முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் – கொள்கை மாமணி பொத்தனூர் க.சண்முகம் மறைந்தாரே! வீர வணக்கம்! வீர வணக்கம்!!

2 Min Read
- Advertisement -

பொத்தனூர் க.சண்முகம் (வயது 104, பிறந்த நாள் 2.7.1923) என்று சொன்னால்  திராவிடர் கழகத் தோழர்களுக்கு மட்டுமல்ல, பொதுநலவாதிகள், அரசியல் கட்சியினர் அனைவருக்கும் அறிமுகமானவர் ஆவார்!

‘க.ச.’ என்று எல்லோராலும் மதிப் போடும், அன்போடும் அழைக்கப்பட்டவர்.

பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் நேற்று (15.11.2026) இரவு மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து வேதனையுற்றோம்.

திருச்சி நேஷனல் கல்லூரியில் படிக்கும்போதே (அந்தக் காலத்திலேயே இண்டர்மீடியட் படித்தவர்) தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, இறுதி மூச்சு (வயது 104) அடங்கும்வரை தந்தை பெரியாரின் ஒப்பற்ற சீரிய தொண்டராக ஒளி வீசினார். 1944 ஆம் ஆண்டு சேலத்தில் ஜஸ்டிஸ் கட்சி, திராவிடர் கழகமாகப் பெயர் மாற்ற மாநாட்டிலேயே பங்கு கொண்டவர். அம்மாநாட்டில் பங்கு பெற்றவுடனேயே பொத்தனூரில் திராவிடர் கழகக் கிளையைத் தோற்றுவித்தவர். ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவராக சிறந்த முறையில் பணியாற்றியவர். தந்தை பெரியார் 1957இல் ‘பிராமணாள்’ பெயர ்அழிப்புப் போராட்டம் நடத்தியபோது இவர், பொத்தனூர் ஊராட்சித் தலைவராக இருந்தார்.

இந்தியாவிலேயே முதன் முறையாக பொத்தனூரில்தான்  ஜாதிப் பெயர் கொண்ட உணவகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (‘விடுதலை’ 28.6.1957)

தந்தை பெரியார், சேலம் மாவட்ட சுற்றுப்பயணம் செல்லும்போதெல்லாம், பொத்தனூரில் அவரின் இல்லத்தில் தங்குவது வழக்கம். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் (அறக்கட்டளை) தலைவராக 13 ஆண்டுகள் (2013 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை) இருந்தவர். திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்களில் எல்லாம் பங்கேற்றுச் சிறை சென்றவர். சேலம் சிறையில் ‘மிசா’ கைதியாக ஓராண்டுக்காலம் இருந்தார் (1.2.1976 முதல் 23.1.1977 வரை).

இவருடைய பொதுத் தொண்டுக்கு உற்ற துணையாக இருந்தவர், அவரது வாழ்விணையர் சுந்தராம்பாள் ஆவார்கள். தமிழரசி, மலர்க்கொடி ஆகிய இரு மகள்களும், செங்குட்டுவன் என்ற மகனும் உள்ளனர். பொத்தனூர் மானமிகு க.சண்முகம் அவர்கள், அமைதி,  தொண்டறம், நேர்மை ஆகியவற்றை இயல்பாகக் கொண்டவர். அதனால் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்டவர். அவருடைய நூற்றாண்டு விழா 2022 இல் பொத்தனூரில் வெகு சிறப்பான வகையில் கொண்டாடப்பட்டது. அதில் பங்கேற்று மகிழ்ந்தோம். சென்னை பெரியார் திடலில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் தரைத் தளத்திற்கு அவருடைய பெயரைச் சூட்டினோம் (25.8.2026).

அண்மையில், தமிழ்நாடு சட்டமன்ற  இடைத் தேர்தலையொட்டிய  எனது சுற்றுப்பயணத்தின்போது பொத்தனூர் சென்று, அவரைச் சந்தித்து அளவளாவி வந்தோம். 80 ஆண்டுகளுக்கும் மேல் பொதுத் தொண்டாற்றி நிறை வாழ்வு வாழ்ந்து, இயக்கத்திற்கும், பொதுத் தொண்டுக்கும் பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் ஒளிவீசும் பெருமகன் ஆவார். மறைந்தும், மருத்துவ மாணவர்களுக்குத் தன் உடல் பயன்படவேண்டும் என்ற அவரின் விருப்பப்படி, நாமக்கல் மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடை அளிக்கப்படுவது, திராவிடர் கழகத்துக்கே உரித்தான உன்னத மாண்பும், சிறப்பும் ஆகும்.

நேற்றுவரை நம்முடன் வாழ்ந்து, இன்று ‘‘சுயமரியாதைச் சுடரொளி’’ ஆகிவிட்டார்.

அவர் மறைவால் ஆறாத் துயரத்திற்கு ஆளாகியிருக்கும் குடும்பத்தினருக்கும், கொள்கை உறவு கொண்ட தோழர்களுக்கும், நண்பர்களுக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து, வீர வணக்கத்தைச் செலுத்துகிறோம்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை        

16.11.2026   

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *