்மை கொண்டவை என்பதால், அந்தச் சூழலிலும் அவை கொடிகட்டி வாழ்ந்தன. மற்ற உயிரினங்கள் ஆக்ஸிஜன் இல்லாமல் செத்து மடிந்தன.

நரம்பு மண்டல பாதிப்பு அபாயம்: ஆய்வுக்குழுவின் அறிக்கை மனித ஆரோக்கியம் குறித்தும் கடுமையான எச்சரிக்கையை விடுத்தது. இந்த மீன்களில் உள்ள சில புரத அமிலங்கள் மனிதர்களின் நரம்பு மண்டலத்தை மரத்துப்போகச் செய்ய வாய்ப்புள்ளதாக அது சுட்டிக்காட்டியது. வெப்பமண்டலப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு இந்தப் புரதம் கடுமையான ஒவ்வாமையையும், பாதிப்பையும் ஏற்படுத்தலாம் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியானது.

இந்த அறிக்கை உடனடியாக ஒன்றிய அரசின் பார்வைக்குச் செல்ல, நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆப்பிரிக்கக் கெளுத்தி மீன்களால் ஏற்படும் பன்முக ஆபத்துகள்!

இயற்கைச் சூழல் மற்றும்
பிற உயிரினங்களுக்கு ஆபத்து

அனைத்துண்ணி (Carnivorous): இது மற்ற மீன் வகைகளையும், மீன் குஞ்சுகளையும், தவளைகளையும், நண்டுகளையும் இரையாக்கிக் கொள்ளும் ஒரு கொடூரமான வேட்டை மீன் வகையாகும்.

பல்லுயிர் பெருக்கம் அழிவு: நீர்நிலைகளில் உள்ள பாரம்பரிய நாட்டு மீன் இனங்களை இவை அடியோடு அழித்துவிடுகின்றன.

அதிக சகிப்புத்தன்மை: நீரிலும் சேற்றிலும் குறைந்த ஆக்ஸிஜன் நிலையிலும் வாழும் இதன் திறன், நீர்நிலைக்கு வெளியே கூட நீண்ட நேரம் உயிருடன் இருக்க உதவுகிறது.

மனித ஆரோக்கியத்திற்கு
ஏற்படும் கடுமையான கெடுதல்கள்

சுகாதாரமற்ற வளர்ப்பு முறை: சில பண்ணையாளர்கள் மீன்கள் வேகமாக எடையை அதிகரிக்கச் கழிவு இறைச்சிகள், அழுகிய கழிவுகள் மற்றும் கெட்டுப்போன உணவுகளைத் தீவனமாக வழங்குவதால், அவைகள் சுகாதாரமற்றதாக மாறுகின்றன.

நச்சு உலோகங்களின் பிடிப்பு: மாசடைந்த மற்றும் குப்பை நீர்நிலைகளில் எளிதாக வளருவதால், ஈயம் (Lead), அலுமினியம் போன்ற நச்சு உலோகங்களையும், நோய் உண்டாக்கும் ஒட்டுண்ணிகளையும் தன் உடலில் அதிகமாகச் சேமித்துக்கொள்கிறது.

கொடிய நோய்கள்: அதிக கொழுப்புச்சத்து மற்றும் நச்சுத்தன்மை கொண்ட இந்த மீனை உட்கொள்வதால் தோல் ஒவ்வாமை (Skin allergy), இதய நோய்கள், புற்றுநோய் (Cancer) போன்ற கடுமையான ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

ஒன்றிய அரசின் சுற்றறிக்கையும்,
இன்றைய எச்சரிக்கையும்!

குட்டன் ஏரியின் நிகழ்வுக்குப் பிறகு, கண்விழித்த ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் கடுமையான எச்சரிக்கைச் சுற்றறிக்கைகளை அனுப்பியது. ஆப்பிரிக்கக் கெளுத்தி மீன்களை வளர்ப்பது சட்டவிரோதம் என்றும், அவற்றை நீர்நிலைகளில் விடுவது சுற்றுச்சூழலுக்குப் பேராபத்து என்றும் எச்சரிக்கப்பட்டது.

“அன்னிய மண்ணில் இருந்து வந்த ஒன்று, இந்த மண்ணின் பாரம்பரியத்தையே முடக்கிவிடும்” என்பதற்கு ஆப்பிரிக்கக் கெளுத்தி மீன்களின் வருகையும், அதன் விளைவுகளும் ஒரு சிறந்த மற்றும் கசப்பான எடுத்துக்காட்டாகும். இயற்கையின் சமநிலையைச் சிதைக்கும் இதுபோன்ற அந்நிய ஊடுருவல் இனங்களை எதிர்த்துப் போராடுவதும், நமது நாட்டு மீன் வளத்தைப் பாதுகாப்பதும் நமது தலையாய கடமையாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *