சென்னை, நவ. 14- சென்னை அசோக் நகரில் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திருமாவளவன் நேற்று (13-11-2026) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் நிறுவப்படுகிற அந்த மைல் கற்களில் இந்தி கட்டாயமாக எழுதப்பட்டு வருவது அதிர்ச்சி அளிக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகள் இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை. ஆகவே அதில் இந்தி உட்பட மூன்று மொழிகளை எழுத வேண்டும் என்று கருதி அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலை முழுவதும் இந்தியையும் சேர்த்து எழுதி வருகிறார்கள்.
தமிழ்நாடு இருமொழி கொள்கையை கொண்ட ஒரு மாநிலம், அதற்கான சட்டமும் நடைமுறையில் இருக்கிறது. ஆகவே அதிகாரிகள் மாநில அரசின் கொள்கை மற்றும் சட்டத்தை பின்பற்றி தமிழ் மற்றும் ஆங்கிலத்தை மட்டுமே எழுத வேண்டும். ஆங்காங்கே பொறிக்கப்பட்டுள்ள இந்தி எழுத்துக்களை உடனடியாக அழிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் அரசு வழக் குரைஞர்கள் நியமனம் நடந்து வருகிறது, பெரும்பாலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் சமூக நீதி அதாவது இட ஒதுக்கீட்டு முறை நடைமுறைப்படுத்தியதாக தெரியவில்லை. அரசு வழக்குரைஞர், கூடுதல் அரசு வழக்குரைஞர் போன்ற பல பதவிகள் நிரப்பப்பட்டுள்ளன. இவற்றில் இட ஒதுக்கீட்டு சமூகங்களுக்கான வாய்ப்பு உறுதிப்படுத்தப்படவில்லை, நியமிக்கப்படவில்லை.
எனவே தமிழ்நாடு அரசு இதிலும் கவனம் செலுத்த வேண்டும். அரசு வழக்குரைஞர்கள் பதவியில் சமூக நீதியை நடைமுறைப்படுத்த வேண்டும். கோவையில் உள்ள பெரியார் அறிவுலகம் என்கிற நூலகத்தை மட்டுமில்லாமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள பொது நூலகங்களில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நூல்களை எல்லாம் ஆய்வு செய்ய வேண்டும்.
வரலாற்றுப் பிழைகள் மலிந்த நூல்களை கொள்முதல் செய்திருந்தால் அவற்றை எல்லாம் உடனடியாக அந்த நூலகங்களில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். அத்தகைய கொள்முதல் செய்த அதிகாரிகள் உள்ளிட்ட பதிப்பகத்தார் உள்ளிட்ட அனைவர் மீதும் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
இதையடுத்து கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “தவறு நடந்திருந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
