மதுரை, நவ. 12- திண்டுக்கல் மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி குடிநீர்த் தொட்டி யில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட நிகழ்வு தொடர்பான வழக்கில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தர விட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், “மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் சுதந்திரமான குழு அமைத்து விசாரிக்க வேண்டும்; சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, இதுபோன்று மீண்டும் நிகழாமல் தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
முந்தைய விசாரணை யின் போது, பள்ளிகளில் குடிநீர்த் தொட்டி உள்ள பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவது குறித்து அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு முன் 10.11.2026 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், “பள்ளி மாணவர்களே குடிநீர்த் தொட்டியில் கழிவைக் கலந்ததற்கான காட்சிப் பதிவு ஆதாரங்கள் உள்ளன” எனக்கூறி நீதிமன்றத்தில் காட்சிப் பதிவு தாக்கல் செய்யப் பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட காட்சிப் பதிவு ஆதாரங்களை தடயவியல் சோதனைக்கு அனுப்பி விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களில் உடனடியாக கண்காணிப்புக் கேமராக் கள் பொருத்தப்பட வேண்டும்.
எத்தனைப் பள்ளிகளில் ஏற்கெனவே கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன, இன்னும் எத்தனை பள்ளிகளில் பொருத்தப்பட வேண்டி யுள்ளது, இதற்கு ஆகும் மொத்த திட்ட மதிப்பீடு எவ்வளவு என்பது குறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இதையடுத்து, வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
