உலக மொழி வரலாற்றில் இது போல் பார்த்ததுண்டா? தமிழுக்காக பெண்கள் குழந்தைகளுடன் சிறைபுகுந்த நாள் இன்று (14-11-1938)

3 Min Read
- Advertisement -

தமிழ்நாட்டில் கட்டாய ஹிந்தித் திணிப்பை எதிர்த்து 1938 ஆம் ஆண்டு கால கட்டத்தில் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின. அதற்கு முன்பாகவே அங்கொன்றும் இங்கொன்றுமாக போராட்டங்கள் நடந்து வந்தாலும் 1938 ஆம் ஆண்டுதான் தமிழ்நாடு முழுவதும் தமிழ் மொழி உரிமைக்கான போராட்டம் வீரியமாக எழுந்தது.

1938 ஆம் ஆண்டில் தொடர் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், சிறைநிரப்பும் போராட்டங்கள் என மாதர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டு ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்றது.

1938 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பெண்கள் மாநாட்டுக்கு தனித்தமிழ் இயக்கம், இஸ்லாமிய அமைப் புகள் மற்றும் திராவிட அமைப்புகளை கூட்டாக இணைத்து ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்தது

1938-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பள்ளிகளில் ஹிந்தி கட்டாயம் என்று அரசாணை வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து ஏற்கெனவே கனன்று கொண்டிருந்த தமிழ் உரிமை போருக்கான தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

தமிழ்நாட்டில் முதல் முறையாக தியாகராய நகர் மாதர் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை தொடங்கி ‘முன்னேற்ற கழகம்’ என்ற பதத்தை தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்திய டாக்டர் தருமாம்பாள் அம்மையார் முன்னெடுப்பில் முதல் பெண்கள் மாநாட்டிற்கான அறைகூவல் விடுக்கப்பட்டது. இதே மாநாட்டில் தான் பகுத்தறிவுப் பகலவன் பெரியார் அவர்களுக்கு “பெரியார்” என்ற சிறப்புப் பட்டத்தை வழங்கினார் தருமாம்பாள் அம்மையார்.

13.11.1938 ஆம் ஆண்டு நாள் குறிக்கப்பட்டு மாநாட்டின் தலைவராக மறைமலையடிகளின் மகள் மற்றும் தனித்தமிழ் இயக்கத்தின் செயற்பாட்டளாரான நீலாம்பிகை அம்மையார் அறிவிக்கப்பட்டார்.

தங்களை ஒத்த பெரும்பான்மையான பெண்கள் கல்வி கற்கக்கூட அனுமதிக்கப்படாமல் இருந்த காலத்தில், அவர்களையும் ஹிந்தி எதிர்ப்பு போராட்ட களத்தில் குதிக்க வைத்ததே தந்தை பெரியார் அவர்களின் சாதனை.

முதல் பெண்கள் மாநாட்டில் பேசிய டாக்டர் தருமாம்பாள் முதல் தாமரைக்கண்ணி அம்மையார் வரை தங்களது முழு உரையிலும் தமிழ் உரிமையை மய்யப்படுத்தியே பேசினர். குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் 3 கோடி மக்களில் 95% பேர் இன்னமும் எழுதப்படிக்க தெரியாமல் இருக்கும் நிலையில், இதில் மூன்றாவது மொழி ஹிந்தியை திணிப்பது நியாயமா என்று தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

மாநாட்டில் தந்தை பெரியார் அவர்களின் உரை வீச்சால் உணர்வூட்டம் பெற்ற பெண்கள் மாநாடு முடிந்த இரண்டு நாட்களில் சென்னை இந்து தியாலஜிக்கல் பள்ளி முன்பு ஹிந்தித் திணிப்புக்கு எதிராக மறியல் செய்ய முயன்றனர்.  முதல் ஹிந்தித் எதிர்ப்புப் போராட்டத்தில் மட்டும் 73 பெண்கள் மற்றும் அவர்களுடன் 32 குழந்தைகளும் சிறைக்கு சென்றுள்ளனர். இவர்களோடு 1164 ஆண்களும் சிறைக்கு சென்றுள்ளனர். மேலும் காவல்துறை சித்ரவதைக்கு ஆளாகி நோய்வாய்ப்பட்டு இறந்தவர்கள் பலர். அப்படி இறந்தவர்களில் முக்கியமானவர்கள் தான் பத்மாவதி மற்றும் தனலட்சுமி.

1938 இல் ஹிந்தி எதிர்ப்பில் தனித்தமிழ்நாடு கேட்டு தமிழ்வாழ்க சேலை கட்டியதற்காக கைது செய்யப்பட்ட பத்மாவதி காவல்துறையினரால் துன்புறத்தப்பட்டு உயிர் துறந்ததாக மூலக்கொத்தளம் சுடுகாட்டில் உள்ள அவரது கல்லறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது படத்தை அப்போதைய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான என்.வி. நடராசன் அவர்கள் திறந்து வைத்துள்ளார்.

காவல்துறையினரின் கொடுமைகளால் கருச்சிதைவு ஏற்பட்டு நோயுற்று அதே காரணத்தால் உயிர் துறந்தார் என அவரது கல்லறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது கல்லறையை தொழிலாளர் நலத்துறை அமைச்சரான கா. இராசாராம் திறந்து வைக்க, அவரது படத்தை மணியம்மையார் திறந்து வைத்துள்ளார்.

1967 ஆம் ஆண்டு அமைந்த அறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த முதல் தாழ்த்தப்பட்ட சமூக பெண் அமைச்சரும், ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முன்னின்றவருமான அன்னை சத்யவாணி முத்துவின் கல்லறையும் இதே மூலக்கொத்தளம் சுடுகாட்டில் தான் உள்ளது. மேலும் சில ஆண் போராளிகளும் இங்குதான் நல்லடக்கம் செய்யபட்டுள்ளனர். இதற்கு காரணம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ராயபுரம் பகுதியும் முக்கிய பங்கு வகித்துள்ளது. மாதர் முற்போக்கு மன்றத்தின் பல பொதுக்கூட்டங்கள் இந்தப் பகுதியை சுற்றி நடந்துள்ளதை “விடுதலை”  உள்ளிட்ட நாளிதழ்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.

தந்தை பெரியாரின் வழிகாட்டுதலின் படி

படித்த பெண்கள், நடுத்தர வர்க்க பெண்கள், படிக்காத பெண்கள், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பெண்கள் என எல்லா தரப்பை சேர்ந்தவர்களும் இந்த மொழிப்போரில் கலந்துக் கொண்டனர். அதை அவர்கள் ஏதோ சாதாரணமாக நடத்தவில்லை. தந்தை பெரியாரின் வழிகாட்டுதலின் படி மிகவும் முறைப்படுத்தப்பட்ட வழியில், பெண்களை ஒருங்கிணைத்து சிறப்பான அமைப்பை நடத்தினர். பெண்கள் மீது அப்போது வைக்கப்பட்ட விமர்சனங்கள் மிக மோசமானவை. ராஜகோபாலாச்சாரியாரே குழந்தைகளுக்கு பால் வாங்க காசில்லாமல் இந்த பெண்கள் போராட்டம் செய்து குழந்தைகளோடு சிறைக்கு வருகின்றனர் என விமர்சித்தார். ஆனால் அதையெல்லாம் கண்டித்துவிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *