இஸ்ரேலில் புதிய ஆட்சி பிறக்கின்றது! – “பணத்தைக் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கிய அரபுக் கட்சிகள்” என்ற நெதன்யாகுவின் குற்றச்சாட்டு உண்மையா?

- Advertisement -

கி.இரா.

மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலின் அரசியல் களம் தற்போது வரலாறு காணாத உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. நீண்டகாலமாகப் பிரதமராகப் பதவி வகித்து வரும் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் ஆதிக்கத்திற்குச் சவால் விடும் வகையில், நாட்டின் அடுத்த அரசை அமைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவரும், ‘யஷார்’ (Yashar) கட்சித் தலைவருமான காடி அய்சன்கோட்டை அந்நாட்டு அதிபர் அய்சக் ஹெர்சாக் அதிகாரப்பூர்வமாக அழைத்துள்ளார்.

தொங்கு நாடாளுமன்றமும், அரசியல் குழப்பமும்!

கடந்த 27.10.2026 அன்று இஸ்ரேலில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் (கெசெட் – Knesset), எந்தவொரு கட்சியும் அல்லது கூட்டணியும் தனித்து ஆட்சியமைக்கத் தேவையான 61 இடங்கள் என்ற பெரும்பான்மை எல்லையை எட்டவில்லை. 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிலவிய இந்த இழுபறி நிலை அந்நாட்டு அரசியலில் பெரும் தேக்கத்தை ஏற்படுத்தியது.

தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி, மதவாதக் கூட்டணிக் கட்சிகள் மொத்தம் 53 இடங்களை மட்டுமே கைப்பற்றின. முன்னாள் ராணுவத் தளபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான காடி அய்சன்கோட்டின் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் மதச்சார்பற்றக் கூட்டணி 48 இடங்களை வென்றது. இதற்கிடையே, தேர்தலில் கணிசமான இடங்களை வென்ற அரபுக் கட்சிகளான ‘ராம்’ (Ra’am) மற்றும் ‘ஜாயிண்ட் லிஸ்ட்’ (Joint List) ஆகியவை ஒருங்கிணைந்து மொத்தம் 19 இடங்களைக் கைப்பற்றித் தேர்தல் களத்தில் முக்கிய சக்திகளாக உருவெடுத்துள்ளன. இஸ்ரேல் அரசியல் களத்தில் முக்கியமானதொருத் திருப்பமாகும்.

அரபுக் கட்சிகளின் ஆதரவும், ‘கிங்மேக்கர்’ வீழ்ச்சியும்!

பெரும்பான்மை பலம் யாருக்கும் கிடைக்காத இந்தச் சூழலில், எதிர்க்கட்சித் தலைவர் காடி அய்சன்கோட்டிற்கு அரபுக் கட்சிகளான ‘ராம்’ மற்றும் ‘ஜாயிண்ட் லிஸ்ட்’ கட்சிகள் தங்களது நிபந்தனையற்ற ஆதரவை அதிரடியாக வழங்க முன்வந்தன. இந்த அரபுக் கட்சிகளின் ஆதரவு மூலம் காடி அய்சன்கோட்டின் கூட்டணி பலம் பெரும்பான்மைக்குத் தேவையான 61-அய்த் தாண்டி 67 உறுப்பினர்களின் ஆதரவுடன் வலுவான பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக, அய்சன்கோட் எளிதில் ஆட்சியமைப்பதற்கான சூழல் பிரகாசமாகியுள்ளது.

நெதன்யாகுவுக்குக் கிடைத்தப் பேரிடி

பெஞ்சமின் நெதன்யாகுவின் நீண்டகாலக் கூட்டணிக் கட்சியான ‘யுனைடெட் தோரா ஜூடாயிசம்’ (United Torah Judaism) அவருக்கு ஆதரவளிக்கத் திடீரென மறுப்புத் தெரிவித்து – நெதன்யாகு முகாமுக்குப் பெரும் அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.தமது நீண்டகால அதிகாரப் பிடி நழுவிப்போவதைக் கண்டு ஆத்திரமடைந்த பிரதமர் நெதன்யாகு, அரபுக் கட்சிகள் வெளிநாட்டுப் பணத்தைப் பயன்படுத்தி வாக்குகளை விலைக்கு வாங்கி, தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இருப்பினும், இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ தேர்தல் குழு மற்றும் பார்வையாளர்கள் இந்தக் குற்றச்சாட்டை அடிப்படையற்றது என்று முற்றிலுமாக நிராகரித்துள்ளனர்.

அடுத்த கட்ட நடவடிக்கைகள், தேர்தல் முடிவுகள், கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களைப் பரிசீலித்த அதிபர் அய்சக் ஹெர்சாக், காடி அய்சன்கோட்டை அரசை அமைக்குமாறு முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, புதிய அமைச்சரவையை உருவாக்க காடி அய்சன்கோட்டுக்கு 28 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது; தேவையெனில் மேலும் 14 நாள்கள் வரை இந்த அவகாசத்தை நீட்டிக்கவும் வாய்ப்புள்ளது.

