மூடப் பண்டிகைகள் அறிவையும், பொருளையும், காலத்தையும் காவு வாங்குவதோடு நிற்பதில்லை. தொடர்ச்சியாக மனித உயிர்களையும் பலி வாங்குகிறதே என்பதை நினைத்தால் குருதி கொதிக்கிறது.
அதுவும் ‘தீபாவளி’ என்ற பண்டிகைக்காக கூறப்படும் புராண அளப்புகள் திராவிட இனத்தை இழிவுபடுத்துவது ஒருபுறம் இருக் கட்டும்; கேளிக்கை என்ற பெயரால் பட்டாசு, வாண வேடிக்கை ஆட்ட பாட்டமெல்லாம் சொல்லுந்தரமன்று.
தேனியில் பட்டாசுக் கடையில் தீப்பற்றி அடுத்தடுத்து கடைகளில் தீவிபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலூரில் பட்டாசு வெடித்து கல்லூரி மாணவர் உயிரிழந்த நிலையில் மீண்டும் ஒரு வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்ட மேலூரில், வாங்கி வைத்திருந்த பட்டாசுகள் திடீரென வெடித்துச் சிதறியதில் கல்லூரி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.தீபாவளி கொண்டாட நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்த மாணவரும் அவரது தாயாரும் பலத்த காயத்தோடு மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சோகத்தின் வடு மறைவதற்குள்ளேயே, தற்போது தேனியில் மீண்டும் ஒரு பட்டாசு விபத்து நிகழ்ந்துள்ளது. தேனி காமாட்சிபுரத்தில் செயல்பட்டு வந்த பட்டாசுக் கடை ஒன்றில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றி, உள்ளே இருந்த பட்டாசுகள் சங்கிலித் தொடர் போல் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. கடையிலிருந்து கரும்புகை சூழ்ந்து பட்டாசுகள் நாலாபுறமும் வெடித்ததால்,அருகில் இருந்த கடைகளிலும் தீவிபத்து ஏற்பட்டது அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அலறியடித்தபடி வெளியே ஓடினர்.
இப்படி, ஒவ்வொரு ஆண்டும் விபத்துகளும், உயிர்ப் பலிகளும் தொடர்ச்சியாக நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
2024ஆம் ஆண்டு தீபாவளியின் போது, பட்டாசு வெடித்த விபத்துகளில் படுகாயமடைந்து 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இதில் குறிப்பாக சென்னையில் மட்டும் மருத்துவமனை அறிக்கையின் படி 4 சிறுவர்களுக்குக் கண் பார்வை பறிபோன நிகழ்வு நடந்துள்ளது அரசு சாரா சேவை நிறுவனங்களான அரவிந்த், சங்கர நேத்ராலயா மற்றும் தமிழ்நாடு அரசு கண் மருத்துவமனை அறிக்கைகளின்படி தமிழ்நாடு முழுவதும் 18 சிறார்கள் பார்வை இழந்துள்ளனர்.
2025ஆம் ஆண்டு தீபாவளியின் பட்டாசு விபத்துகளால் 81 பேருக்குக் கண் பார்வையில் கடுமையான பாதிப்பும் இழப்பும் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் மட்டும் தீபாவளி அன்று 39-க்கும் மேற்பட்டோர் கண் காயங்களுடன் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள். பட்டாசு விபத்துகளில் கண் பார்வை இழப்பிற்கு ஆளாவோரில் 50%-க்கும் அதிகமானோர் சிறுவர்களும், பட்டாசு வெடிப்பதைப் பக்கத்தில் நின்று வேடிக்கைப் பார்த்த பார்வையாளர்களுமே ஆவர்.
பட்டாசு வெடிக்கும் போது அதிலிருந்து எழும் வெடிமருந்துத் துகள்கள் மற்றும் கூர்மையான பிளாஸ்டிக்/காகிதத் துகள்கள் நேரடியாகக் கண்களைத் தாக்குவது. சூடான புகை கண்களைத் தாக்குவது உள்ளிட்ட காரணத்தால் இந்த கோர நிகழ்வு நடக்கிறது.
இவை அல்லாமல் சுற்றுச்சூழல் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றது.
சென்னையில் நேற்று காற்று மாசு அளவு 1,463 அய்க் கடந்தது. (ஆரோக்கியமான அளவு என்பது 50க்குள் தான் இருக்க வேண்டும்.) அதில் நச்சுத் துகள்களை நுரையீரலுக்குள்ளும், இரத்தத்திலும் கலக்கத்தக்க பி.எம். 2.5 அளவு 800 மைக்ரோ கிராம்/கியூபிக் மீட்டர் என்னும் அளவில் இருந்தது. அபாயகரமான அளவில் உலகின் மோசமான காற்று மாசு கொண்ட நான்காவது நகரமாக இருந்தது.
விழாக்கள் விவேகத்துடனும், விபரீதம் இல்லாமலும் இருக்க வேண்டாமா? உயிருக்கும் – உடைமைக்கும், அறிவுக்கும் எதிரான விளைவை உருவாக்கும் விழாக்கள் தேவைதானா? விளைவையறிந்து விரைந்து முடிவெடுத்து அரசு தடை போட வேண்டாமா?
