ஆர்.எஸ்.எஸ். தலைவரின் அபாயகரமான பேச்சு!

3 Min Read
- Advertisement -

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுப் பட்டாசுகள் வெடிப்பது,  அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கங்கள் குறித்து ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத் (ஆர்.எஸ்.எஸ்.) தலைவர் மோகன் பாகவத், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துகள் பெரும் விவாதத்தைக் கிளப்பி உள்ளன.

மகாராட்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தீபாவளி சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், பாரம்பரியம் மற்றும் பட்டாசுகளின் பயன்பாடு குறித்துப் பேசினார்.

அப்போது அவர் “பட்டாசுகளிலிருந்து எழும் புகை, பயிர்களைப் பாழ்படுத்தும், தீமை விளைவிக்கும் பூச்சிகளைக் கொல்கிறது. இதன் மூலம் சுற்றுச்சூழல் ஒரு வகையில் இயற்கையாகவே சுத்திகரிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார். மேலும், இந்த நிகழ்வின் பின்னணியில் அறிவியல் காரணங்களும் இருப்பதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இதேபோல், உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் நவம்பர் 11-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத், தீபாவளி கொண்டாட்டங்கள், காற்று மாசுபாடு குறித்துப் பேசினார்.

அவர் தனது உரையில், “பட்டாசுகளால் ஏற்படும் மாசுபாடு தற்காலிகமானது; அது தானாகவே குறைந்து சரியாகிவிடும், அது ஒரு பெரிய பிரச்சினை அல்ல; அரசு பட்டாசுகளுக்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை; மக்கள் உற்சாகத்துடன் பட்டாசுகளை வெடித்துத் தீபாவளியைக் கொண்டாட வேண்டும்” என்று கூறினார். அயோத்தியில் நடைபெற்ற கொண்டாட்டங்களில் தானும் பட்டாசுகளுடன் பங்கேற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர், “ஊழல் மூலம் ஒட்டுமொத்த அமைப்பையும் மாசுபடுத்தியவர்களைப் பற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால் மக்கள் ஒரு நாள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினால், திடீரென்று மாசுபாடு பெரிய பிரச்சினையாகி விடுகிறது” என்று விமர்சித்தார்.

தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்துள்ள சூழலில், இரு தலைவர்களும் பட்டாசு வெடிப்பதற்கு ஆதரவாகத் தெரிவித்துள்ள இந்தக் கருத்துகள் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளன.

ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு மக்களின் உயிர் வாழ்வைப் பற்றியோ, ஆரோக்கியமான வாழ்க்கையைப் பற்றியோ கவலை இல்லை.

ஹித்துத்துவா என்ற போதை ஒன்றுதான் அவர்களின் தலையில் குடியேறியிருக்கிறது; மற்றபடி அறிவியல் என்பது எல்லாம் ஒரு பொருட்டல்ல; அறிவியலுக்குத் தவறான விளக்கங்களைக் கூறுவதுதான் அவர்களின் அணுகுமுறை.

பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் கேடுகள் பற்றி அறிவியலாளர்கள், சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் மற்றும், மருத்துவர்கள் பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் பல்வேறு எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

நச்சு வாயுக்கள் சல்பர்டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு ஆகியவை அதிக அளவில் வெளியாகின்றன.

காற்றில் கலக்கும் PM25 போன்ற பட்டாசுகளில் உள்ள நுண் துகள்கள் நுரையீரலின் ஆழம் வரை சென்று சுவாசக் கோளாறு, ஆஸ்துமா, மூச்சுக் குழாய் அழற்சி நோய்களை உண்டாக்குகின்றன.

பட்டாசு வெடிப்பால் ஏற்படும் ஒலி மாசு ஆபத்தானது. பொதுவாக மனித காதுகளால் 60 முதல் 80 டெசிபல் வரையிலான ஒலியை மட்டுமே பாதுகாப்பாகக் கேட்க முடியும். ஆனால் பட்டாசு வெடிக்கும் போது 120 முதல் 140 டெசிபல் வரை ஒலி எழுப்பப்படுகிறது. இதனால் காது கேளாமை, செவிப்பறைப் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

நச்சுக்காற்றைச் சுவாசிப்பதால் இரத்த நாளங்களில் வீக்கம் ஏற்பட்டு, இரத்த அழுத்தம் அதிகம் ஏற்பட்டு மாரடைப்பு வரை கொண்டு செல்லும் ஆபத்து இருக்கிறது. இவற்றை எல்லாம் அலட்சியப்படுத்தி, மதவாதக் கண்ணோட்ட வெறியோடு ஆர்.எஸ்.எஸ். ‘பெரிய’ மனிதர்கள், பட்டாசு வெடிப்பதால் எந்தக் கேடும் இல்லை என்று கூறுவது சிறுபிள்ளைத்தனம் என்பதைவிட, மனித வாழ்வுக்கே அபாயமாகும். இதைக் குற்றச் செயலாகவே கருத வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *