புதுடில்லி, நவ. 1- தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அமைச்சருக்கு கடிதங்களை எழுதி வருகிறார்.
இந்நிலையில், தலைநகர் டில்லியில் ஒன்றிய அமைச்சர் முரளிதரன் உடன் தி.மு.க. எம்.பி., டி.ஆர்.பாலு நேரில் சந்தித்தார். அப்போது, மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை ஒன்றிய அமைச்சரிடம் வழங்கினார்.
அந்தக் கடிதத்தில் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, மீனவர்களின் குடும்பத்தினரும் உடனிருந்தனர். கடிதத்தைப் பெற்றுக் கொண்ட ஒன்றிய இணை அமைச்சர் முரளிதரன், மீனவர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் என டி.ஆர்.பாலு தெரிவித்தார்.