செர்னோபில் அணு உலை விபத்து நடந்த பகுதியில் நாய்கள் தனிமைப்படுத்திக்கொண்ட குழுவாக வாழ்கின்றன. அவற்றில் கதிர்வீச்சால் மரபணு மாற்றம் ஏற்பட்டது பற்றி நடந்த ஆராய்ச்சி முடிவுகள் அண்மையில் வெளியாகி உள்ளது.
இந்நாய்கள் நாள்பட்ட கதிர்வீச்சு மாசு பகுதியில் வாழ்வதால் அவற்றின் மரபணு எவ்வகையான தாக்கத்திற்கு உள்ளானது என்பதை ஆராயபட்டது
அந்த ஆய்வு இப்பகுதி நாய்களில் மரபணுத் தேர்வு நடந்துள்ளதற்கான தடயங்களை கண்டறிந்துள்ளது.
ஏன் செர்னோபில்?
செர்னோபில் அணு உலை அப்போதைய சோவியத் யூனியனின் பகுதியாக இருந்த இன்றைய உக்ரைன் நாட்டின் வைஸ்ஹொராடு பகுதியில் இயங்கி வந்தது. 1986இல் நடந்த விபத்தில் அணு உலை வெடிப்பு ஏற்பட்டதால் செயல்பாடு நிறுத்தப்பட்டு கதிர்வீச்சு பரவல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
இந்த விபத்தில் உடனடியாக 31 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏற்பட்ட உயிரிழப்புகள் மறைமுகக் காரணிகள் என்பதால் உறுதியான எண்ணிக்கை தெரியவில்லை. கதிர்வீச்சு பாதிப்புகளால் அடுத்தடுத்த மாதங்களில் தைராய்டு புற்றுநோய் பாதிப்புக்கு 6000 பேரும் உள்ளாகினர். பாதிப்பு ஏற்பட்ட பகுதியான பிரிப்யட் நகரத்திலிருந்து 2000 ஆண்டு வரை 3,50,000 பாதிப்புகளால் இடம்பெயர்ந்துள்ளனர் என தகவலறிக்கைகள் தெரிவிக்கின்றனர்.
பாதிப்புக்குள்ளான பகுதியானது மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டு மனித குடியேற்றங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டன. 2000 ஆண்டுக்கு பிறகு அப்பகுதி வழிநடத்தப்பட்ட சுற்றுலாத் தளமாக மாற்றப்பட்டு சில லட்சம் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.
இந்நிலையில் கதிர்வீச்சு தாக்கங்கள் மரபணுவில் ஏற்படுத்தும் மாறுதல்கள் பற்றி நடக்கும் ஆய்வில் அப்பகுதியிலேயே தொடர்ந்து வாழும் விலங்குகள், தாவரங்கள் மீது நடத்தப்பட்டன.
தொடர் கதிர்வீச்சு தாக்கம் நீண்ட நாள் அளவில் மரபணுவில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி ஆய்வுகள் நடந்தன. இந்த ஆய்வுகள் கதிர்வீச்சு பாதிப்புகள் உயிரிகளின் உடலில் எந்த வகையான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை அறிய உதவும். செர்னோபில் விபத்து மனித வரலாற்றில் மிகப்பெரிய அணு உலை விபத்து என்பதால் ஆய்விற்கு இப்பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஆய்வு
வடக்கு கரோலின மாகாணப் பல்கலைக்கழகத்தின், கால்நடை மருத்துவப் பிரிவின், மூலக்கூறு உயிரி மருத்துவ அறிவியல் துறையைச் சேர்ந்த மெகன் டிலன் உள்ளிட்ட ஆய்வாளர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
செர்னோபில் ஒதுக்கப்பட்ட மண்டலத்தில் (CEZ) வசிக்கும் சுதந்திரமாக இனப்பெருக்கம் செய்யும் நாய்கள், நாள்பட்ட மாசுபட்ட நிலப்பரப்பில் இந்த கதிர்வீச்சு பாதிப்புகளை ஆராய்வதற்கு ஒரு தனித்துவமான, பல தலைமுறை மாதிரியை வழங்குகின்றன.
இக்குழுவின் முந்தைய ஆய்வு, செர்னோபில் ஒதுக்கப்பட்ட மண்டலத்திற்குள் புவியியல் ரீதியாக அருகருகே அமைந்துள்ள – ஆனால் வேறுபட்ட இரண்டு நாய்க் கூட்டங்களுக்கு இடையே குறிப்பிடத் தக்க மரபணு வேறுபாட்டைக் கண்டறிந்தது. இந்த ஆய்வு ஒதுங்கி வாழும் குழுவிற்குள் கடந்த 40 ஆண்டுகளில் ஏற்பட்ட மரபணு வேறுபாடுகளை பற்றியதாகும்.
