சென்னை, நவ. 16– கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் வாட்ஸ் அப்பில் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 7 நாட்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு தேசிய மகளிர் ஆணையம் ஆணையிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு, அதே தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசமான வாட்ஸ்அப் தகவல்களை அனுப்பியதாக எழுந்த புகார் தமிழ்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பல்வேறு கட்சிகளும் கண்டனங்களை தெரிவித்தன.
இந்நிலையில் இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஏற்கெனவே தவறாக நடந்து கொண்டதாகவும், மது போதையில் ஆட்சியரின் இல்லத்துக்குச் சென்றதாகவும் ஊடகங்கள் கடந்த நவ.11ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த செய்தியின் அடிப்படையில், தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சட்டமன்ற உறுப்பினர் குறுஞ் செய்தி அனுப்பிய விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மூத்த அதிகாரிகளிடம் அளித்ததாக கூறப்படும் புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
அரசியல் அல்லது வெளிப்புறத் தலையீடுகள் இன்றி, பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும். இச்சம்பவம் தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாத்து, உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை 7 நாட்களுக்குள் ஆணை யத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பெண் அதிகாரிகளின் கண்ணியம், பாதுகாப்பு எவ்வித சமரசமும் இன்றி உறுதி செய்யப்பட வேண்டும். பதவி அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்தி யாரும் சட்டத்தின் முன் பொறுப்பேற்பதில் இருந்து தப்ப முடியாது. இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
