தற்போது நடுத்தர வயதினரிடையே அதிகமாகப் பரவி வரும் ஒரு பழக்கம் அய்ஸ் டீ, நிறைய பனிக்கட்டிகளை பிளைண்ட் செய்து கிரீம் மற்றும் காபி கிரீமோடு சேர்த்து அய்ஸ்கிரீம், சாக்லேட் மற்றும் சர்க்கரை சேர்த்து தருவது கூல் காப்பி.
அதீத குளிர்ச்சியுடன் காப்பி மற்றும் தேநீர் போன்ற பானங்களை அதிகளவில் விரும்பிக் குடிப்பதற்கு அதிகப்படியான சர்க்கரை, செயற்கைச் சுவையூட்டிகள், கிரீம் போன்றவை உடல் எடையை அதிகரிக்கச் செய்து, இன்சுலின் சுழற்சியைப் பாதித்து நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
ஆயினும் மக்கள் இவற்றைத் தொடர்ந்து குடிப்பதற்கான முக்கியக் காரணங்கள்:
சர்க்கரையின் கூட்டணி
காஃபின் (Caffeine) மூளையைச் சுறுசுறுப் பாக்குகிறது; சர்க்கரை உடனடியாக ‘டோபமைன்’ என்ற மகிழ்ச்சி தரும் ஹார்மோனைச் சுரக்க வைக்கிறது.
இந்த இரண்டும் சேரும்போது, மூளைக்கு அது ஒரு தற்காலிக புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் தருகிறது. இதனால் மூளை மீண்டும் மீண்டும் அதை கேட்கத் தொடங்குகிறது.
விளம்பர உத்தியும் – தவறான வழக்க முறையும்!
நவீன காஃபி ஷாப்களும், விளம் பரங்களும் குளிர்ந்த பானங்களை ஒரு “ட்ரெண்டி”, ‘ஸ்டைலான’ வாழ்க்கை முறையாக சித்தரிக்கின்றன.
இளைஞர்கள், அலுவலகப் பணி யாளர்கள் மத்தியில் அய்ஸ் காஃபி அல்லது அய்ஸ் டீயைக் குடிப்பது பெருமை மனப் பான்மை – மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு வழியாக பார்க்கின்றனர்.
தற்காலிக நிவாரணம்
வேலை அல்லது படிப்பினால் ஏற்படும் மன அழுத்தத்தின் போது, மனித உடல் இயற்கையாகவே இனிப்பு மற்றும் காஃபின் நிறைந்த உணவுகளை விரும்பும்.
குளிர்ந்த பானத்தை அருந்தும்போது தொண்டையிலும் உடலிலும் ஏற்படும் உடனடி குளிர்ச்சி, மன அழுத்தத்தில் இருந்து ஒரு நிமிட இடைவெளி கிடைப்பது போன்ற போலி உணர்வைத் தருகிறது.
சூடான டீ/காபியை விட, குளிர்ந்த பானங்களில் பாலாடை, அய்ஸ்கிரீம், போன்றவை அதிகளவில் சேர்க்கப் படுகின்றன.
இதனால் காபி/டீயின் கசப்புத் தன்மை மறைக்கப்பட்டு, அது ஓர் இனிப்பு உணவு போல மாறி சுவையை அதிகரிக்கிறது.
சர்க்கரை இரத்தத்தில் உடனடியாகக் கலந்து ஆற்றலைத் தருவதால், சோம்பலாக அல்லது களைப்பாக இருக்கும்போது மக்கள் இதை ஒரு ஊக்கமூட்டியாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், சில மணி நேரங்களிலேயே அந்த ஆற்றல் குறைந்து மீண்டும் களைப்பை ஏற்படுத்தும் என்பது பலருக்குத் தெரிவதில்லை.
இதற்கான ஆரோக்கியமான மாற்று வழிகள் உடலுக்குத் தீங்கு விளைவிக்காமல் குளிர்ச்சியையும் புத்துணர்ச்சியையும் பெற விரும்புவோர் பின்வருவனவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்:
இயற்கையான குளிர்ந்த பானங்கள்
இளநீர், மோர் பானங்கள், நன்னாரி சர்பத் (சர்க்கரை குறைவாக), எலுமிச்சை பழச்சாறு, கிரீன் டீ, சர்க்கரை இன்றி புதினா அல்லது எலுமிச்சை சேர்த்து அருந்துவது உடலுக்கு நன்மை தரும். அதுவும் அதிகம் பருகுவதைத் தவிர்க்கவும்.
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்? தற்போது மிகவும் குறைந்த வயதிலேயே உடற் பருமன், நீரழிவு நோய் உள்ளிட்ட பல உடல் உபாதைகள் அழையா விருந்தாளியாக வந்து விடுகின்றன. இந்த நேரத்தில் தனியார் நிறுவனங்களின் வணிக வெறிக்காக உடலுக்கு தீங்குவிளைவிக்கும் உணவுப்பொருட்களை அதிக அளவு விளம்பரப்படுத்தி விற்பனைக்குக் கொண்டு வரும் போது இளைஞர்கள் அதிகம் ஈர்க்கப்படுகின்றனர்.
முன்பு சிகரெட் பிடிப்பதைப் பெருமை மிகுந்த ஒன்றாகக் கருதி சிகரெட் குடித்தனர். தற்போது பெரிய உணவங்களின் அமர்ந்து சர்க்கரை கிரீம் உள்ளிட்டவை கலந்த பாணங்களைக் குடிப்பதைப் பெருமையாகக் கருதுகின்றனர். ஆனால் அது பிற்காலத்தில் உடல் நிலையைப் பாதிக்கும் முக்கிய காரணியாக இருப்பது தெரியாமல் தவறு செய்தல் சரியா?