அணுமின் நிலைய நாய்களின் மரபணுவில், நாள்பட்ட சுற்றுச்சூழல் அழுத்தங்களுக்கு ஏற்ப நிகழ்ந்த தகவமைப்புப் பரிணாமத்தின் தடயங்கள் உள்ளனவா என்பதே ஆய்வாளர்கள் சோதித்த கருதுகோள் ஆகும்.
இந்த வேறுபாடு இயற்கைத் தேர்வால் ஏற்பட்டதா, அல்லது தற்செயலான மரபணுச் சறுக்கலால் ஏற்பட்டதா என்பதைக் கண்டறிவது அவசியமானது. இதற்கு ஆய்வாளர்கள் இந்த அணு உலை பகுதிவாழ் நாய்களோடு அணு உலைக்கு அருகில் உள்ள நகரத்தில் உள்ள நாய்களின் மாதிரிகளை பெற்றனர். இந்த மாதிரிகள் அருகருகே வாழும் நாய்கள் குழு ஒரு தனித்துவமான சூழல் மாற்றத்தால் எவ்வகையாக மரபணு மாற்றம் பெறுகின்றன என்பதை அறிய முடியும்.
ஒப்பீட்டுக்காக, ஏற்கெனவே வெளியிடப்பட்ட தரவுகளிலிருந்து போலந்து, ரஷ்யா ஆகிய கிழக்கு அய்ரோப்பிய நாய்களும், பசிபிக் பெருங்கடலில் ஈக்வடாருக்குச் சொந்தமான கலபகோஸ் தீவு நாய்களும் சேர்க்கப்பட்டன. கலபகோஸ் நாய்களும் நீண்டகாலத் தனிமையில் வாழ்ந்தவை, ஆனால் அங்கு மாசு இல்லை. எனவே தனிமை மட்டுமே இந்த வேறுபாட்டை விளக்குமா என்று சோதிக்க அவை உதவின.
மரபணுத் தேர்வா?
அணுமின் நிலைய நாய்கள் மற்ற எல்லாக் குழுக்களிடமிருந்தும் அதிகம் வேறுபட்டன. கலபகோஸ் தீவு நாய்களுடன் அவற்றின் மரபணு வேறுபாடு (FST) 0.071 முதல் 0.077; நகர நாய்களுடன் 0.039. நகர நாய்கள் அய்ரோப்பிய நாய்களுடன் (0.018 முதல் 0.021) மிக நெருக்கமாக இருந்தன. அணுமின் நிலையத்தில் வசிக்கும் நாய்களில் குறிப்பிட்ட குரோமோசோம்களில் (chromosomes) தேர்வின் தடயங்கள் தெரிந்தன. இவைகளுக்கும் நகர நாய்களுக்கும் இடையிலான இந்த வேறுபாடு இயற்கைத் தேர்வால் (natural selection) வந்ததா, அல்லது தற்செயலான மரபணுச் சறுக்கலால் (genetic drift) வந்ததா என்பதே ஆய்வின் முக்கிய அம்சமாகும். சறுக்கல் பொதுவாகச் சிறிய, தனிமைப்பட்ட குழுக்களில் வலுவாக இருக்கும்.
ஆனால் இந்த இரு குழுக்களின் பயனுறு மக்கள்தொகை(effective population size) அளவில் பெரிதாக வேறுபாடு இல்லை. அணுமின் நிலைய நாய்களின் மரபணுப் பன்முகத்தன்மை (genetic diversity) குறையவில்லை. தனிமையில் வாழும் கலபகோஸ் தீவு நாய்களிடமும் இவ்வளவு வேறுபாடு காணப்படவில்லை.
மேலும், வேறுபாடு எல்லா குரோமோசோம்களிலும் சமமாக இல்லை; 8, 26, 27ஆம் குரோமோசோம்களில் அதிகமாக இருந்தது. 1,138 மரபணுப் புள்ளிகள் வழக்கத்துக்கு மாறாக அதிக வேறுபாடு காட்டின. அவற்றில் 111 பகுதிகள் குறைந்தது மூன்று பகுப்பாய்வுகளால் உறுதிப்படுத்தப்பட்டன.
அவற்றின் அருகிலுள்ள மரபணுக்கள் டிஎன்ஏ பழுது நீக்கம் (DNA repair), நோய் எதிர்ப்புச் செயல்பாடு (immune response), புற்றுநோய் (cancer) ஆகியவற்றுடன் தொடர்புடையவை. எனவே சறுக்கல் மட்டும் காரணமல்ல என்பதும், தேர்வுக்கு ஒத்த தடயங்கள் உள்ளன என்பதும் ஆய்வின் முடிவாகும்.
இதற்கான தீர்க்கமான காரணங்கள் கதிர்வீச்சா, கன உலோகங்களா(heavy metals), பிற காரணிகளா என்பது மேலும் ஆய்வுக்குட்பட்டது. வெறும் 63 நாய்களே ஆராயப்பட்டதால், மேலும் உறுதிப்படுத்தல் தேவை என ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– மகேஸ்வரன் ப
