பல காலமாக உயர் இரத்த அழுத்தத்துக்கு (hypertension) வழங்கப்படும் அறிவுரை உப்பைக் குறையுங்கள் என்பதே. ஆனால் பல சமயங்களில் அதே சமன்பாட்டில் மறுபக்கத்தில் செயல்படும் ஊட்டச்சத்தான பொட்டாசியமும் தவிர்க்கப் படுகிறது என அமெரிக்க மருத்துவ ஊட்டச்சத்து இதழில் (American Journal of Clinical Nutrition) வெளியான புதிய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. உலகளவில் 128 கோடிக்கும் மேற்பட்டோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றுக்கு இது முக்கிய ஆபத்துக் காரணியாகும்.
சோடியமும், பொட்டாசியமும் உடலின் திரவச் சமநிலை, நரம்புச் சமிக்ஞை, தசைச் செயல்பாடு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகின்றன. இரண்டும் இரத்த அழுத்தத்தை எதிரெதிர் திசைகளில் கையாளுகின்றன். அதிகப்படியான சோடியம் உடலில் திரவத்தைத் தக்கவைக்கச் செய்து, இரத்தக் குழாய்களுக்குள் அழுத்தத்தை அதிகரிக்கிறது. பொட்டாசியம், சிறுநீர் வழியாகச் சோடியத்தை வெளியேற்ற உதவுகிறது. இரத்தக் குழாய்ச் சுவர்கள் இயல்பாகச் செயல்படவும் துணைபுரிகிறது.
தொடர்ந்த மருத்துவ அறிவுரைகளுக்கு பிறகும் சோடியம் உட்கொள்ளல் பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேலேயே உள்ளது. பொட்டாசியம் உட்கொள்ளல் “வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளிலும் தேவையான அளவைவிட மிகக் குறைவாகவே” உள்ளது.
உணவின் செயல்பாடுகளை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்கிறார் வெர்மான்ட் பல்கலைக்கழகத்தின் லார்னர் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த நவோமி ஃபுகாவா (Naomi Fukagawa) என்ற இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர். உப்புக் குறைப்பைக் கைவிடுவது என்றல்லாமல் பொட்டாசியத்துக்கும் சம முக்கியத்துவம் தர வேண்டும் என்பதே இவ்வாய்வின் முடிவு
இதற்காக முதலில் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், பால் பொருட்கள், அதாவது வாழைப்பழம், உருளைக்கிழங்கு, பீன்ஸ், கீரை வகைகள், தயிர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவேண்டும். இரண்டாவது வழி, சாதாரண உப்பிலுள்ள சோடியம் குளோரைடின் ஒரு பகுதியைப் பொட்டாசியம் உப்புகளால் மாற்றுவது. இது சோடியத்தைக் குறைத்து, அதே நேரத்தில் பொட்டாசியத்தை உயர்த்தும். ஆனால் இங்கே உணவு அறிவியலின் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பொட்டாசியம் உப்பு அதிகமானால் உலோகச் சுவை வரும். எனவே சுவையைக் கெடுக்காமல், சத்தை மேம்படுத்தும் சரியான அளவைக் கண்டறிய வேண்டும்.
கூடுதல் பொட்டாசியம் எல்லோருக்கும் ஏற்றதல்ல. சிறுநீரக நோய் உள்ளவர்களும், சில மருந்துகளை உட்கொள்பவர்களும் பொட்டாசியத்தை முறையாகக் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். எனவே பொட்டாசியம் சத்து மாத்திரைகளையும், பொட்டாசியம் அடிப்படையிலான உப்பு மாற்றுகளையும் மருத்துவ வழிகாட்டுதலுடன் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இது ஏற்கெனவே உள்ள சான்றுகளை மதிப்பாய்வு செய்யும் ஆய்வாகும். புதிய மருத்துவச் சோதனை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