தேசிய ஒற்றுமை அரசாங்கம் அமையுமா?

ஒருவேளை அய்சன்கோட்டால் தனித்துப் பெரும்பான்மை அரசினை அமைக்க முடியாவிட்டால், பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் (Likud) கட்சியும், அய்சன்கோட்டின் அணியும் இணைந்து ஒரு ‘தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை’ (National Unity Government) சுழற்சி முறைப் பிரதமர் பதவி (Rotational Premiership) அடிப்படையில் அமைக்க வாய்ப்புள்ளது எனவும் கருதப்படுகின்றது.

அந்நிலையில் புதிய பிரதமருக்கு பெஞ்சமின் நெதன்யாகு ஒத்துழைப்புத் தருவாரா? என்பதும் முக்கியக் கேள்வி யாகும். ஏனெனில், பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேல் அரசியலில் மிக நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்திய ஒரு மூத்த தலைவர். அவர் தனது அரசியல் செல்வாக்கை எளிதில் விட்டுக் கொடுக்க விரும்பமாட்டார். புதிய பிரதமராக காடி அய்சன்கோட் அல்லது எதிர்க்கட்சிகள் பதவியேற்கும் பட்சத்தில் நெதன்யாகுவின் ஒத்துழைப்பு கீழ்க்கண்ட திட்டமிடல் அடிப்படையில்தான் அமையும்.

அரசியல் எதிர்ப்பு: நெதன்யாகு எதிர்க்கட்சி வரிசையில் அமர நேர்ந்தால், புதிய அரசாங்கத்தின் கொள்கைகளை, குறிப்பாக பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கைகளை கடுமையாக எதிர்ப்பார். நாடாளுமன்றத்தில் புதிய பிரதமரின் திட்டங்களை முடக்க தனது கட்சியை முழு பலத்துடன் பயன்படுத்துவார்.

அரசியல் பிழைப்புக்கான தந்திரங்கள்: ஒருவேளை தேசிய ஒற்றுமை அரசாங்கம் அல்லது கூட்டணிக் கட்டாயங்கள் உருவாகும் பட்சத்தில், தன் மீதான வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், தன் அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும் அவர் தற்காலிகமான மற்றும் கணக்கிடப்பட்ட ஒத்துழைப்பை வழங்கலாமே தவிர, மனப்பூர்வமாக புதிய தலைமையை ஏற்றுக்கொள்ள மாட்டார்.

நெதன்யாகு சிறை செல்வாரா?: பெஞ்சமின் நெதன்யாகு மீது மோசடி (Fraud), நம்பிக்கை மோசடி (Breach of Trust), லஞ்சம் வாங்கியது (Acceptance of Bribes) போன்ற தீவிர குற்றச்சாட்டுகளின் கீழ் ஜெருசலேம் மாவட்ட நீதிமன்றத்தில் ஊழல் வழக்குகள் நடைபெற்று வருகின்றன (குறிப்பாக வழக்கு எண்கள் 1000, 2000, 4000). இந்த வழக்கு விசாரணைகள் மற்றும் சாட்சி விசாரணைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டன.

நெதன்யாகுவின் சட்டப் போராட்டத்தின் நிலை: நீதிமன்றத் தீர்ப்பின்படி சிறைத் தண்டனை வாய்ப்பே நெதன்யாகுவிற்கு உள்ளது. இந்த வழக்குகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்குப் பல ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுவதற்கான சட்ட வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக லஞ்சம், நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டுகள் இஸ்ரேலியச் சட்டத்தின்படி கடுமையான தண்டனைக்குரியவை.

இஸ்ரேலிய சட்ட அமைப்பின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான பல வழிகளும் உள்ளதால், இந்த வழக்குகள் உச்ச நீதிமன்றம் வரை சென்று பல ஆண்டுகள் நீடிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, உடனடியாக அவர் சிறை செல்வாரா என்பது நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் மேல்முறையீட்டு முடிவுகளைப் பொறுத்தே அமையும்.

அரசியல் பாதுகாப்புக்கான சமரசப் பேச்சுகள்: நெதன்யாகு பிரதமராக அல்லது அரசியலில் தொடர்ந்து செல்வாக்குடன் இருக்கும் வரை சட்ட நடவடிக்கைகளைத் தாமதப்படுத்த முயற்சித்து வருவது தெளிவானதாகும். மேலும், அரசியல் ரீதியாக அவர் மீதான வழக்குகளில் இருந்துத் தப்பிக்க குற்ற ஒப்புதல் சமரசங்கள் அல்லது சிறப்புப் பாதுகாப்புப் பெறவுமான மறைமுக முயற்சிகளிலும் அவரது தரப்பு அவ்வப்போது ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில், நெதன்யாகுவின் அரசியல் காலம் கடுமையான சோதனைக் கட்டத்தை எட்டியுள்ளதுடன், அவர் மீதான ஊழல் வழக்குகளின் தீர்ப்பு இஸ்ரேலின் வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமையும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *